5 பாட்டில்களை ஒன்றாக திரும்பி தந்ததால்தான் பணம்; டாஸ்மாக் ஊழியர்கள் கறார்
5 பாட்டில்களை ஒன்றாக திரும்பி தந்ததால்தான் பணம்; டாஸ்மாக் ஊழியர்கள் கறார் - மதுப்பிரியர்கள் புலம்பல்
5 பாட்டில்களை ஒரே நாளில் குடித்தால் உயிருக்கு ஆபத்து வராதா? என மதுப்பிரியர்கள் கேள்வி எழுப்பியுள்ளனர்.
Published : September 6, 2026 at 10:08 PM IST
தூத்துக்குடி: டாஸ்மார்க் கடையில் மதுபாட்டில்களை திரும்பப்பெறும் திட்டத்தின் கீழ் 5 பாட்டில்களை மொத்தமாக திரும்பி தந்ததால் மட்டுமே பணம் தருவோம் என ஊழியர்கள் கறாராக கூறுவதாக மதுப்பிரியர்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.
டாஸ்மாக் கடைகளில் காலி மதுபாட்டில்களை திரும்பப்பெறும் திட்டம் மூலமாக காலி மது பாட்டிலை திருப்பிக் கொடுக்கும் போது ரூ. 10 திரும்ப வழங்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில், தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகே பாண்டவர்மங்கலத்தில் செயல்பட்டு வரும் ஒரு டாஸ்மாக் கடையில் 5 பாட்டில்களை கொண்டு வந்தால் மட்டும்தான் பணம் திரும்பி தரப்படும் என டாஸ்மாக் ஊழியர்கள் கறாராக கூறி வருகின்றனர்.
இதற்கான கடையில் 5 மது பாட்டில்களுக்கு 50 ரூபாய் தரப்படும் என்று எழுதி ஒட்டியும் வைத்துள்ளனர். டாஸ்மாக் கடையில் இந்த நிபந்தனையால், மதுப்பிரியர்கள் அவதி அடைந்துள்ளனர்.
இதுகுறித்து அந்த டாஸ்மாக் கடைக்கு மது வாங்க வந்த முத்து செல்வம் என்பவர் கூறுகையில், ”ஒரு பாட்டில் திரும்பி கொடுத்தால் வாங்க மறுக்கிறார்கள். 5 பாட்டில்கள் ஒன்றாக சேர்ந்து கொடுத்ததால்தான் பணம் தருவோம் என்று சொல்கிறார்கள். 5 பாட்டில்களை ஒரே நாளில் குடித்தால் உயிருக்கு ஆபத்து வரும் அல்லவா? ஒவ்வொரு பாட்டிலாக வீட்டில் கொண்டு போய் சேமிக்க முடியுமா? இதுகுறித்து டாஸ்மாக் கடையில் கேட்டால் சண்டைக்கு வருகிறார்கள்” என புலம்பினார்.
அதே போன்று மற்றொரு நபர் காசிராஜா கூறுகையில், “ஒரு நாளுக்கு ஒரு பாட்டில்தான் குடிக்க முடியும். அதனை திரும்பி கொடுத்தால் வாங்க மறுக்கிறார்கள். அப்போது அந்த திட்டம் எதற்கு இருக்கிறது. அதனை செயல்படுத்த முடியவில்லை என்றால் கடையை எதற்கு நடத்துகிறார்கள்” என்றார்.
இது தொடர்பாக ஊழியர்கள் தெரிவிக்கையில், ஒரு பாட்டிலுக்கு பத்து ரூபாய் என சிலரை கொடுக்க முடியவில்லை என்பதால், மொத்தமாக 5 பாட்டிலாக கேட்பதாக கூறுகிறார்கள். இதனிடையே, சிலர் ஒரு மதுபாட்டில் வாங்கிவிட்டு வெளியே சென்று மது அருந்துவதால், டாஸ்மார்க் கடையுடன் செயல்படும் பாரின் வியாபாரம் பாதிக்கப்படுவதால், ஒரு பாட்டில் கொடுத்தால் வாங்க மாட்டோம் என்று டாஸ்மார்க் ஊழியர்கள் மறுப்பதாக புகார் முன்வைக்கப்படுகிறது. அப்படி, பாருக்குள் அமர்ந்து அருந்துபவர்களுக்கு மட்டும் ஒரு பாட்டிலுக்கு பணத்தை பாரில் திரும்பி அளிக்கப்படுவதாகவும், அதனை பார் ஊழியர்கள் மொத்தமாக டாஸ்மாக்கில் கொடுத்து பணம் பெற்றுக்கொள்வதாகவும் மதுபிரியர்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.
பாரில் வியாபாரம் நடக்க வேண்டும் என்பதற்காக அரசு அறிவித்த நடைமுறையை இங்கு பின்பற்றுவதில்லை என மதுப்பிரியர்கள் புலம்பி வருகின்றனர்.