📅 Monday, 05 October 2026 IST | புரட்டாசி 19, பராபவ வருடம்
Tamilzha Alt Logo Text சார்பற்ற நடுநிலைச் செய்திகள்
முக்கிய செய்திகள்
Sports October 05, 2026 04:03 AM

அழகான 'ஆசிய' கனவு: ஜப்பானில் கண்கவர் நிறைவு விழா

அழகான 'ஆசிய' கனவு: ஜப்பானில் கண்கவர் நிறைவு விழா

நகோயா: ஆசிய விளையாட்டு, வண்ணமயமான கலை நிகழ்ச்சிகளுடன் நிறைவு பெற்றது. அணிவகுப்பில், இந்திய மூவர்ணக்கொடியை துப்பாக்கி சுடுதல் வீராங்கனை நீரு தண்டா ஏந்தி வந்தார்.

ஜப்பானின் அய்ச்சி-நகோயாவில் 20வது ஆசிய விளையாட்டு, கடந்த செப்.19ல் துவங்கியது. 16 நாள் நடந்த பல்வேறு போட்டிகளில், 45 நாடுகளை சேர்ந்த 11,000 நட்சத்திரங்கள் அசத்தினர். நகோயாவில் உள்ள மிசுஹா பார்க் அத்லெட்டிக் மைதானத்தில் நிறைவு விழா நடந்தது.

'பை-பை' ஜப்பான்: சுமார் 90 நிமிடம் நடந்த விழாவை, ஜப்பான் மன்னர் நருஹிட்டோ உட்பட ஆயிரக்கணக்கான ரசிகர்கள் நேரில் கண்டு களித்தனர். 'ஒரே ஆசியா' என்ற இலக்குடன் நிகழ்ச்சிகள் நடந்தன. ஜப்பான் பாரம்பரிய 'பான்-ஒடோரி' நடனம், 'மட்சுகன் சம்பா பாடல்', இசை நிகழ்ச்சி, 'லேசர் ஷோ', வாணவேடிக்கை என நிகழ்ச்சிகள் களைகட்டின. நாடுகளின் அணிவகுப்பின் போது, இம்முறை துப்பாக்கி சுடுதலில் 2 தங்கம், ஒரு வெள்ளி வென்ற நீரு தண்டா, இந்திய கொடியை ஏந்தி வந்தார். ஆசிய ஒலிம்பிக் கவுன்சில் தலைவர் ஷேக் ஜோவான் பின் ஹமாத் அல் தானி, ஆசிய விளையாட்டு நிறைவு பெறுவதாக அறிவித்தார்.

இவர் பேசுகையில்,''ஜப்பான், ஆசிய விளையாட்டுக்கான ஜோதி தான் அணைக்கப்பட்டது. இது மூட்டிய நம்பிக்கை, நம் கண்டம் முழுவதும் பிரகாசமாக எரிந்து கொண்டிருக்கும். நாம் எல்லைகளை கடந்து 'ஒரே ஆசியாவாக' கனவு காணும் போது, உச்சத்தை தொடலாம். ஆசிய விளையாட்டின் தரத்தை, அடுத்த கட்டத்திற்கு உயர்த்தியுள்ளோம். வீரர், வீராங்கனைகள் காயங்களை கடந்து வென்றது, கடைசி வினாடியில் பதக்கத்தை வசப்படுத்தியது, குறைந்த வித்தியாசத்தில் வெற்றியை நழுவவிட்டது, இளம் நட்சத்திரங்களின் எழுச்சி, சிறந்த விளையாட்டு உணர்வை வெளிப்படுத்தியது என அழகான தருணங்களை ரசித்தோம். இம்முறை 50 உலக சாதனைகள் உட்பட 350 சாதனைகள் படைக்கப்பட்டன. இது ஆசிய விளையாட்டு வரலாற்றில் புதிய சாதனை,''என்றார்.

'வெல்கம்' தோஹா

கத்தார் தலைநகர் தோஹாவில் அடுத்த, 21வது ஆசிய விளையாட்டு, 2030ல் நடக்க உள்ளது. நேற்றைய நிறைவு விழாவில், கத்தார் பிரதமர் ஷேக் முகமது பின் அப்துல்ரஹ்மான் அல் தானி வசம் ஆசிய ஒலிம்பிக் கவுன்சிலின் கொடி, ஜோதி ஒப்படைக்கப்பட்டது. இந்த கொடியை கத்தாரின் ஒலிம்பிக் சாம்பியன் முதாஸ் எஸ்ஸா பார்ஷிம் (உயரம் தாண்டுதல்) பெற்றுக் கொண்டார். பின் ராட்சத 'ஸ்கிரீனில்' இவர், குதிரை மீது அமர்ந்து ஜோதி ஏற்றுவது போல காண்பிக்கப்பட்டது.

தடகளத்தில் ஆதிக்கம்

ஆசிய விளையாட்டில் இம்முறை இந்தியாவுக்கு தடகளத்தில் அதிகபட்சமாக 24 பதக்கம் (1 தங்கம், 9 வெள்ளி, 14 வெண்கலம்) கிடைத்தது. அதன்பின் துப்பாக்கி சுடுதலில் 15, வில்வித்தையில் 9, குத்துச்சண்டை, மல்யுத்தத்தில் தலா 6, ஸ்குவாஷில் 5 பதக்கம் கிடைத்தன.

* பாய்மரப்படகு போட்டியில் 3, கிரிக்கெட், ஹாக்கி, கபடி, கோல்ப் போட்டிகளில் தலா 2, பளுதுாக்குதல், உஷு, பாட்மின்டன், குராஷ், தற்காப்பு கலை, படகு வலித்தல், செபக்தக்ரா, சாப்ட் டென்னிஸ், டேபிள் டென்னிசில் தலா ஒரு பதக்கம் கிடைத்தன.

நான்காவது இடம்

ஆசிய விளையாட்டில் இந்தியா இம்முறை 21 தங்கம், 27 வெள்ளி, 37 வெண்கலம் என, 85 பதக்கங்களுடன், பட்டியலில் 4வது இடம் பிடித்தது. இது, இந்தியாவுக்கு கிடைத்த 2வது அதிகபட்ச தங்கம், பதக்கம். கடந்த முறை (2022) 28 தங்கம் உட்பட 106 பதக்கங்களுடன் 4வது இடம் பிடித்திருந்தது.

ஐந்து பேர்... மூன்று பதக்கம்

இம்முறை அதிக பதக்கம் கைப்பற்றிய இந்திய நட்சத்திரங்கள் பட்டியலில், கும்கும் (வில்வித்தை), நீரு தண்டா (துப்பாக்கி சுடுதல்), வித்யா ராம்ராஜ் (தடகளம்), குல்வீர் சிங் (தடகளம்), ருத்ராங்க் ஷ் பாட்டீல் (துப்பாக்கி சுடுதல்) முதலிடம் பிடித்தனர்.

இதில் கும்கும், நீரு தலா 2 தங்கம், ஒரு வெள்ளி என, 3 பதக்கம் வென்றனர். தமிழகத்தின் வித்யா, ஒரு தங்கம், ஒரு வெள்ளி, ஒரு வெண்கலம் என 3 பதக்கம் வென்றார். குல்வீர், ருத்ராங்க் ஷ் தலா 2 வெள்ளி, ஒரு வெண்கலம் என, 3 பதக்கம் பெற்றனர்.

'பாரா' விளையாட்டு எப்போது

ஜப்பானின், அய்ச்சி - நகோயா நகரில் வரும் அக். 18-24ல் மாற்றுத்திறனாளிகளுக்கான பாரா ஆசிய விளையாட்டு 5வது சீசன் நடக்கவுள்ளது. இதில் 45 நாடுகளை சேர்ந்த வீரர், வீராங்கனைகள், 18 வகையான விளையாட்டில் பங்கேற்க உள்ளனர்.