📅 Monday, 07 September 2026 IST | ஆவணி 22, பராபவ வருடம்
Tamilzha Alt Logo Text சார்பற்ற நடுநிலைச் செய்திகள்
முக்கிய செய்திகள்
Cinema September 07, 2026 03:03 AM

அப்போ மஞ்சுமெல் பாய்ஸ்.. இப்போ பெத்லகேம் குடும்ப யூனிட்.. கமல்ஹாசனை சந்தித்த படக்குழு!

அப்போ மஞ்சுமெல் பாய்ஸ்.. இப்போ பெத்லகேம் குடும்ப யூனிட்.. கமல்ஹாசனை சந்தித்த படக்குழு!

சென்னை: 'பெத்லகேம் குடும்ப யூனிட்' திரைப்படக் குழுவினர், சென்னையிலுள்ள அலுவலகத்தில் உலகநாயகன் கமல்ஹாசனை நேரில் சந்தித்து வாழ்த்து பெற்றனர். இச்சந்திப்பு ஒட்டுமொத்த படக்குழுவினருக்கும் ஒரு மறக்க முடியாத நெகிழ்ச்சியான தருணமாக அமைந்தது. முன்னதாக மலையாளத்திலும் தமிழிலும் வெற்றிப் பெற்ற மஞ்சுமெல் பாய்ஸ் திரைப்படம் வெளியான போது கூட அந்த படக்குழுவே நடிகர் கமல்ஹாசனை சந்தித்து ஆசி பெற்றது குறிப்பிடத்தக்கது.

நிவின் பாலி, மமிதா பைஜு நடித்த பெத்லகேம் குடும்ப யூனிட் திரைப்படத்தை ஏற்கனவே பார்த்திருந்த கமல்ஹாசன், படக்குழுவினரின் ஒட்டுமொத்த உழைப்பையும் வெகுவாகப் பாராட்டினார். குறிப்பாக, படத்தின் சுவாரஸ்யமான திரைக்கதை வடிவமைப்பு மற்றும் கலைஞர்களின் சிறந்த பங்களிப்பு ஆகியவற்றைச் சுட்டிக்காட்டி தனது வாழ்த்துகளையும் ஊக்கமளிக்கும் வார்த்தைகளையும் பகிர்ந்து கொண்டார்.

கமல்ஹாசனை சந்தித்த பெத்லகேம் குடும்ப யூனிட்: இந்தச் சந்திப்பில் பெத்லகேம் குடும்ப யூனிட் படத்தை இயக்கி மிகப்பெரிய வெற்றிப்பெற்றுள்ள இயக்குநர் கிரிஷ் ஏ.டி., நடிகர்கள் திலீஷ் போத்தன், ஃபகத் பாசில், கிரண் ஜோஸி, சங்கீத் பிரதாப் மற்றும் உன்னிமாயா ஆகியோர் கலந்து கொண்டனர். இவர்களுடன் ஃபியூச்சர் ரன் அப் பிலிம்ஸ் விநியோக நிறுவனத்தைச் சேர்ந்த அருண் நாராயணன் மற்றும் அனுப் குமார் ஆகியோரும் உடனிருந்தனர். ஹீரோ நிவின் பாலி மற்றும் ஹீரோயின் மமிதா பைஜு இருவரும் கலந்துக் கொள்ளவில்லை.

மலையாளத்தைத் தொடர்ந்து தமிழிலும் வரவேற்பு: பாவனா ஸ்டுடியோஸ் தயாரிப்பில் உருவாகியுள்ள 'பெத்லகேம் குடும்ப யூனிட்' திரைப்படம், மலையாளத்தில் வெளியாகி ரசிகர்களிடையே அமோக வரவேற்பைப் பெற்று பெரும் வெற்றி பெற்றுள்ளது. தற்போது இத்திரைப்படம் தமிழில் டப் செய்யப்பட்டு, தமிழ் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து பரவலான பாராட்டுகளைப் பெற்று வருகிறது.

இந்தச் சூழலில், உலகநாயகன் கமல்ஹாசன் நேரில் அழைத்து படக்குழுவினரைப் பாராட்டியிருப்பது படத்தின் வெற்றிப் பயணத்தில் மற்றொரு முக்கிய மைல்கல்லாக அமைந்துள்ளது. அவரது பாராட்டும் நெஞ்சார்ந்த வாழ்த்துகளும் தங்களுக்கு மேலும் புத்துணர்ச்சியையும் மகிழ்ச்சியையும் அளிப்பதாக படக்குழுவினர் தெரிவித்துள்ளனர்.