📅 Monday, 28 September 2026 IST | புரட்டாசி 12, பராபவ வருடம்
Tamilzha Alt Logo Text சார்பற்ற நடுநிலைச் செய்திகள்
முக்கிய செய்திகள்
Religion September 28, 2026 12:03 AM

அன்பிலும் ஒன்றிப்பிலும் நிலைத்திருக்க பிரான்ஸ் ஆயர்களுக்கு திருத்தந்தை அழைப்பு!

அன்பிலும் ஒன்றிப்பிலும் நிலைத்திருக்க பிரான்ஸ் ஆயர்களுக்கு திருத்தந்தை அழைப்பு!

அன்பிலும் ஒன்றிப்பிலும் நிலைத்திருக்க பிரான்ஸ் ஆயர்களுக்கு திருத்தந்தை அழைப்பு!

ஜான்சிராணி அருளாந்து - வத்திக்கான்

திருஅவையின் பணியை அன்னை மரியாவின் பாதுகாப்பில் ஒப்படைத்து, இயேசு கிறிஸ்துவைத் துணிவுடனும் புதுப்பிக்கப்பட்ட மறைப்பணி ஆர்வத்துடனும் அறிவிக்குமாறு பிரான்ஸ் ஆயர்களை திருத்தந்தை பதினான்காம் லியோ அவர்கள் கேட்டுக்கொண்டார்.

செப்டம்பர் 27, ஞாயிறன்று லூர்து அன்னையின் திருத்தலத்தில் பிரான்ஸ் ஆயர்களை சந்தித்தபோது இவ்வாறு கூறிய திருத்தந்தை, பிரான்சின் சமூக வாழ்வில் திருஅவைக்கு உரிய இடம் உண்டு என்றும், அது “இறைவாக்குரைக்கும் அதிகாரத்தை” கொண்டுள்ளது என்றும் தெரிவித்தார்.

நற்செய்தியை அறிவிக்கவும், கல்விப் பணியை மேற்கொள்ளவும், பொதுவெளியில் வழிபாடு நடத்தவும் திருஅவைக்குள்ள சுதந்திரத்தைப் பாதுகாக்குமாறு ஆயர்களை வலியுறுத்திய திருத்தந்தை, அதேவேளையில், நல்லெண்ணம் கொண்ட அனைவருடனும் இணைந்து செயல்படுமாறும் கேட்டுக்கொண்டார்.

மேலும் சமூகத்தில் அதிகரித்து வரும் பிளவுகள், சகோதரத்துவ உணர்வின் வீழ்ச்சி, வன்முறை, சமத்துவமின்மை, வறுமை ஆகியவற்றுக்கு நற்செய்தி வழங்கும் நம்பிக்கையையும் அமைதியையும் எடுத்துரைப்பதன் வழியாக திருஅவை பதிலளிக்க வேண்டும் என்று திருத்தந்தை கூறினார்.

இளைஞர்களுடன் உடனிருந்து, அழகானது, உண்மையானது, நன்மையானது ஆகியவற்றைக் கண்டறிய அவர்களுக்கு உதவுமாறும் ஆயர்களை ஊக்குவித்த திருத்தந்தை, கத்தோலிக்கக் கல்வியின் முக்கியத்துவம், குடும்பங்களுக்கு வழங்க வேண்டிய ஆதரவு, குருத்துவ மற்றும் துறவற அழைத்தல்களை ஊக்குவித்தல் ஆகியவற்றையும் சுட்டிக்காட்டினார்.

சிறார்கள்மீதான பாலியல் முறைகேடு தொடர்பான வேதனையான பிரச்சினையை எதிர்கொள்வதில் ஆயர்கள் மேற்கொண்டுவரும் முயற்சிகளுக்கு நன்றி தெரிவித்த திருத்தந்தை, தொடர்ந்து விழிப்புடன் செயல்படுமாறும், குருக்களுக்கு ஆதரவாக இருக்குமாறும் கேட்டுக்கொண்டார்.

ஆயர்கள் அன்பில் ஒன்றுபட்டு, கருத்தியல் அடிப்படையிலான பிளவுகளைத் தவிர்க்க வேண்டும் என்று வலியுறுத்திய திருத்தந்தை, உரையாடல், நம்பிக்கை மற்றும் திருஅவையின் ஒன்றிணைந்த பயணம் ஆகியவற்றின் வழியாக உண்மையான கத்தோலிக்க ஒன்றிப்பு மேலும் செழுமை பெறுகிறது என்றும் கூறினார்.

இறுதியாக, “இயேசு கிறிஸ்துவை உண்மையாகவும் ஆர்வத்துடனும் மீண்டும் மீண்டும் அறியச் செய்து, அன்புகூரச் செய்வதே” பிரான்சில் திருஅவையின் மறைப்பணியைப் புதுப்பிப்பதற்கான நிலையான வழிகாட்டி என்று தெரிவித்து தனது உரையை திருத்தந்தை நிறைவு செய்தார்.