சிறுமிகளுக்கு முதலுதவி செய்ததை இழிவுபடுத்துவதா? மகேசுக்கு அமைச்சர் விஸ்வநாதன் எச்சரிக்கை
சென்னை: 'மயக்கமடைந்த சிறுமிகளுக்கு முதலுதவி செய்ததை, முன்னாள் அமைச்சர் மகேஷ் இழிவுப்படுத்தி, கோயபல்ஸ் பிரசாரத்தை மேற்கொண்டால், அதற்குரிய விளைவுகளை சந்திக்க நேரிடும்' என, உயர்கல்வித்துறை அமைச்சர் விஸ்வநாதன் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
அவரது அறிக்கை: லோக்சபா எதிர்க்கட்சி தலைவர் ராகுலின் 56-வது பிறந்தநாள் விழா, முதல்வர் விஜயின் 52-வது பிறந்தநாள் விழாவையொட்டி மதுரை, மேலுாரில், புகையிலை, மது, கஞ்சா உள்ளிட்ட போதைப் பொருட்கள் மற்றும் பெண்கள் மீதான பாலியல் குற்றங்களுக்கு எதிராக, விழிப்புணர்வு மாரத்தான் போட்டி நடத்தப்பட்டது.
இதில், நுாற்றுக்கணக்கான மாணவ - மாணவியர் 4 கி.மீ., துார மாரத்தானில் பங்கேற்றனர். கடும் வெயில் காரணமாக, சிலர் மயக்கமடைந்து கீழே விழுந்தனர். அந்த சிறுமிகளை மனிதாபிமான உணர்வோடு, தொட்டு துாக்கி, மயக்கத்தை போக்க, தண்ணீர் தெளித்து முதலுதவி செய்தேன். இதற்கு பள்ளிக்கல்வித் துறை முன்னாள் அமைச்சர் மகேஷ், உள்நோக்கம் கற்ப்பிக்கிற வகையில் இழிவுபடுத்தி, தி.மு.க., - ஐ.டி., அணியில் பதிவு செய்திருப்பது, மிகவும் அநாகரிகமான செயல்.
தமிழகத்தில், 60 ஆண்டு கால திராவிட அரசியலுக்கு முடிவு கட்டியதுடன், தி.மு.க., ஆட்சி அகற்றப்பட்டுள்ளது. இனி எதிர்காலத்தில் மீண்டும் அக்கட்சி ஆட்சிக்கே வர முடியாத அளவில், மிக சிறப்பான மக்கள் நலன் சார்ந்த நல்லாட்சியை, முதல்வர் விஜய் நடத்திக் கொண்டிருக்கிறார்,
இதை சகித்துக் கொள்ள முடியாத வகையில், மகேஷ் பதிவு அமைந்திருப்பது கண்டிக்கத்தக்கது. கடந்த காலத்தில், அவர் பள்ளிக்கல்வித் துறை அமைச்சராக இருந்தபோது, ஊழலின் ஊற்றுக் கண்ணாக, அந்த துறையை மாற்றியதை, சமீபத்தில் தனியார் பள்ளிகளின் கூட்டமைப்பு தலைவர், விலாவாரியாக ஊடகத்தின் வாயிலாக அம்பலப்படுத்தினார்.
இதற்கு, இதுவரை எந்த பதிலும் கூறாத மகேஷ், காங்கிரஸ் கட்சியை சேர்ந்த, குறிப்பாக, தலித் சமுதாயத்தின் பிரதிநிதியாக, அமைச்சரவையில் இருக்கிற என்னை குறி வைத்து, இழிவுபடுத்தி பேசுவதை, தமிழக மக்கள் ஏற்றுக் கொள்ள மாட்டார்கள். தி.மு.க., - ஐ.டி., அணி வாயிலாக, இழிவான பதிவுகளை வெளியிடுவதன் வாயிலாக, தங்கள் தரத்தை, அவர்கள் தாழ்த்திக் கொள்கின்றனர். இனியும் இத்தகைய கோயபல்ஸ் பிரசாரத்தை தொடர்ந்து மேற்கொண்டால், அதற்குரிய விளைவுகளை சந்திக்க நேரிடும். இவ்வாறு, அதில் கூறப்பட்டுள்ளது.