யூனிட்டுக்கு ரூ.35... மின்சாரம் வாங்க கொட்டப்படும் கோடிகள்... நிரந்தரத் தீர்வு என்ன தெரியுமா?
யூனிட்டுக்கு ரூ.35... மின்சாரம் வாங்க கொட்டப்படும் கோடிகள்... நிரந்தரத் தீர்வு என்ன தெரியுமா?
முந்தைய ஒப்பந்தங்களை ரத்து செய்து விட்டு செயற்கையான மின் தட்டுப்பாட்டை உருவாக்கி, தனியாருக்கு லாபம் தர இந்த மெகா ஊழலை செய்கிறது என்று அ.தி.மு.க பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி அறிக்கை வெளியிட்டார். பல்வேறு எதிர்க் கட்சிகளும் கண்டனங்கள் தெரிவித்திருந்தன.
தமிழ்நாட்டில் நிலவி வந்த மின் தட்டுப்பாட்டைச் சமாளிக்க, குறிப்பாக, மாலை மற்றும் இரவு நேரங்களில் அதிக மின்சார பயன்பாட்டை (Peak Hours usage) கையாள 4,500 மெகாவாட் மின்சாரத்தைத் தற்காலிகமாக வாங்குவதற்கு தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகம் குறுகிய கால டெண்டர் ஒன்றை வெளியிட்டது. அதில் பங்கேற்ற தனியார் மின் உற்பத்தி நிறுவனங்கள், ஒரு யூனிட் மின்சாரத்தை 31.99 முதல் 37 ரூபாய் வரை விற்பனை செய்யத் தயாராக இருப்பதாகக் குறிப்பிட்டு விண்ணப்பித்திருந்தன. இந்த டெண்டர் விவரங்கள் வெளியானதும் விவகாரம் சூடு பிடிக்கத் தொடங்கியது.
கொதித்தெழுந்த அரசியல் கட்சிகள்!
மின்சாரத்துறை முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி, தி.மு.க ஆட்சியில் அதிகபட்சமாக 20 ரூபாய்க்கு வாங்கப்பட்ட மின்சாரத்தை, தற்போதைய த.வெ.க அரசு 35 ரூபாய்க்கு வாங்குவதாகவும், இதில் மிகப்பெரிய முறைகேடு நடப்பதாகவும் குற்றம்சாட்டினார்.
’மக்களுக்காவே இந்த முடிவு!’
இதை அடுத்து செய்தியாளர்களைச் சந்தித்த மின்சாரத்துறை அமைச்சர்சி.டி.ஆர்.நிர்மல் குமார், ``மாலை 6 - நள்ளிரவு 12 மணி வரை நிலவும் மின் தட்டுப்பாட்டைச் சமாளிக்க, வெளிச்சந்தையில் எரிவாயு மூலம் தயாரிக்கப்படும் மின்சாரம் (Gas Power) ஒரு யூனிட் 35 ரூபாய்க்கு வாங்குவது உண்மைதான்.
அக்டோபர் 15 - 31 வரையிலான காலத்துக்கு மட்டுமே கொள்முதல் செய்யப்படும். இதன் மூலம் அரசுக்கு நாளொன்றுக்கு 5 கோடி ரூபாய் கூடுதல் செலவாகும். பொதுமக்களுக்கு 2 - 3 மணி நேர மின்வெட்டு ஏற்படுவதைத் தவிர்க்கவே இந்த அதிரடி முடிவு எடுக்கப்பட்டுள்ளது. வெளிச்சந்தையில் எரிவாயு மின்சாரம் மட்டுமே கிடைக்கிறது. அதன் அசல் உற்பத்திச் செலவே அதிகம் என்பதால் இந்த விலை நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாட்டின் மின் தேவை கடந்த ஆண்டைவிட 30% அதிகரித்துள்ளது. அக்டோபர் மாதத்தில் 16,800 மெகாவாட்டாக இருந்த தேவை நடப்பு அக்டோபர் மாதத்தில் 21,700 மெகாவாட்டாக அதிகரித்துள்ளது. மேலும், எல் நினோ காலநிலை மாற்றத்தால் கடுமையான வெயில் நீடிப்பதும், வழக்கமாகக் கிடைக்க வேண்டிய 3,500 மெகாவாட் காற்றாலை மின்சாரம் 500 மெகாவாட்டாகக் குறைந்ததும், என்.எல்.சி (NLC) மத்திய தொகுப்பில் இருந்து கிடைக்க வேண்டிய 1,850 மெகாவாட் மின்சாரம் தற்காலிகமாகக் கிடைக்காததுமே இந்தத் தட்டுப்பாட்டுக்குக் காரணம்.
கடந்த தி.மு.க ஆட்சியில் எதிர்கால மின் தேவையை முன்கூட்டியே கணித்து நீண்டகால மின் கொள்முதல் ஒப்பந்தங்களை செய்யத் தவறியதே தற்போதைய நெருக்கடிக்குக் காரணம்’’ என்று விளக்கம் அளித்தார்.
தீர்வு தான் என்ன?
முன்னாள், இந்நாள் ஆட்சியாளர்கள் மாறி மாறி குறை சொல்லிக் கொண்டிருந்தாலும், இந்தப் பிரச்னைக்கு நிரந்தரத் தீர்வு என்ன என்பதை ஆராய வேண்டும்.
அதுபற்றி விளக்குகிறார், அகில இந்திய மின்சாரத் தொழிலாளர்கள் சம்மேளத்தின் அகில இந்தியத் தலைவரும், தமிழ்நாடு மின்சாரத் தொழிலாளர்கள் சம்மேளத்தின் மாநிலப் பொதுச் செயலாளருமானஎஸ்.மூர்த்தி. “தமிழ்நாடு என்றுமே மின்மிகை மாநிலமாக இருந்ததில்லை. தமிழ்நாட்டில் மின்சார வரவை விட செலவே அதிகமாக உள்ளது. கடந்த 15 ஆண்டுகளாகவே மாநிலத் துக்குத் தேவையான மின்சாரத்தில் 4-ல் ஒரு பங்கு மட்டுமே சொந்தமாக உற்பத்தி செய்யப்படுகிறது. மீதம் மூன்று பங்கு பற்றாக்குறைதான் நீடிக்கிறது. தமிழகத்தின் சராசரி மின் தேவை ஒரு நாளைக்கு 17,000 மெகாவாட். உச்சகட்டமாக 21,000 மெகாவாட் வரை உள்ளது. இவற்றில் அதிகபட்சமாக 6,000 மெகாவாட் மட்டுமே மாநிலத்தில் உற்பத்தித் திறன் உள்ளது. 4000 முதல் 5000 மெகாவாட் வரை மட்டுமே உற்பத்தி நடைபெறுகிறது. சுமார் 15,000 மெகாவாட் வெளியில்தான் வாங்குகிறோம்.
முடங்கிய திட்டங்கள்!
முன்னாள் முதல்வர் ஜெயலலிதா ஆட்சிக் காலத்தில் எண்ணூரில் 800 மெகாவாட் உற்பத்தி செய்யும் ஓர் அலகு தொடங்கி 25 ஆண்டுகள் ஆகிவிட்டதால் அதை மூடிவிட்டு, மறு உற்பத்தி கொண்டு வர ஏற்பாடு செய்தார்கள். ஆனால், அது அப்படியே நின்று போனது. உடன்குடி திட்டமும் மாநிலத்துக்கான மின் தேவையை முழுமையாகப் பூர்த்தி செய்ய முடியாத நிலையிலேயே உள்ளது.
அதேபோல, வடசென்னை, தூத்துக்குடி உள்ளிட்ட மூன்று அனல்மின் நிலையங்களில் உற்பத்தி வழக்கத்தைவிட 1000 மெகாவாட் குறைவாகவே உள்ளது. தூத்துக்குடி அனல் மின் நிலையம் போர்க்கால அடிப்படையில் சீரமைக்கப்படும் என்று அமைச்சர் தெரிவித் துள்ளார். ஓர் அலகுக்கு 400 மெகாவாட் வரை உற்பத்தி செய்யும் தமிழகத்தின் பல்வேறு நீர்மின் நிலைய திட்டங்கள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.
அதானியின் மூன்று ரூபாய் பிசினஸ்!
ஆப்பிரிக்காவில் சோலார் மின்சாரம் யூனிட் மூன்று ரூபாய்க்குக் கொடுக்கிறது அதானி நிறுவனம். அதே நிறுவனம், தமிழகத்தில் ஒரு யூனிட் ஏழு ரூபாய்க்கு கொடுப்பதாக ஒப்பந்தம் போட்டுள்ளது. அதே மின்சாரத்தை நமது ஊரிலேயே இரண்டு ரூபாய்க்குக் கொடுக்கத் தயாராக இருக்கிறார்கள். இன்றைக்கு அனுமதி அளித்தால் மூன்று மாதங்களில் பத்தாயிரம் மெகாவாட் மின்சாரத்தை கொடுக்கத் தயாராக இருக்கிறார்கள். மின்வாரியத்தின் நலனுக்காகப் பணியாற்ற விரும்பினால், இதுபோன்ற விஷயங்களைச் செய்ய வேண்டும்.
நிதர்சனம் என்னவென்றால், சோலார் உற்பத்தி தொடர்பான விண்ணப்பத்தை எடுத்துக்கொண்டு மின்வாரிய தலைமை அலுவலகத் துக்குச் சென்றால், ஒருவரும் சீண்டக்கூட மாட்டார்கள். பல நாள்களாக அலைந்து கொண்டிருப்பவர்களும் இருக்கிறார்கள்.
நீர்மின் திட்டங்களை சரிசெய்வதே தீர்வு!
நம் வீட்டில் சமையல் செய்து சாப்பிட்டால் 1,000 ரூபாய் செலவில் பத்து பேர் சாப்பிடலாம். அதுவே ஹோட்டலில் போய் சாப்பிட்டால் 10 பேருக்கு 6,000 ரூபாய் செலவாகும். இதுதான் மின்வாரியத்திலும் நடக்கிறது. நீர்மின் திட்டங்களை சரி செய்வதோடு, சோலார் திட்டங்களுக்கு விரைந்து அனுமதி தருவது போன்றவற்றில் தீவிர கவனம் செலுத்தினாலே, மாநிலத்துக்குத் தேவைக்கான மின்சாரத்தை உற்பத்தி செய்து விடலாம். இதுபோன்று, நமது சொந்த உற்பத்தியில் இருக்கும் பிரச்னை களுக்குத் தீர்வு கண்டாலே மின்சார பற்றாக்குறையே இருக்காது.
மின்சார உற்பத்திக்கு ஒரு புதிய திட்டத்தைக் கொண்டு வந்து அதை செயல்படுத்துவதற்கு ஐந்தாண்டு களுக்கு மேல் ஆகிவிடும். ஐந்து ஆண்டுகளுக்குப் பிறகு ஆட்சி மாறி விடலாம். அதனால் எந்த அரசுமே, நீண்ட கால பயன்பாட்டுக்காக, தொலைநோக்குப் பார்வையோடு திட்டங்களை அமல்படுத்த முயற்சி எடுப்பதில்லை” என்கிறார்.
மின்சாரம் என்பது அன்றாடத் தேவையைத் தாண்டி, மாநிலத்தின் தொழில் வளர்ச்சியையும் பொருளாதாரத்தையும் தீர்மானிக்கும் முக்கியக் காரணி. எனவே, அரசியல் மாற்றங்களுக்கு அப்பாற்பட்டு, மின்சாரத் திட்டமிடலில் தொடர்ச்சியும் தொலைநோக்குப் பார்வையும் உறுதி செய்யப்பட வேண்டும்.