📅 Friday, 09 October 2026 IST | புரட்டாசி 23, பராபவ வருடம்
Tamilzha Alt Logo Text சார்பற்ற நடுநிலைச் செய்திகள்
முக்கிய செய்திகள்
Singapore Tamil October 09, 2026 08:03 PM

சிங்கப்பூரில் பணமோசடி: ரஷ்யருடன் சிங்கப்பூரர் மீது குற்றச்சாட்டு

சிங்கப்பூரில் பணமோசடி: ரஷ்யருடன் சிங்கப்பூரர் மீது குற்றச்சாட்டு

கள்ளப்பணப் பரிவர்த்தனையில் ரஷ்ய ஆடவருடன் சம்பந்தப்பட்டதாக சிங்கப்பூர் மாதுமீது வெள்ளிக்கிழமை (அக்டோபர் 9) நீதிமன்றத்தில் குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது.

கடந்த 2021ல் மார்ச் முதல் ஜூன் மாதம் வரை அவர்கள் அக்குற்றத்தைப் புரிந்துள்ளனர். அவர்களது நிர்வாகத்தின்கீழ் செயல்பட்ட ஒரு உள்ளூர் வங்கிக் கணக்கில் $300,000க்கும் மேற்பட்ட பல நாடுகளின் நாணயங்கள் பரிமாற்றம் செய்யப்பட்டுள்ளது.

வெளிநாடுகளில் வாழும் பலர் குறிவைக்கப்பட்டு பிறகு முதலீடு மோசடிகளில் அவர்கள் ஏமாற்றப்பட்டு அந்தப் பணம் இங்கு அனுப்பப்பட்டுள்ளது.

ரஷ்யாவின் குஸ்நெட்சொவ் பவெல் என்ற 35 வயது ஆடவர்மீது 14 குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டுள்ளன. அவற்றில் அடையாளம் தெரியாத நபர்கள் நிறுவன வங்கிக் கணக்குகளுக்குள் ஊடுருவ உதவியது, ஆவணங்களைப் போலியாகத் தயாரிக்க உதவியது, உள்ளூர் இயக்குநர்கள் அவர்களது கடமைகளை முறையாகச் செயல்படுத்தாமல் இருக்க துணைபோனது போன்றவையும் அடங்கும்.

அவருக்கு உடந்தையாக இருந்த சிங்கப்பூரர், ஙூவென் தி பிக் ஙொக் என்ற 42 வயது மாது 8 குற்றச்சாட்டுகளை எதிர்நோக்குகிறார். அவற்றில் வங்கிக் கணக்குகளை ஊடுருவ துணைநின்றது, குற்றப் பின்னணியில் பெற்ற சொத்துகளின் உரிமையை மாற்றியது போன்றவை அடங்கும்.

அவரே உரிமையாளராக இங்கு செயல்பட்ட நிறுவனத்தின் வழியாக பவெல் உள்ளூர், வெளியூர் நிறுவனங்களுக்கு 2020 முதல் 2021 வரை நிர்வாகச் சேவைகளை வழங்கினார் என்று காவல்துறை வியாழக்கிழமை வெளியிட்ட அறிக்கை குறிப்பிட்டது.

பிறகு இரு நிறுவனங்களுக்கு இயக்குநர்களாக அவர் இருவரை நியமித்தார். அவர்களை அந்நிறுவனங்களையும் அவற்றின் வங்கிக் கணக்குகளையும் மேற்பார்வையிடத் தேவையில்லை என்று பவெல் கூறியுள்ளார்.

மேலும் அந்த சிங்கப்பூர் மாதினை பல வர்த்தக நிறுவனங்களின் இயக்குநராக பவெல் பணியமர்த்தினார். காவல்துறை விசாரணையில் எப்படி குறிப்பிட்ட வங்கிக் கணக்கில் பணம் பரிமாற்றம் செய்யப்பட்டது என்பதை மாது சரிவர விளக்கமுடியவில்லை என்று தெரிவிக்கப்பட்டது.