ஆசிய பாரா போட்டியில் ஒரே ஆட்டத்தில் இந்தியாவுக்கு தங்கம் மற்றும் வெள்ளி.. சாதித்த மோனா, அவனி
ஆசிய பாரா போட்டியில் ஒரே ஆட்டத்தில் இந்தியாவுக்கு தங்கம் மற்றும் வெள்ளி.. சாதித்த மோனா, அவனி
நகோயா: ஜப்பானின் நகோயா நகரில் தொடங்கியுள்ள 2026 ஆசிய பாரா விளையாட்டுப் போட்டியில், இந்தியா தனது பதக்க வேட்டையை இரட்டை வெற்றிகளோடு மிக பிரம்மாண்டமாகத் தொடங்கியது. பெண்களுக்கான 10 மீட்டர் ஏர் ரைபிள் எஸ்எச்1 துப்பாக்கிச் சுடுதல் பிரிவில், இந்தியாவின் மோனா அகர்வால் தங்கப் பதக்கத்தையும், நடப்பு சாம்பியனான அவனி லேகரா வெள்ளிப் பதக்கத்தையும் தட்டிச் சென்றுள்ளனர். முதல் நாளிலேயே தங்கம் மற்றும் வெள்ளி என இரண்டையும் ஒரே ஆட்டத்தில் அள்ளி இந்திய வீராங்கனைகள் சாதித்துள்ளனர்.
இரண்டு இந்திய சாம்பியன்களுக்கு இடையே நடைபெற்ற இந்த இறுதிப் போட்டி கடைசி புள்ளி வரை அனல் பறந்தது. போட்டி முழுவதும் ஆதிக்கம் செலுத்தி வந்த பாராலிம்பிக் தங்க மங்கை அவனி லேகரா, 2-வது கட்டத்தில் 9.7 புள்ளிகள் மட்டுமே சுட்டு சற்று சறுக்கினார். இந்த அரிய வாய்ப்பை கெட்டியாகப் பிடித்துக்கொண்ட மோனா அகர்வால், 250 புள்ளிகள் குவித்து புதிய ஆசிய சாதனையுடன் இந்த ஆண்டு ஆசிய பாரா விளையாட்டின் முதல் இந்திய தங்கப் பதக்கத்தை வென்றார். அவரை விட வெறும் 0.4 புள்ளிகள் மட்டுமே பின்தங்கிய அவனி லேகரா 249.6 புள்ளிகளுடன் வெள்ளிப் பதக்கத்தை வென்றார்.
தங்கம் வென்ற மோனா அகர்வாலின் வாழ்க்கை பயணம் எவராலும் அவ்வளவு எளிதில் கடந்துவிட முடியாத ஒரு போராட்டக் கதையாகும். ராஜஸ்தானைச் சேர்ந்த இவர் 9 மாதக் குழந்தையாக இருந்தபோதே போலியோ நோயால் தாக்கப்பட்டு 2 கால்களையும் இழந்தார். 2 குழந்தைகளின் தாயான இவர் சோர்ந்து போகாமல் பாரா தடகளம், பவர்லிஃப்டிங் மற்றும் சிட்டிங் கைப்பந்து என பல விளையாட்டுகளில் முத்திரை பதித்தார். கடந்த 2021 டிசம்பரில் தான் துப்பாக்கிச் சுடுதல் போட்டியில் தீவிரமாக இறங்கினார். குறுகிய காலத்திலேயே அபார வளர்ச்சி கண்ட மோனா, கடந்த 2024 பாரிஸ் பாராலிம்பிக்கில் வெண்கலப் பதக்கம் வென்றதோடு, அதே ஆண்டில் அர்ஜுனா விருதையும் பெற்றார்.
இந்த இறுதிப் போட்டியில் தென் கொரியா மற்றும் கஜகஸ்தான் வீராங்கனைகளின் கடுமையான போட்டியை முறியடித்து அவனி லேகரா வெள்ளிப் பதக்கத்தை உறுதி செய்தார். முதல் நாளிலேயே இந்திய வீராங்கனைகள் தங்கம், வெள்ளி என 2 பதக்கங்களை அள்ளி ஆசிய பாரா தொடரில் புதிய வரலாறு படைத்துள்ளனர்.