📅 Wednesday, 16 September 2026 IST | ஆவணி 31, பராபவ வருடம்
Tamilzha Alt Logo Text சார்பற்ற நடுநிலைச் செய்திகள்
முக்கிய செய்திகள்
Singapore Tamil September 16, 2026 08:34 AM

சிங்கப்பூரில் ஆந்த்ரோபிக் அலுவலகம் திறப்பு

சிங்கப்பூரில் ஆந்த்ரோபிக் அலுவலகம் திறப்பு

தோக்கியோ, பெங்களூரு, சோல், சிட்னி ஆகிய நகரங்களைத் தொடர்ந்து ஆசிய-பசிபிக் வட்டாரத்தில் தமது ஐந்தாவது அலுவலகத்தைச் சிங்கப்பூரில் வரும் அக்டோபரில் திறக்கவுள்ளதாக ‘அந்த்ரோப்பிக்’ (Anthropic) அறிவித்துள்ளது.

நிறுவனத்தின் மேம்பட்ட எல்எல்எம்’ எனப்படும் பெருமொழி மாதிரிகள், ‘கிளாட்’ (Claude) செயற்கை நுண்ணறிவுக்கானத் தேவை அதிகரிப்பு ஆகியவையே சிங்கப்பூரில் புதிய அலுவலகம் திறப்பதற்கான முக்கிய காரணம் என புதன்கிழமையன்று (செப்டம்பர் 16) ‘அந்த்ரோப்பிக்’ வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்தது.

அந்நிறுவனத்தின் அண்மைய பொருளியல் குறியீட்டுத் தரவுகளின்படி, ‘கிளாட் ஏஐ’யைப் பயன்படுத்தும் மக்களின் எண்ணிக்கை அடிப்படையில் சிங்கப்பூர் இரண்டாம் இடத்தில் உள்ளது. அந்த செயற்கை நுண்ணறிவை மொத்தம் 121 நாடுகளில் இருக்கும் மக்கள் பயன்படுத்துகின்றனர்.

சிங்கப்பூரின் பயன்பாட்டு விகிதம் அதன் மக்கள் தொகை அளவைவிட 5.81 மடங்கு அதிகமாகும்.

சிங்கப்பூரில் அலுவலகம் திறப்பது இயல்பான அடுத்த கட்ட நடவடிக்கை என அந்த்ரோப்பிக் நிறுவனத்தின் அனைத்துலகப் பிரிவின் நிர்வாக இயக்குநர் கிறிஸ் சியாவூரி தெரிவித்தார்.

மேலும், “அங்குச் செயல்படுவதன் மூலம் உள்ளூர்ச் சந்தையை நன்கு அறிந்த திறனாளர்களைப் பணியமர்த்தவும் ‘கிளாட்’ தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தும் உள்ளூர் வாடிக்கையாளர்கள், பங்காளிகள் ஆகியோருடன் இணைந்து பணியாற்றவும் முடியும் என அவர் கூறினார்.

கூகல் உள்ளிட்ட பெரு நிறுவனங்களில் ஆசிய-பசிபிக் வட்டாரத் தலைமைப் பொறுப்புகளை வகித்த டேல் ஃபின்லே (Dale Finlay), சிங்கப்பூரில் அந்த்ரோப்பிக் செயல்பாடுகளைத் தலையேற்று வழிநடத்துவார் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

புதிய நிறுவனங்கள், மின்னிலக்கத் தலைமுறையினர், பெரிய நிறுவனங்கள், பொதுத்துறை அமைப்புகள் எனச் சிங்கப்பூரிலுள்ள அனைத்து அளவிலான அமைப்புகளுடனும் இணைந்து பணியாற்ற அந்த்ரோப்பிக் திட்டமிட்டுள்ளது.

இவையும் உங்களுக்குப் பிடிக்கலாம்

உயர்மட்டத் தொழில்நுட்பத் திறனாளர்கள், உலகளாவிய வர்த்தகங்கள், ஆராய்ச்சி நிறுவனங்கள், வலுவான புத்தாக்கக் கட்டமைப்பு ஆகியவற்றின் நடுவமாகத் திகழ்வதால் சிங்கப்பூர் தேர்வு செய்யப்பட்டதாக அந்நிறுவனம் தெரிவித்தது.

மேலும், பொறுப்பான முறையில் செயற்கை நுண்ணறிவை நடைமுறைப்படுத்துவதுடன், ஊழியரணியை வலுப்படுத்தும் நோக்கில் சிங்கப்பூரும் அந்த்ரோப்பிக் நிறுவனமும் ஒரே மாதிரியான இலக்கைக் கொண்டுள்ளன என்றும் குறிப்பிடப்பட்டது.

வாடிக்கையாளர்கள், பங்காளிகள், அரசியல் தலைவர்கள் ஆகியோரைச் சந்திக்க அந்த்ரோப்பிக் நிறுவனத்தின் மூத்த தலைவர்கள் சிங்கப்பூர் வரவுள்ளனர்.

செயற்கை நுண்ணறிவு, நிதி, சந்தைப்படுத்தல், விற்பனை, பொருளியல் ஆராய்ச்சி ஆகிய துறைகளில் காலியாக உள்ள பல்வேறு பணியிடங்களுக்கு ஆட்களை நியமிக்க நிறுவனம் நடவடிக்கை எடுத்து வருகிறது.

சிங்கப்பூரின் ‘ஜிஐசி’ (GIC) அரசாங்க முதலீட்டு நிறுவனம் அந்த்ரோப்பிக் நிறுவனத்தின் முக்கிய நிதி ஆதரவாளர்களில் ஒன்றாக விளங்குவது குறிப்பிடத்தக்கது.

உலக அளவில் செயற்கை நுண்ணறிவின் ஆபத்துகள் குறித்த கவலைகள் அதிகரித்து வரும் சூழலில் இந்த வட்டார விரிவாக்கம் நடைபெறுகிறது. அந்த்ரோப்பிக் நிறுவனத்தின் முன்னாள் ஆராய்ச்சியாளரான ஜேக்கப் காக்சன் (Jacob Coxon) அண்மையில் பதவி விலகி, மனித இனத்திற்குச் செயற்கை நுண்ணறிவால் ஏற்படும் அச்சுறுத்தல்கள் குறித்து எச்சரித்திருந்தார்.

இத்தகைய அபாயங்களை எதிர்கொள்ள, செயற்கை நுண்ணறிவுத் துறையின் முன்னணி நிறுவனங்களின் ஊழியர்களும் தலைவர்களும் தற்காப்புக் கட்டுப்பாடுகளை அமல்படுத்துமாறு வலியுறுத்தி வருகின்றனர்.

அச்சவால்களைச் சமாளிப்பதற்கான தரநிலை அமைப்பை உருவாக்கும் பணியில் அந்த்ரோப்பிக், ஓபன்ஏஐ, கூகல் ஆகிய உலகின் மிகப்பெரிய செயற்கை நுண்ணறிவு நிறுவனங்கள் ஈடுபட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளன.