📅 Sunday, 20 September 2026 IST | புரட்டாசி 4, பராபவ வருடம்
Tamilzha Alt Logo Text சார்பற்ற நடுநிலைச் செய்திகள்
முக்கிய செய்திகள்
Tamil Nadu September 20, 2026 10:03 AM

சென்னை விமான நிலைய நிர்வாக மாற்றம்: விஜயின் கடிதம்

சென்னை விமான நிலைய நிர்வாக மாற்றம்: விஜயின் கடிதம்

சென்னை: சென்னை விமான நிலையத்தின் நிர்வாகத்தை வேறு நிறுவனத்திடம் ஒப்படைக்கக் கோரி இந்தியப் பிரதமர் நரேந்திர மோடிக்கு தமிழக முதல்வர் ச.ஜோசப் விஜய் கடிதம் எழுதியுள்ளார்.

சென்னை விமான நிலையத்தின் தற்போதைய செயல்பாடு குறித்து அதிருப்தி தெரிவித்துள்ள தமிழக அரசு, அதன் நிர்வாகத்தில் மாற்றம் தேவை என்ற நிலைப்பாட்டை எடுத்துள்ளது.

தொழில் முதலீடுகளை ஈர்ப்பதில் தமிழ்நாடு தொடர்ந்து முதன்மை மாநிலமாக விளங்குவதாகப் பிரதமர் மோடிக்கு எழுதிய கடிதத்தில் முதல்வர் சுட்டிக்காட்டியுள்ளார்.

“தொழில், முதலீட்டு வளர்ச்சிக்கு அனைத்துலக அளவிலான விமான நிலைய உள்கட்டமைப்பும் சிறந்த நிர்வாகமும் மிக முக்கியமானவை. பயணிகள் எண்ணிக்கை, விமானங்களின் இயக்கம், சரக்கைக் கையாளும் திறன் ஆகிய மூன்றிலும் சென்னை விமான நிலையம் மேம்பட வேண்டும்.

“தொழில் முதலீடுகளை அதிக அளவில் ஈர்க்கும் தமிழ்நாட்டிற்கு ஏற்றவாறு சிறப்பான முறையில் செயல்படும் புதிய நிர்வாகத்தைக் கொண்டுவர வேண்டும்,” என்று அவர் வலியுறுத்தியுள்ளார்.

தற்போதைய நிர்வாகமான ‘இந்திய விமான நிலையங்கள் ஆணையத்தை’ மாற்றிவிட்டுப் புதிய நிறுவனத்திடம் பொறுப்பை ஒப்படைக்க வேண்டும் என்று முதல்வர் விஜய் தமது கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.

இந்நிலையில், தமிழக அரசின் இந்த நடவடிக்கை, சென்னை விமான நிலையத்தைத் தனியார்மயமாக்குவதற்கான முயற்சியாகவே அமைந்துள்ளது என ஆங்கில நாளேடு ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.

பரந்தூரில் அமைக்கத் திட்டமிடப்பட்டிருந்த இரண்டாவது விமான நிலையத் திட்டத்தைத் தமிழக அரசு கைவிட முடிவுசெய்ததன் தொடர்ச்சியாக இந்நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.