📅 Friday, 10 July 2026 IST | ஆனி 26, பராபவ வருடம்
Tamilzha Alt Logo Text சார்பற்ற நடுநிலைச் செய்திகள்
முக்கிய செய்திகள்
Politics July 10, 2026 09:01 AM

சீமான் மீது அன்பைப் பொழியும் ஸ்டாலின், உதயநிதி! தி.மு.க.

சீமான் மீது அன்பைப் பொழியும் ஸ்டாலின், உதயநிதி! தி.மு.க.

சீமான் மீது அன்பைப் பொழியும் ஸ்டாலின், உதயநிதி! தி.மு.க. - நா.த.க இடையே மலரும் உறவு எத்தகையது?

தி.மு.க-வும், நா.த.க-வும் அரசியல் ரீதியில் நெருங்கினால், பெரியாரை அவமதித்துப் பேசிய சீமானுக்கு எதிராகக் கண்டனக் கூட்டங்களில் முழங்கிய பேரா. சுப.வீரபாண்டியன் போன்றவர்கள் என்ன மாதிரியான முடிவை எடுப்பார்கள்?

தற்போதைய ஆச்சர்யம் என்னவென்றால், தி.மு.க-வும், நாம் தமிழர் கட்சியும் காட்டிவரும் நெருக்கம் தான். நாம் தமிழர் கட்சி தொடங்கப்பட்ட காலத்தில், காங்கிரஸ் கட்சியைத்தான் அது கடுமையாக விமர்சித்துவந்தது. 2014 மக்களவைத் தேர்தலில் காங்கிரஸ் வேட்பாளர்களுக்கு எதிராக நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தீவிரப் பிரசாரம் மேற்கொண்டார். 2016 சட்டப்பேரவைத் தேர்தலில் நாம் தமிழர் கட்சி தனித்துப் போட்டியிடத் தொடங்கிய பிறகு, தி.மு.க-வை நா.த.க கடுமையாக எதிர்க்கத் தொடங்கியது.

பொதுக்கூட்ட மேடை ஒன்றில், தான் காலில் அணிந்திருந்த கருப்பு சிவப்பு காலணியைக் காண்பித்து, தி.மு.க-வை கடுமையாக விமர்சித்தார் சீமான். அதற்கு தி.மு.க-வின் முரசொலி காட்டமாக எதிர்வினை ஆற்றியது. 2021-ல் தி.மு.க ஆட்சிக்கு வந்த பிறகு, மறைந்த தி.மு.க தலைவரும், முன்னாள் முதல்வருமான மு.கருணாநிதிக்கு வங்கக்கடலில் பேனா சிலை வைக்க ஸ்டாலின் தலைமையிலான தி.மு.க அரசு முடிவெடுத்தபோது, அதைக் கடுமையாக எதிர்த்தார் சீமான்.

தி.மு.க-வையும், அதன் தலைவர்களையும் கொள்கை ரீதியாகவும், தனிப்பட்ட ரீதியிலும் தொடர்ந்து விமர்சித்துவந்தார் சீமான். ஆனால், அதற்கு தி.மு.க-வின் தலைவர்களோ, முரசொலியோ நேரடியாகப் பதிலடி கொடுப்பதில்லை. அதே நேரம், சீமானையும், நாம் தமிழர் கட்சியையும் சமூக ஊடகங்களில் தி.மு.க-வினர் கடுமையாக விமர்சித்துவந்தனர். அ.தி.மு.க-வுக்கு அடுத்தபடியாக, தி.மு.க-வின் முக்கிய அரசியல் எதிரியாக நாம் தமிழர் கட்சி பார்க்கப்பட்டது. நாம் தமிழர் கட்சியும் தி.மு.க-வை முக்கிய எதிரியாக முன்னிறுத்தியது.

ஆனாலும், ஒரு கட்டத்தில், முதல்வராக இருந்த தி.மு.க தலைவர் ஸ்டாலினுக்கும், நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமானுக்கும் இடையே தனிப்பட்ட ரீதியிலான உறவு துளிர்த்தது. கட்சி நிகழ்ச்சிக்குச் சென்ற சீமான் மயங்கிவிழுந்த சம்பவத்தின்போது, சீமானைத் தொடர்புகொண்டு ஆறுதலாகப் பேசினார் ஸ்டாலின். சீமானின் தந்தை காலமான போதும், சீமானுக்கு தொலைபேசியில் ஸ்டாலின் ஆறுதல் சொன்னார். ஸ்டாலின் மூத்த சகோதரர் மு.க.முத்து காலமான நேரத்தில், ஸ்டாலின் வீட்டுக்குச் சென்று துக்கம் விசாரித்தனர் சீமான் உள்ளிட்ட த.வெ.க நிர்வாகிகள்.

சமீபத்தில், இயக்குநர் வ.கவுதமன் இல்ல விழாவில் ஸ்டாலினும், சீமானும் அருகருகே அமர்ந்து இயல்பாகப் பேசிக்கொண்டிருந்தார்கள். சீமானுக்குப் பெண் குழந்தை பிறந்ததற்கு, தி.மு.க-வின் முன்னாள் அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் மாமன் சீர் எடுத்துச்சென்றார்.

2026 தமிழகச் சட்டமன்றத் தேர்தல் முடிவுகள், தமிழக அரசியலில் மூன்றாவது பெரிய சக்தி என்று தன்னை நா.த.க கருதிக்கொண்டிருந்த நிலையில், நா.த.க மட்டுமின்றி, அனைத்து அரசியல் கட்சிகளின் கனவுகளையும் த.வெ.க தகர்த்துவிட்டது.

இந்தத் தேர்தல் தி.மு.க-வுக்கு பல சோதனைகளை கொடுத்திருக்கிறது. தி.மு.க-வின் வரலாற்றில் மிக மோசமான தேர்தல் தோல்வி என்றால், அது 1991-ல் தோல்விதான்.1991 சட்டமன்றத் தேர்தலில் வெறும் இரண்டே இரண்டு தொகுதிகளில்தான் தி.மு.க வெற்றிபெற்றது. ஆனால், 2026 தேர்தலில் 59 இடங்களை தி.மு.க பெற்றது. ஆனாலும், 1991 நிலைமையைவிட ஒரு மோசமான நிலையை தி.மு.க இப்போது சந்தித்துவருகிறது.

ஏனெனில், இந்தத் தேர்தலில், முதல்வரும், தி.மு.க தலைவருமான மு.க.ஸ்டாலினே தோற்றுப்போனார். ‘தி.மு.க., இல்லாவிட்டால் அ.தி.மு.க... அ.தி.மு.க இல்லாவிட்டால் தி.மு.க’ என்று இரு கட்சிகளும் மாறி மாறி ஆட்சி செய்துவந்த சூழலை, த.வெ.க என்ற புதிய கட்சி அடித்துநொறுக்கியது. மேலும், தி.மு.க-வுக்கு துணையாக இருந்த அதன் கூட்டணிக் கட்சிகள் எல்லாம் த.வெ.க பக்கம் சென்றுவிட்டன.

மேலும், வரக்கூடிய உள்ளாட்சித் தேர்தலிலும், நாடாளுமன்றத் தேர்தலிலும் த.வெ.க-வுடன்தான் கூட்டணி என்று அறிவித்தும் விட்டது காங்கிரஸ். அது தி.மு.க-வுக்கு கடும் ஆத்திரத்தை ஏற்படுத்தியது. தி.மு.க தலைவர் ஸ்டாலின் உள்ளிட்ட தி.மு.க-வினர் காங்கிரஸைக் கடுமையாகச் சாடினர்.

அந்த நேரத்தில், காங்கிரஸ் கட்சியை மிகக் கடுமையாக விமர்சித்தார் சீமான். சீமானின் அந்தப் பேச்சுகளை தி.மு.க-வினர் சிலாகித்தனர். தங்கள் சமூகவலைதளப் பக்கங்களில் சீமானின் பேச்சுகளை தி.மு.க-வினர் பகிர்ந்தனர்.

இப்போது, திருமண விழாக்களில் ஸ்டாலினுடனும், உதயநிதியுடனும் நெருக்கமாகச் சீமான் பேசியதை அரசியல் நாகரிகம் என்று வரவேற்றாலும், அதன் பின்னால் அரசியல் கணக்குகள் இருப்பதாக அரசியல் பார்வையாளர்கள் கூறுகிறார்கள்.

நீண்ட காலம் தி.மு.க-வுடன் பயணித்த கட்சிகள் த.வெ.க பக்கம் சென்றுவிட்டதால், இப்போது தி.மு.க தனித்துவிடப்பட்ட சூழலில் இருக்கிறது. தற்போது ஆட்சிக்கு வந்திருக்கும் த.வெ.க-வோ, ஜென் சி இளைஞர்களின் பேராதரவைப் பெற்றிருக்கும் கட்சியாக விளங்குகிறது. இந்த நிலையில், இளைஞர்களின் ஆதரவு பெற்ற நா.த.க-வை தன் பக்கம் திருப்பினால், பெரிய பலமாக இருக்கும் என்று தி.மு.க தலைவர் கருதுவதாக அரசியல் வட்டாரத்தில் பேச்சு நிலவுகிறது. இந்த நிலையில்தான், அம்பாசமுத்திரம் தொகுதி இடைத்தேர்தலில் பொது வேட்பாளராக சீமான் நிறுத்தப்படலாம் என்பது போன்ற செய்திகள் வெளியாகின.

பொது வேட்பாளராக சீமான் நிறுத்தப்படுவார் என்பது உறுதிப்படுத்தப்பட்ட செய்தி அல்ல என்றாலும், தி.மு.க-வும், நாம் தமிழர் கட்சியும் குறைந்தபட்சம் ஒரு மறைமுக இணக்கத்துடன் பயணிக்கக்கூடிய நிலை உருவாகிவருகிறது என்கிறார்கள் அரசியல் பார்வையாளர்கள்.

ஒருவேளை தி.மு.க-வும், நா.த.க-வும் நெருங்கினால், அல்லது மறைமுக கூட்டணியை அமைத்தால், தி.மு.க-வுக்கு ஆதரவாளர்களாக இருக்கும் பெரியாரிஸ்டுகள் அதை விரும்ப மாட்டார்கள். ஏனென்றால், பெரியாரை சீமான் மிகக் கடுமையாக விமர்சித்திருக்கிறார். ‘இது பெரியார் மண் அல்ல. பெரியாரே மண்’ என்றும் அவர் சாடியிருக்கிறார்.

பெரியார் மீதான தாக்குதலால் கொந்தளித்த பேரா. சுப.வீரபாண்டியன் போன்ற பெரியாரியவாதிகள் சீமானுக்கு எதிராகக் கண்டனக் கூட்டங்களை நடத்தினார்கள். அங்குச் சீமானைக் கடுமையாக விமர்சித்தார்கள். சீமானுக்கு எதிராகத் தனிப்பட்ட தாக்குதல்களும் அங்கு நிகழ்த்தப்பட்டன. ஒருவேளை, தி.மு.க-வும், நா.த.க-வும் நெருங்கினால், இந்த பெரியாரிஸ்டுகள் என்ன நிலைப்பாட்டை எடுப்பார்கள் என்பது முக்கியமான கேள்வி.