சென்னை உயர்நீதிமன்றத்தில் இனி தமிழுக்கு தான் முதலிடம்: முதலமைச்சர் விஜய் தனித் தீர்மானம்..!
chenதமிழக சட்டசபை கடந்த ஒரு மாத காலமாக நடைபெற்று வரும் நிலையில் தினமும் துறைவாரியாக மானியக் கோரிக்கை தொடர்பான விவாதங்கள், நடைபெற்று வரும் நிலையில், இதில் புதிய அறிவிப்புகளும் வெளியிபிடப்பட்டு வருகிறது.
இந்நிலையில் தமிழ்நாடு சட்டப்பேரவையில் இன்று 110 விதியின் கீழ் முதலமைச்சர் விஜய் அரசினர் தனித் தீர்மானம் ஒன்றை தாக்கல் செய்தார்.
அப்போது பேசிய முதலமைச்சர் விஜய், சென்னை உயர்நீதிமன்றத்தில் தமிழை வழக்காடு மொழியாக அறிவிக்க வேண்டும் என்ற தனித் தீர்மானத்தை தாக்கல் செய்தார்.
அதன்படி, அரசியலமைப்புச் சட்டத்தின் 348-வது பிரிவின் உட்பிரிவு 2-ஐ பயன்படுத்தி, சென்னை உயர்நீதிமன்றத்தின் வழக்காடு மொழியாக தமிழை அறிவிக்க வேண்டும் என்ற தனித் தீர்மானத்தை முதலமைச்சர் விஜய் சட்டப்பேரவையில் தாக்கல் செய்தார். மேலும் சென்னை உயர்நீதிமன்றத்திலும் தமிழை வழக்காடு மொழியாக மாற்ற வேண்டியது காலத்தின் கட்டாயம் என முதலமைச்சர் விஜய் வலியுறுத்தினார்.
செம்மொழியான தமிழ் மொழி நமக்கு தாய்மொழியாக இருப்பது தமிழர்கள் அனைவருக்கும் பெருமை என தெரிவித்தார். பல்லாயிரம் ஆண்டுகள் உயிர்ப்புடன் பேசப்படும் மொழி தமிழ் மொழி என்று முதலமைச்சர் விஜய் கூறினார்.
தமிழ்நாட்டின் ஆட்சி மொழியாகவும், நடைமுறை மொழியாகவும், பேச்சு மொழியாகவும் தமிழ் தொடர்ந்து இருந்து வருவதாகவும் அவர் குறிப்பிட்டார்.
வருங்கால தலைமுறைக்கும் தமிழ் மொழியின் வளத்தையும் பெருமையையும் கொண்டு சேர்ப்பது நமது கடமை என்று கூறிய முதலமைச்சர், தமிழை முதன்மை மொழியாக அங்கீகரிக்க வேண்டியது காலத்தின் கட்டாயமாக உள்ளது என்று கூறினார்.
வழக்கு தொடர்பான வாதங்கள் தமிழில் இருந்தால் எளிதாக புரியும் என்று முதலமைச்சர் விஜய் கூறினார்.
நீதிபதிகள், வழக்கறிஞர்கள், நீதிமன்ற பணியாளர்களுக்கு சட்டத் தமிழ் பயிற்சி தேவை என்றும் அவர் கூறினார்.
தமிழில் பேசுவதை ஆங்கிலத்திலும் கேட்க உதவும் வகையில் AI முன்னேற்றம் கண்டுள்ளது.
நீதிமன்றங்களில் தமிழ் மொழி பயன்பாட்டுக்கு சட்ட அங்கீகாரம். மாநில மொழியை நீதிமன்றங்களில் பயன்படுத்த சட்ட வாய்ப்புள்ளது என்று அவர் கூறினார்.
இந்த கோரிக்கை எந்த மொழிக்கும் எதிரானது அல்ல. தமிழ் மொழிக்கான சட்ட அங்கீகாரம் கேட்கும் கோரிக்கை. குடியரசுத் தலைவரும் மத்திய அரசும் இதற்கு ஒப்புதல் தர வேண்டும் என்று முதமைச்சர் விஜய் கூறினார்.
தமிழ்நாட்டின் ஆட்சி மொழியாக தமிழ் அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்நாட்டின் மாவட்ட நீதிமன்றங்களில் தமிழ் ஏற்கனவே சட்ட ரீதியான மொழியாக இருந்து வருகிறது. எனவே தீர்ப்பு, தீர்ப்பாணை, உத்தரவுகளை தமிழில் வழங்க வேண்டும் என்றார்.
மேலும் தமிழ் மொழி நிர்வாகம் மற்றும் அன்றாடப் பயன்பாட்டில் மட்டுமின்றி, நீதித்துறையிலும் முக்கிய இடத்தைப் பெற வேண்டும் என்ற நோக்கில் இந்தத் தீர்மானம் (சட்டசபைத் தீர்மானம்) கொண்டுவரப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மாநிலத்தின் அலுவல் மொழியை உயர்நீதிமன்றங்களில் பயன்படுத்த குடியரசுத் தலைவரின் முன் அனுமதியுடன் ஆளுநர் வழிவகுக்க சட்டப்பிரிவுகள் இடம் அளிப்பதால், இத்தீர்மானம் மூலம் மீண்டும் மத்திய அரசிடம் இதற்கான ஒப்புதலைத் தமிழக அரசு வலியுறுத்தியுள்ளது.
ஏற்கனவே 2006 டிசம்பர் 6 அன்று தமிழக சட்டப்பேரவையில் இதே போன்றதொரு தீர்மானம் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டு மத்திய அரசுக்கு அனுப்பப்பட்டது. அப்போது உச்சநீதிமன்ற முழு அமர்வு இதற்கு உடன்படவில்லை என்பதை சுட்டிக்காட்டிய முதலமைச்சர், தற்போதைய நவீன தொழில்நுட்பம் மற்றும் செயற்கை நுண்ணறிவு (AI) மொழிபெயர்ப்பு வசதிகளைக் கருத்தில் கொண்டு, மத்திய அரசு இதனை மறுபரிசீலனை செய்ய வேண்டும் எனத் தெரிவித்தார்.
இதனை தொடர்ந்து முதலமைச்சர் விஜய் கொண்டு வந்த தனித்தீர்மானத்தின் மீது உறுப்பினர்கள் விவாதம் நடைபெற்றது.
முதலமைச்சர் விஜய் முன்மொழிந்த இந்தத் தீர்மானத்திற்கு திமுக, அதிமுக, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, பாஜக, விசிக, இந்திய யூனியன் முஸ்லீம் லீக், தேமுதிக, பாமக உள்ளிட்ட அனைத்து அரசியல் கட்சிகளின் சட்டமன்ற உறுப்பினர்களும் (MLAs) முழு ஆதரவு அளித்தனர்.
சென்னை உயர்நீதிமன்றத்தின் முதன்மை மொழியாக தமிழை அங்கீகரிக்கவும், அதற்கான சட்ட நடைமுறைகளை உருவாக்கவும் மத்திய அரசை வலியுறுத்தி இந்தத் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.