📅 Tuesday, 15 September 2026 IST | ஆவணி 30, பராபவ வருடம்
Tamilzha Alt Logo Text சார்பற்ற நடுநிலைச் செய்திகள்
முக்கிய செய்திகள்
Health September 15, 2026 01:33 AM

எதிர்காலத் தலைமுறையினர் அறியவேண்டிய நம் மூத்தோரின் கதைகள்

எதிர்காலத் தலைமுறையினர் அறியவேண்டிய நம் மூத்தோரின் கதைகள்

கடந்த 1950கள் முதல் 1970கள் வரையிலான காலகட்டத்தில் நாட்டின் வளர்ச்சியிலும் கட்டமைப்புப் பணிகளிலும் நேரடியாகப் பங்கேற்று வாழ்ந்த மூத்த தலைமுறையினரின் அனுபவங்களைப் பதிவுசெய்ய நிறுவியோர் நினைவக மூத்தோர் ஈடுபாட்டுத் திட்டம் என்ற நிகழ்ச்சி உதவியது.

தமிழ் முரசு நாளிதழ், தேசிய மரபுடைமைக் கழகத்துடன் இணைந்து ஏற்பாடு செய்த இந்நிகழ்ச்சி, நிறுவியோர் நினைவகத்தின் ‘குடிமக்கள் திட்டப்பணி - ஒரு மில்லியன்’ (Founders’ Memorial Citizen Programme) இயக்கத்திற்கு ஆதரவாக நடத்தப்பட்டது.

சனிக்கிழமை (செப்டம்பர் 12) காலை 10 மணி முதல் பிற்பகல் 1 மணி வரை கல்சா சங்கத்தில் நடைபெற்ற இந்நிகழ்ச்சி சிங்கப்பூர்த் தமிழ்ச் சமூகத்தின் மூத்த உறுப்பினர்களை ஒன்றுதிரட்டியது.

நாடு கட்டமைக்கப்பட்ட காலத்தில் மூத்த தலைமுறையினர் எதிர்கொண்ட சவால்கள், வெற்றிகள், அன்றாட வாழ்க்கைப் பதிவுகளை ஆவணப்படுத்துவதை முக்கிய நோக்கமாகக் கொண்டு இந்நிகழ்ச்சி வடிவமைக்கப்பட்டிருந்தது.

நிகழ்ச்சியின் தொடக்கமாக, ஊடகத்துறையில் நெடுநாள் அனுபவம் கொண்ட திரு செ.ப.பன்னீர்செல்வமும் திரு முகமது அலியும் பங்கேற்ற சிறப்புக் கலந்துரையாடல் நடைபெற்றது. சிங்கப்பூரின் தொடக்ககால வளர்ச்சி, ஊடகத் துறையின் பங்கு, நாடு சுதந்திரம் பெற்ற காலத்தில் தாங்கள் பெற்ற அனுபவங்கள், நினைவுகள் போன்றவற்றை இருவரும் பங்கேற்பாளர்களிடம் பகிர்ந்து கொண்டனர்.

பேச்சாளர்கள் இருவரும் அவர்களது நினைவுகளைப் பகிர்ந்துகொள்ளும் வேளையில், பங்கேற்பாளர்கள் ஆர்வத்தோடு பதிலளித்து கலந்துரையாடலில் ஈடுபட்டனர்.

இந்நிகழ்ச்சியில் பங்கேற்ற மூத்த குடிமக்கள் தங்கள் நினைவுகளையும் அனுபவங்களையும் பதிவு செய்யும் நடவடிக்கைகளில் ஈடுபட்டனர். பள்ளி, வேலை, சமூகம், நாட்டின் சுதந்திரத்தால் ஏற்பட்ட வாழ்க்கை மாற்றங்கள் தொடர்பான தலைப்புகளில் ஒன்றைத் தேர்ந்தெடுத்து அவர்கள் தங்களின் கதைகளை எழுதினர்.

கடந்தகால, நிகழ்காலச் சிங்கப்பூர் குறித்த நினைவுகளை அடிப்படையாகக் கொண்டு அஞ்சல் அட்டைகளை அலங்கரித்ததுடன், வருங்காலச் சந்ததியினருக்குக் கடத்த விரும்பும் செய்திகளையும் அவர்கள் அதில் எழுதினர்.

இவையும் உங்களுக்குப் பிடிக்கலாம்

பங்கேற்பாளர்கள் எழுதிய கதைகள், அஞ்சல் அட்டைச் செய்திகள் அவர்களின் சொந்தக் குரலிலேயே ஒலிப்பதிவு செய்யப்பட்டன. ஆவணப் பதிவிற்காக அவர்களின் புகைப்படங்களும் எடுக்கப்பட்டன.

இன்றைய நிகழ்ச்சியில் சேகரிக்கப்பட்டுத் தேர்ந்தெடுக்கப்படும் பதிவுகள், 2028ல் நிறுவியோர் நினைவகம் திறக்கப்படும்போது அதன் கண்காட்சிகள், மின்னிலக்க ஆவணக் காப்பகங்களில் இடம்பெறக்கூடும்.

“பல நாள்களுக்குப் பிறகு, பழைய அனுபவங்களை நினைவுகூர்ந்து அவற்றை அடுத்த தலைமுறையினர்க்காகப் பகிர்ந்துகொள்வது நெகிழ்ச்சியாக இருந்தது,” என்றார் நிகழ்ச்சியில் பங்கேற்ற இளங்கோவன் குமுதவல்லி, 77.

தொடர்ந்து குடும்பத்தைப் பராமரிப்பதிலேயே நேரத்தைச் செலவிட்டு வரும் முதியவர்களுக்கு இந்நிகழ்ச்சி மனத்திற்கு அமைதியையும் புத்துணர்ச்சியையும் தந்ததாக 65 வயது ஃப்லோரன்ஸ் ஆன்டனி கூறினார்.

“நமது பாரம்பரியத்தையும் அனுபவங்களையும் அடுத்த தலைமுறைக்குக் கடத்துகிறோம் என்ற எண்ணம் மிகுந்த மனநிறைவை அளிக்கிறது, “ என்றும் அவர் குறிப்பிட்டார்.

பழைய நண்பர்களைச் சந்திக்கவில்லை என்றாலும் புதிய நட்புகளை உருவாக்க இந்நிகழ்ச்சி உதவியது என்றும் தன்னைவிட மூத்தவர்கள் பலரைச் சந்தித்து அவர்களது அனுபவங்களைக் கேட்டறிய முடிந்தது என்றும் ரா. தனபால், 74, பகிர்ந்துகொண்டார்.

சிங்கப்பூரின் பழங்காலக் கதைகளை நினைவுகூர்ந்த முன்னோடிகள்

முதன்முதலில் சிங்கப்பூரில் லிட்டில் இந்தியாவாகக் கருதப்பட்ட தஞ்சோங் பகார், தமிழர்கள் அதிகம் வாழ்ந்துவந்த ஜாலான் காயு வட்டாரம், தமிழ்ப் பள்ளிகள், ஊடகத் துறையின் வளர்ச்சி, மறைந்த தமிழர்களின் தொழில்கள் எனப் பல்வேறு கதைகளை நினைவுகூர்ந்தார் மூத்த ஊடகவியலாளர் செ.ப.பன்னீர்செல்வம்.

சனிக்கிழமை (செப்டம்பர் 12) கல்சா சங்க வளாகத்தில் நடைபெற்ற ‘உங்கள் நினைவுகளைப் பகிர்ந்திடுங்கள், நம் நாட்டு நிர்மாணம், சிங்கப்பூர்க் கதையைப் பாதுகாப்போம்’ என்ற பகிர்வு நிகழ்ச்சியில் அவர் அக்கதைகளைப் பங்கேற்பாளர்களிடம் பகிர்ந்துகொண்டார்.

தஞ்சோங் பகார் பழங்காலத்தில் முக்கியக் கலாசார மையமாகக் கருதப்பட்டது என்றார் அவர். நீலாம்பிகை தமிழ்ப் பள்ளி, உமறுப் புலவர் தமிழ்ப் பள்ளி போன்ற முக்கியத் தமிழ்க் கல்வி நிலையங்கள் தஞ்சோங் பகாரில் அமைந்திருந்தன.

அத்தகைய தமிழ்ப் பள்ளிகள் சிங்கப்பூரின் முதல் சில தலைமுறையினரின் கல்வியில் இன்றியமையாத பங்கு வகித்ததாக அவர் குறிப்பிட்டார்.

தமிழ் ஊடகத் துறையின் வளர்ச்சிக்குத் தமிழ் முரசு, பிற்பகல் நேரப் பத்திரிகையாக இயங்கிய தேச தூதன், இளையர்களுக்கான மாணவர் மணிமன்றம், சிங்கப்பூர்த் தமிழ் வானொலி ஆகியவை முக்கியப் பங்களித்துள்ளன என்றும் அவர் கூறினார்.

அக்காலத்தில் பல புகழ்பெற்ற நாடகங்கள் வானொலியில் படைக்கப்பட்டதை அவர் நினைவுகூர்ந்தார்.

காலப்போக்கில் பல தமிழ்ப் பாரம்பரியப் பணிகள் மறைந்துபோனதை எண்ணித் திரு பன்னீர்செல்வம் கவலையுற்றார்.

அம்மி கொத்துதல், தச்சு வேலை, கைச்சலவை போன்ற பல்வேறு பணிகள் தற்போது மறைந்து போயின.

தமிழர்களின் மற்றொரு பாரம்பரியப் பணியான மாட்டுப் பண்ணை நிர்வாகம், பால் வியாபாரம் ஆகியவை அக்காலத்தில் செயின்ட் ஜார்ஜஸ் சாலை, டவுன்ஷெண்ட் ரோடு, பிளான்டேஷன் அவென்யூ, இயோ சூ காங் போன்ற வட்டாரங்களில் அதிகம் நடந்து வந்ததாக அவர் சொன்னார்.

தமிழர்கள் 1960களில் அதிகம் கூடி, கலாசார விழாக்களைக் கொண்டாடும் இடமாக கம்போங் பாரு விளங்கியது என்றும் முதல் திருக்குறள் விழா அங்குதான் நடந்தது என்றும் அவர் பகிர்ந்துகொண்டார்.

தமிழர்கள் மட்டுமன்றி தென்னிந்தியர்கள் பலர் அக்காலத்தில் அரச ஆகாயப் படையிலும் (Royal Air Force) பொதுப்பணித்துறையிலும் (PWD) பணியாற்றி வந்ததால் அவர்கள் செம்பவாங், சாங்கி வட்டாரங்களில் அதிகம் வசித்து வந்தனர்.

புக்கிட் பாஞ்சாங், ஜாலான் காயு வட்டாரங்களிலும் தமிழர்கள் பலர், குறிப்பாகத் திருநெல்வேலி மக்கள் வாழ்ந்துவந்ததாக அவர் கூறினார்.

“அக்காலக்கட்டத்தில் தமிழர்கள் மட்டுமன்றி தென்னிந்தியர்கள் அனைவரும் நன்றாகத் தமிழ் பேசுவார்கள். அவர்கள் அனைவருக்கும் தென்னிந்திய மொழிகள் அனைத்தும் புரியும். அவர்களுக்கிடையே சிறப்பான இணக்கம் இருந்தது,” என்றார் அவர்.

பொங்கல் போன்ற பல்வேறு கலாசாரக் கொண்டாட்டங்களை அனைத்து இனத்தவரும் இணைந்து கொண்டாடியது நினைவிருப்பதாக அவர் குறிப்பிட்டார்.

மக்களின் கதைகள்

ஜாலான் காயு வட்டாரத்தில் பிறந்து வளர்ந்த முன்னாள் தமிழாசிரியர் ர. கலாவிற்கு அக்கால நினைவுகள் பசுமரத்தாணிபோல் பதிந்துள்ளன.

“அக்காலத்தில் அனைவரது வீட்டின் கதவுகளும் திறந்துதான் இருக்கும். அண்டைவீட்டார் அனைவரது வீடுகளுக்கும் சென்று வருவோம்.

“இன, சமய பேதங்கள் எதுவும் இல்லாமல் வளர்ந்த காலம் அது. இன்றளவும் நாங்கள் அனைவரும் தொடர்பில் இருந்து எங்கள் நினைவுகளை ஆண்டுக்கு ஒருமுறை கொண்டாடுகிறோம்,” என்றார் அவர்.

வசதிகள் பெரிதும் இல்லையெனினும் மகிழ்ச்சி நிறைந்த காலமாக அது தமக்கு அமைந்ததாக அவர் குறிப்பிட்டார்.

1965ஆம் ஆண்டு சிங்கப்பூரில் நடந்த ஒரு கலவரத்தின்போது தமது தந்தையுடன் காவல் அதிகாரிகளுக்கு உணவு வழங்கி உதவியதைப் பகிர்ந்து கொண்டார் 75 வயது முஹம்மது மீரான்.

“அக்காலத்தில் என் தந்தை காவல் நிலையங்களில் உணவுக் கடைகளை இயக்கி வந்தார். அப்போது எதிர்பாரா விதமாக நடந்த கலவரங்களின்போது அதிகாரிகளுக்கு உணவு வழங்கும் சூழல் ஏற்பட்டது.

“18 வயதில் அத்தகைய சூழலில் சென்று அவர்களுக்கு உணவு வழங்கியதை இன்றளவும் மறக்க முடியவில்லை,” என்று அவர் கூறினார்.

இயோ சூ காங் வட்டாரத்தில் அமைந்திருந்த குளம் ஒன்றில் குளிப்பது தமது இளமைக் காலத்தின் முக்கிய நடவடிக்கையாக விளங்கியதெனக் கூறினார் 74 வயது யு.கா.லீலாவதி.

“நான் வசித்துவந்த அவ்வட்டாரத்தில் இருந்த குளம் தூய்மையாக இல்லையெனினும் அதில் குளிப்பதுதான் அதிக ஆனந்தத்தைத் தந்தது. இன்று இருக்கும் பல வசதிகள் அன்று இல்லை.

“மின்சாரம், தண்ணீர், சுகாதாரம் என அனைத்துமே அப்போது சற்றுக் குறைவாக இருந்தாலும் மனிதர்களிடையே பிணைப்பு வலுவாக இருந்தது,” என்று அவர் சொன்னார்.

அக்காலத்தின் கல்வி முறை மாணவர்களைச் செம்மைப்படுத்த ஏதுவாக இருந்ததெனக் கருதுகிறார் முன்னாள் தமிழாசிரியர் ரா.துரை மாணிக்கம்.

“நான் என் மாணவர்களிடம் கூறுவது என்றும் ஒன்றுதான். ஆங்கிலம் வானில் பறப்பதற்கு, தமிழ் தரையில் நடப்பதற்கு. இரண்டும் மிக முக்கியம். மாணவர்களுக்கு அதன் முக்கியத்துவத்தை அன்று புகட்ட முடிந்த அளவிற்கு இன்று செய்ய முடியவில்லை,” என்று அவர் வருந்தினார்.

இத்தகைய நிகழ்ச்சிகள் எதிர்காலத் தலைமுறையினருக்குக் கடந்தகாலக் கதைகளைக் கடத்திச் செல்வதற்கு மிகவும் முக்கியம் என்று திரு பன்னீர்செல்வம் வலியுறுத்தினார்.

அவருடனான கலந்துரையாடல் அங்கத்தை வழிநடத்திய ஊடகப் பிரபலம் திரு முகம்மது அலி, “நாம் தொடர்ந்து எங்குச் செல்ல வேண்டுமென்று அறிய, நாம் எங்கிருந்து வந்துள்ளோம் என்பதை அறிவது அவசியம்,” என்று குறிப்பிட்டார்.

ஸ்ரீ வைராவிமட காளியம்மன் கோயிலுடனான நீண்டகாலப் பிணைப்பைப் பகிர்ந்துகொண்ட பக்தர்

தோ பாயோவில் அமைந்துள்ள ஸ்ரீ வைராவிமட காளியம்மன் கோயில், முன்பு சாமர்செட் வட்டாரத்தில் இருந்த காலத்திலிருந்தே விநியோக வாகன ஓட்டுநர் சேகர் நாயுடுக்கு அக்கோயிலுடன் அணுக்கமான பிணைப்பு இருந்துவருகிறது.

1982ஆம் ஆண்டு அக்கோயில் இடமாற்றம் செய்யப்பட்டபோது அவருக்கு 12 வயது. அந்த இளம் வயது முதலே குடும்பத்தின் அனைத்து மங்கல நிகழ்ச்சிகளுக்கும் அங்குச் செல்வது அவரது வழக்கம்.

“ஆலயம் இடமாற்றம் செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டவுடன் என் தந்தை, குடும்பத்தின் பிற உறுப்பினர்கள் என அனைவரும் அழுது, மனமுடைந்து போயினர். ஆனால், அம்மனுக்கு வேறு ஓர் இடம் கிடைத்தது அவர்களுக்கு மனநிம்மதி அளித்தது,” என்று அவர் கூறினார்.

அந்தக் காலக்கட்டத்தில் ஆலயத்தில் பணிபுரிந்த பண்டாரத்திற்கும் தம் குடும்பத்திற்கும் அணுக்கமான உறவு இருந்ததாகவும் அவர் குறிப்பிட்டார்.

“ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் அவர் எங்கள் வீட்டிற்கு வந்துவிடுவார். அவருடன் ஒரு வேளை உணவு உண்டு மகிழ்வோம்,” என்றார் சேகர் நாயுடு.

அந்தக் கோயிலின்மீது அத்தகைய அன்பு கொண்டிருந்ததால் தமது திருமணத்தையும் ஸ்ரீ வைராவிமட காளியம்மன் கோயிலிலேயே செய்துகொண்டதாக அவர் கூறினார்.

“எங்கள் வீட்டில் பிறந்தநாள், திருமண நாள் என எதுவாக இருந்தாலும், அந்த ஆலயத்திற்குத்தான் செல்வோம்,” என்றார் அவர்.

தற்போது பீஷானில் வசித்துவரும் அவர் இப்போதும் தொடர்ந்து ஸ்ரீ வைராவிமட காளியம்மன் கோயிலுக்குச் சென்று வழிபடுகிறார்.

புதிய கலைக்கூடம்

வரும் 2028ஆம் ஆண்டில் திறக்கப்படவிருக்கும் புதிய கலைக்கூடமாகவும் தோட்ட அனுபவமாகவும் அமையவிருக்கும் நிறுவியோர் நினைவகம் சிங்கப்பூரர்களுக்காக, சிங்கப்பூரர்களால் உருவாக்கப்படும் ஒரு நினைவிடமாக உருவெடுத்து வருகிறது. இது சுதந்திர சிங்கப்பூரின் வரலாற்றை, குறிப்பாக 1950கள் முதல் 1970கள் வரையிலான காலகட்டத்தைப் படம்பிடித்துக் காட்டும்.

சிங்கப்பூரின் முதல் தலைமுறை மூத்த குடிமக்களின் வரலாற்றுச் சிறப்புமிக்க கதைகள் நிறுவியோர் நினைவகத்தால் வழங்கப்படுகின்றன. இது குறித்த கூடுதல் விவரங்களை அறியவும் ஆதரவு அளிக்கவும் www.foundersmemorial.gov.sg என்ற இணையத்தளத்தை நாடலாம்.