ஆதவ் அர்ஜுனாவை அமைச்சரைவில் இருக்கு நீக்க வேண்டும்: கிருஷ்ணசாமி வலியுறுத்தல்
ஆதவ் அர்ஜுனாவை அமைச்சரைவில் இருக்கு நீக்க வேண்டும்: கிருஷ்ணசாமி வலியுறுத்தல்
ஊழலற்ற ஆட்சியை கொடுப்பேன் என்று கூறிய முதல்வர் விஜய், ஆதவ் அர்ஜுனா விவகாரத்தில் மௌனம் சாதிக்க கூடாது என அறிவுறுத்தியுள்ளார்.
Published : June 9, 2026 at 3:53 PM IST
கோவை: தமிழ்நாட்டில் தூய ஆட்சி நடக்க வேண்டும் என்றால் ஆதவ் அர்ஜுனாவை அமைச்சரைவில் இருந்தும் நீக்க வேண்டும் என புதிய தமிழகம் கட்சித் தலைவர் கிருஷ்ணசாமி வலியுறுத்தியுள்ளார்.
புதிய தமிழகம் கட்சி தலைவர் கிருஷ்ணசாமி கோவை குனியமுத்தூரில் இன்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், "அமைச்சர் ஆதவ் அர்ஜுனாவின் துணைவியார், மாமியார் குறித்து 2 நாட்களாக எழுந்திருக்க கூடிய போதைப்பொருள் கடத்தல் கும்பல் உடனான தொடர்புகள் குறித்த தகவல்கள் அதிர்ச்சியாக உள்ளன. இதுதொடர்பாக கடந்த சில நாட்ளுக்கு முன்பு அமலாக்கத்துறை வெளியிட்டுள்ள அறிக்கை அதிர்ச்சி அளிக்கும் வகையில் அமைந்துள்ளது.
ஜான் பிரிட்டோ என்பவர் பல நாட்களாக போதைப்பொருளை கடத்தி வந்துள்ளார். அதன் மூலம் பெறப்பட்ட தொகையை உற்றார், உறவினருக்கு கைமாற்றி உள்ளார். இந்த விவகாரத்தில் ஜான் பிரிட்டோ, ஜான் கென்னடி, லால்குடி சட்டமன்ற உறுப்பினர் லீமா ரோஸ் மார்ட்டின், அமைச்சர் ஆதவ் அர்ஜுனாவின் துணைவியார் டெய்ஸி ஆகியோர் மீது சட்டவிரோத பணப்பரிமாற்ற நடவடிக்கைகளுக்காக வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. எனவே அவர்கள் வெளிநாடு தப்பி செல்லாமல் இருக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அதேசமயம் 2024-இல் எர்ணாகுளம் நீதிமன்றத்தில் அவர்கள் விதிவிலக்கு பெற்றுள்ளார்கள்.
ஜான் பிரிட்டோ, ஜான் கென்னடி, லீமா ரோஸ் ஆகியோர் கோவையை சேர்ந்தவர்கள். ஆதவ் அர்ஜுனா துணைவியார் சென்னையில் இருக்கிறார். இவர்கள் அனைவரும் நெருங்கிய நண்பர்கள் என்பது நீதிமன்ற ஆவணங்கள் மூலம் தெரியவருகிறது.
முதல்வர் விஜய் ஊழலற்ற ஆட்சியை கொடுக்க வேண்டும். மது, போதை இல்லாத ஆட்சி என்பதை தான் அவர்களது முக்கிய வாக்குறுதியாக கொடுத்துள்ளார். இந்நிலையில், தற்போதைய குற்றச்சாட்டை லேசான குற்றச்சாட்டாக எடுத்து கொள்ளக்கூடாது. இது சர்வதேச விவகாரமாக பார்க்க வேண்டும்" என்றார்.
மேலும் பேசிய அவர், "தீய ஆட்சி சென்று தூய ஆட்சி வர வேண்டும். ஆனால் தூய ஆட்சி என்று சொல்லக்கூடிய இந்த ஆட்சியில் ஆதவ் அர்ஜுனா முக்கிய முகமாக இருக்கிறார். எனவே ஆதவ் அர்ஜுனாவை தவெகவில் வைத்திருப்பது முறையா? அவர் அமைச்சரவையில் இருப்பது சரியா?. குற்றச்சாட்டுக்களில் இருந்து அவர்கள் விடுபடும் வரை ஆதவ் அர்ஜுனாவை முதல்வர் விஜய் பதவி நீக்கம் செய்ய வேண்டும். இந்த விஷயத்தில் விஜய் மெளனம் சாதிக்கக்கூடாது. அது அவருக்கு ஆபத்தாக மாறலாம்" என்று கிருஷ்ணசாமி அறிவுறுத்தினார்.