📅 Thursday, 03 September 2026 IST | ஆவணி 18, பராபவ வருடம்
Tamilzha Alt Logo Text சார்பற்ற நடுநிலைச் செய்திகள்
முக்கிய செய்திகள்
Tamil Nadu September 03, 2026 06:32 PM

10-ஆம் வகுப்பு சான்றிதழில் தமிழ் பாடத்தின் பெயர் இடம்பெற வேண்டும்

10-ஆம் வகுப்பு சான்றிதழில் தமிழ் பாடத்தின் பெயர் இடம்பெற வேண்டும்

10-ஆம் வகுப்பு சான்றிதழில் தமிழ் பாடத்தின் பெயர் இடம்பெற வேண்டும் - சௌமியா அன்புமணி வலியுறுத்தல்

ஆங்கிலம், கணிதம், சமூக அறிவியல், அறிவியல் உள்ளிட்ட பிற பாடங்களின் பெயர்கள் இடம்பெற்றுள்ள நிலையில், தமிழ் மட்டும் விடுபட்டுள்ளதாக சவுமியா அன்புமணி தெரிவித்தார்.

Published : September 3, 2026 at 5:58 PM IST

சென்னை: பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு சான்றிதழில் தமிழ் மொழிப் பாடத்தின் பெயரை இடம் பெற செய்ய வேண்டும் என பாமக எம்எல்ஏ சௌமியா அன்புமணி வலியுறுத்தியுள்ளார்.

சென்னை உயர் நீதிமன்றத்தில் தமிழை முதன்மை மொழியாக்க கோரி நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தில் பேசிய பாமக சட்டமன்ற உறுப்பினர் சௌமியா அன்புமணி, "தமிழ்நாட்டின் ஆட்சி மொழியாக மட்டுமல்லாமல், பேச்சு மொழியாகவும் தமிழ் நிலைக்க வேண்டும் என்பதற்காக முதலமைச்சர் கொண்டு வந்துள்ள தனித் தீர்மானத்தை பாட்டாளி மக்கள் கட்சி முழுமனதுடன் வரவேற்கிறது.

கடந்த 2006 ஆம் ஆண்டு இதே சட்டப்பேரவையில் அன்றைய முதலமைச்சர் கருணாநிதியால், சென்னை உயர் நீதிமன்றத்தில் தமிழை அலுவல் மொழியாக்கும் தீர்மானம் கொண்டுவரப்பட்டது. அந்தத் தீர்மானம் கொண்டு வருவதற்கு பாமக நிறுவனர் ராமதாஸ் காரணமாக இருந்தார்.

இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் 348 (2) பிரிவின் கீழ், உயர் நீதிமன்றங்களில் இந்தி அல்லது அந்தந்த மாநிலங்களின் ஆட்சி மொழியைப் பயன்படுத்துவதற்கு குடியரசுத் தலைவருக்கு அதிகாரம் உள்ளது. இந்த சட்டப்பிரிவைப் பயன்படுத்தி ராஜஸ்தான், அலகாபாத், பீகார், மத்தியப் பிரதேசம் ஆகிய உயர் நீதிமன்றங்களில் இந்தி வழக்காடு மொழியாக அறிவிக்கப்பட்டுள்ளது.

உச்ச நீதிமன்ற நீதிபதிகள், பிரதமர் நரேந்திர மோடி மற்றும் பல முன்னாள் குடியரசுத் தலைவர்களும் உயர் நீதிமன்றங்களில் மாநில மொழிகளைப் பயன்படுத்துவதற்கு ஆதரவு தெரிவித்துள்ளனர். மேலும், குஜராத், சத்தீஸ்கர், மேற்கு வங்கம், கர்நாடகா உள்ளிட்ட மாநில அரசுகளும் தங்களது மாநில மொழிகளை உயர் நீதிமன்றங்களில் பயன்படுத்த வேண்டும் எனத் தீர்மானம் நிறைவேற்றி மத்திய அரசுக்கு அனுப்பியுள்ளன.

தற்போது செயற்கை நுண்ணறிவு (AI) தொழில்நுட்பத்தின் மூலம் மொழிபெயர்ப்பு எளிதாகியுள்ளதால், தமிழைத் தாய் மொழியாகக் கொண்டிராத தலைமை நீதிபதிகள் மற்றும் நீதிபதிகள் வந்தாலும், தமிழில் வழக்காடுவதில் சிக்கல் இருக்காது" எனத் தெரிவித்தார்.

மேலும் பேசிய அவர், "உலகில் சுமார் 7,000 மொழிகள் உள்ள நிலையில், பல மொழிகள் அழிந்து வருவதாக யுனெஸ்கோ தெரிவித்துள்ளது. அதிகமான மக்களால் பேசப்படும் 25 முக்கிய மொழிகளில் தமிழும் ஒன்றாக உள்ளது. தமிழ்நாடு அரசின் பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு சான்றிதழில் தமிழ் மொழிப் பாடம் என்ற வார்த்தை இடம் பெறவில்லை. ஆங்கிலம், கணிதம், சமூக அறிவியல், அறிவியல் உள்ளிட்ட பிற பாடங்களின் பெயர்கள் இடம்பெற்றுள்ள நிலையில், தமிழ் மட்டும் விடுபட்டுள்ளது.

இந்த மாபெரும் பிழையை தமிழக அரசு உடனடியாக களைய வேண்டும். பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு சான்றிதழில் தமிழ் மொழிப் பாடத்தின் பெயரை இடம்பெறச் செய்ய வேண்டும். தமிழின் வளர்ச்சிக்கும், பாதுகாப்புக்கும் முக்கியத்துவம் அளிக்கும் வகையில் முதலமைச்சர் கொண்டுவந்துள்ள வரலாற்றுச் சிறப்புமிக்க தீர்மானத்தை பாட்டாளி மக்கள் கட்சி சார்பில் முழுமனதுடன் வரவேற்கிறோம்" எனத் தெரிவித்தார்.