📅 Tuesday, 15 September 2026 IST | ஆவணி 30, பராபவ வருடம்
Tamilzha Alt Logo Text சார்பற்ற நடுநிலைச் செய்திகள்
முக்கிய செய்திகள்
Tamil Nadu September 15, 2026 03:33 AM

 தனியார் ஒப்பந்த பஸ்களை இயக்க அரசு தவறியதால் பயணியர் அவதி

 தனியார் ஒப்பந்த பஸ்களை இயக்க அரசு தவறியதால் பயணியர் அவதி

சென்னை: சென்னையில் இருந்து, போதிய அளவில் தனியார் பஸ்கள் இயக்க, தமிழக அரசு ஏற்பாடு செய்யாததால், வெளியூர் செல்லும் மக்கள் பஸ்சுக்காக, நீண்ட நேரம் காத்திருந்து, நெரிசலில் சிக்கி அவதிப்பட்டனர்.

பண்டிகை, தொடர் விடுமுறை நாட்களில், தேவைக்கு ஏற்ப தனியார் பஸ்களை இயக்கும் முறையை, தமிழக அரசு போக்குவரத்து துறை மேற்கொண்டு வருகிறது.

கடந்த ஆட்சியில், சென்னையில் இருந்து, விழுப்புரம், திருவண்ணாமலை, திருச்சி, மதுரை, திருநெல்வேலி, தஞ்சாவூர், கும்பகோணம், நாகப்பட்டினம், தேனி, ஈரோடு, சேலம் ஆகிய மாவட்டங்களில், தனியார் பஸ்கள் ஒப்பந்த அடிப்படையில் இயக்கப்பட்டன. ஒவ்வொரு முறையும், 70,000க்கும் மேற்பட்டோர் பயணம் செய்தனர்.

இந்த ஆண்டு விநாயகர் சதுர்த்தியையொட்டி, தொடர் விடுமுறையில், தனியார் பஸ்களை ஒப்பந்த முறையில் இயக்க, தமிழக போக்குவரத்து துறை நடவடிக்கை எடுக்கவில்லை.

இதனால், போதிய பஸ்கள் இல்லாமல், சென்னை கிளாம்பாக்கத்தில் கடந்த 12ம் தேதி, மக்கள் கடும் அவதிக்குள்ளாகினர். தாமதமாக வந்த பஸ்களில் பயணம் செய்து, நெரிசலில் சிக்கி சிரமப்பட்டனர்.

அடுத்து, ஆயுதபூஜை, தீபாவளி என பண்டிகை நாட்கள் வருவதால், பயணியர் வசதியை கருத்தில் வைத்து, தனியார் பஸ்களை ஒப்பந்த அடிப்படையில் இயக்க வேண்டும் என, பயணியர் சங்க நிர்வாகிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இது குறித்து, தமிழ்நாடு தனியார் பஸ் உரிமையாளர்கள் சம்மேளன செயலர் தர்மராஜ் கூறியதாவது:

தமிழகத்தில் கடந்த ஆட்சி காலத்தில், பண்டிகைகள், தொடர் விடுமுறை நாட்களில், அரசு போக்குவரத்து கழகங்களுக்கு தேவைப்படும் போது, தனியார் பஸ்கள் இயக்கப்பட்டன. ஒவ்வொரு முறையும், தமிழகம் முழுதும் 600க்கும் மேற்பட்ட பஸ்கள் இயக்கப்பட்டன.

ஒரு கி.மீ.,க்கு 52.40 ரூபாய் என்ற கட்டணத்தில் பஸ்கள் இயக்கப்பட்டன. இந்த முறையும் அதுபோ, பஸ்கள் இயக்க, தமிழக அரசிடம் வலியுறுத்தினோம்.

ஆனால், நடவடிக்கை எடுப்பதில் தாமதம் ஏற்பட்டது. எனவே, இனி வரும் பண்டிகை நாட்களில், பயணியர் நெரிசல் இன்றி பயணிக்க, தனியார் பஸ்கள் இயக்கும் வகையில், அரசு போக்குவரத்து கழகங்கள் ஒப்பந்தம் மேற்கொள்ள வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

தீபாவளி பயணத்துக்கு 17,000 டிக்கெட் முன்பதிவு அரசு விரைவு பஸ்களில், 90 நாட்களுக்கு முன்பே டிக்கெட் முன்பதிவு செய்யும் வசதி இருப்பதால், தீபாவளி பண்டிகையையொட்டி சொந்த ஊருக்கு செல்ல, பயணியர் ஆர்வமாக, 'டிக்கெட்' முன்பதிவு செய்து வருகின்றனர். வரும், நவ.,8ம் தேதி ஞாயிறு அன்று, தீபாவளி கொண்டாடப்படுகிறது. இதற்கு முந்தைய இரண்டு நாட்களுக்கு முன்பதிவு தொடங்கி, அரசு விரைவு பஸ்களில் இருக்கைகள் நிரம்பி வருகின்றன. இதுவரை 17,000 டிக்கெட், விரைவு பஸ்களில் முன்பதிவு ஆகியுள்ளன.வரும் நாட்களில் முன்பதிவு அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.