📅 Wednesday, 08 July 2026 IST | ஆனி 24, பராபவ வருடம்
Tamilzha Alt Logo Text சார்பற்ற நடுநிலைச் செய்திகள்
முக்கிய செய்திகள்
Tamil Nadu June 08, 2026 03:00 PM

சென்னை மின்வெட்டு: பொதுமக்கள் போராட்டம்

சென்னை மின்வெட்டு: பொதுமக்கள் போராட்டம்

சென்னை: கடந்த சில நாள்களாக சென்னையிலும் அதன் அண்டை மாவட்டங்களிலும் ஏற்பட்டு வரும் மின்வெட்டு காரணமாக பொதுமக்கள் வீதிகளில் இறங்கி போராடத் தொடங்கி உள்ளனர்.

இந்த ஆண்டு சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் உள்ளிட்ட மாவட்டங்களில் கோடை வெயிலின் தாக்கம் கடுமையாக உள்ளது. இதனால் பொதுமக்கள் பகல் நேரங்களில் வெளியே செல்லாமல் வீடுகளுக்குள் முடங்கியுள்ளனர். எனினும் பகலில் நிலவும் புழுக்கம் காரணமாக சிரமத்துக்கு ஆளாகின்றனர்.

கடந்த மே மாதம் அக்னி நட்சத்திரம் காலம் என்பதால் வெயில் மேலும் உக்கிரமடைந்தது. இதனால் இரவு நேரங்களிலும் வெப்பநிலை அதிகரித்தது.

இந்நிலையில், சென்னையிலும் அதன் புறநகர்ப் பகுதிகளிலும் இரவு நேரங்களில் நீண்ட நேரம் மின்தடை ஏற்பட்டதால் பொதுமக்கள் கடும் அவதிக்கு ஆளாகினர். இதனால் கடும் அதிருப்தி அடைந்த பொதுமக்கள் சாலையில் இறங்கி போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதையடுத்து, மின் விநியோகம் ஓரளவு சீரடைந்தது. இதனால் பொதுமக்கள் நிம்மதி பெருமூச்சு விட்ட நிலையில், கடந்த சில நாள்களாக மீண்டும் மின்தடை விவகாரம் விசுவரூபம் எடுத்துள்ளது.

சென்னை மட்டுமின்றி, திருவள்ளூர் உள்ளிட்ட மாவட்டங்களிலும் தொடர் மின்தடை காரணமாக இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளதாகப் பொதுமக்கள் புகார் எழுப்பி வருகின்றனர்.

மின்வாரிய அலுவலகங்களைத் தொலைபேசி மூலம் தொடர்புகொண்டு புகார் அளிக்க முயன்றால், அதிகாரிகள் உரிய பதில் அளிப்பதில்லை என்றும் தொலைபேசி இணைப்புகள் துண்டிக்கப்பட்டுள்ளதாகவும் குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன.

இதையடுத்து, சென்னை மற்றும் அதன் புறநகர்ப் பகு​தி​களிலும் மின்வெட்டைக் கண்டித்து பொதுமக்கள் மீண்டும் போராட்டங்களைத் தொடங்கியுள்ளதாக இந்து தமிழ் திசை ஊடகச் செய்தி தெரிவிக்கிறது.

முதல்வர் விஜய்யின் பெரம்பூர் தொகுதிக்குட்பட்ட வியாசர்பாடி பகுதியில் கடந்த இரு தினங்களில் பலமுறை மின்வெட்டு ஏற்பட்டு நீண்ட நேரம் நீடித்ததாகக் கூறப்படுகிறது.

மேலும், முதல்வர் விஜய் வசிக்கும் நீலாங்கரைப் பகுதியிலும் கடந்த சனிக்கிழமை (மே 6) நீண்ட நேரம் மின்வெட்டு ஏற்பட்டதை அடுத்து, அங்குள்ள மின்வாரிய அலுவலகத்தை முற்றுகையிட்டு பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

திருப்போரூர் எம்எல்ஏ விஜயராஜிடம் பெண்கள் அடுக்கடுக்காக கேள்விகளை எழுப்பி வாக்குவாதத்தில் ஈடுபட்ட நிலையில், தவெகவினர் அவர்களைச் சமாதானம் செய்ய முயன்றனர்.

திருவள்ளூர் மாவட்டம் பெரியபாளையம் அடுத்த ஆரணியிலும் மின்வெட்டைக் கண்டித்து பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.