📅 Tuesday, 08 September 2026 IST | ஆவணி 23, பராபவ வருடம்
Tamilzha Alt Logo Text சார்பற்ற நடுநிலைச் செய்திகள்
முக்கிய செய்திகள்
Politics September 08, 2026 04:03 PM

திமுக

திமுக

சென்னை: சட்டசபையில் அமைச்சர்கள் மற்றும் திமுக மாறி குற்றம்சாட்டி பேசுவதால் அவையின் நேரம் வீணடிக்கப்படுகிறது என்று அதிமுக பொதுச் செயலர் இபிஎஸ் குற்றம்சாட்டி உள்ளார்.

சட்டசபைக்கு வெளியே நிருபர்களிடம் அவர் கூறியதாவது: சட்டசபையில் தினமும் ஏதாவது ஒரு பிரச்னை ஏற்படுகிறது. பட்ஜெட் கூட்டத்தொடரின் போதும் ஏற்பட்டது. மானியக் கோரிக்கை மீதான விவாதத்தின் போதும் பிரச்னை ஏற்படுவதால் மக்களின் பிரச்னையை முழுமையாக பேச முடியவில்லை. திமுக பேச முற்படும்போது அக்கட்சி மீது அமைச்சர்கள், ஆளுங்கட்சி எம்எல்ஏக்கள் குற்றச்சாட்டு சுமத்துகின்றனர். இதற்கு திமுக பதில் சொல்கிறது. இப்படி மாறி மாறி பதில் சொல்லி அவையின் 1 மணி நேரம் வீணடிக்கப்படுகிறது.

சபாநாயகர், இரு தரப்பிலும் சமாதானபடுத்திய பிறகு திமுக பேச ஆரம்பிக்கும்போது அமைச்சர் ஒருவர் எழுந்து திமுக, திமுக அரசு மீது குற்றச்சாட்டை சுமத்துவதால் ஒரு பிரச்னை உருவாகிறது. அதில் ஒரு மணி நேரம் வீணடிக்கப்படுகிறது.

இப்படி ஒரு நாள் 10 மணி நேரம் சட்டசபை நடப்பதாக அறிவிக்கிறார்கள். பெருமையாக சொல்கிறார்கள். ஒரு நாள் சட்டமன்றம் 10 மணி நேரம் நடக்கிறது என்றால் 3மணி நேரம் தான் மக்கள் பிரச்னை பற்றி பேசப்படுகிறது. எஞ்சிய நேரம் ஆளுங்கட்சியும், எதிர்க்கட்சியும் மாறி மாறி பேசி அவையின் பொன்னான நேரம் வீணடிக்கப்படுகிறது.

இதனால், எங்களைப் போல் எதிர்க்கட்சி வரிசையில் இருப்பவர்களால் முழுமையாக கருத்துகளை தெரிவிக்க முடியவில்லை. அப்படியே கருத்துகளை தெரிவித்தாலும் அமைச்சர்களிடம் உரிய பதில் கிடைப்பதில்லை. எம்எல்ஏக்கள் கேட்கும் கேள்விக்கு, ஒரு சில அமைச்சர்கள் தான் துறை சார்ந்து பதிலை சொல்கிறார்கள். எம்எல்ஏக்கள் கேட்கும் கேள்விக்கு மூன்று அமைச்சர்கள் தான் பதில் சொல்கின்றனர். மற்ற அமைச்சர்கள் பதில் சொல்வதில்லை. இதனால் எந்த பயனும் இல்லை.அந்தந்த துறை அமைச்சர்கள் அந்த துறை சம்பந்தப்பட்டு பதில் சொல்லும்போது தான் தீர்வு கிடைக்கும். இதுதான் வரலாறு. ஆனால், தவெக ஆட்சியில் சட்டசபை நிகழ்வுகளால் எம்எல்ஏக்கள் கேள்விக்கு, சம்பந்தப்பட்ட அமைச்சர்கள் பதில் சொல்வது இல்லை.

பதில் இல்லை

45 ஆண்டுக்கு முன்பு திமுக ஆட்சியில் நடந்த சம்பவத்தை சுட்டிக்காட்டி பேசுகின்றனர். அவையில் கலாட்டா நடக்கிறது. என்றைக்கோ நடந்தது. பொன்னான நேரத்தை வீணடிக்கின்றனர்.

நாங்கள் கேட்ட கேள்விக்கு பதில் இல்லாமல், ஆளுங்கட்சி எதிர்க்கட்சிக்கு இடையிலான பிரச்னையை மாறி மாறி பேசி அவையின் நேரத்தை வீண்டித்தது தான் இந்தத் தொடரில் கண்ட பலன்.

கொலை,கொள்ளை, திருட்டு வழிப்பறி, பாலியல் சீண்டல் உள்ளிட்டவை நீண்ட காலமாக இருக்கிறது. நாங்கள் வந்த பிறகு திடீரென நிறுத்த முடியாது என முதல்வர் சொல்கிறார். இப்படி சொல்வது தவறு. முதல்வரின் இலாகா காவல்துறை. அவர்கள் தான் தடுக்க வேண்டும். தடுப்பவர்களே இப்படிப்பட்ட பதிலை சொல்லும்போது யார் தடுப்பார்கள். யாரிடம் சொல்ல முடியும். தவெக அரசு செயலிழந்து விட்டது. இவ்வாறு இபிஎஸ் கூறினார்.