தமிழ்நாடு மின்சார வாரியத்தில் 15,000 பணியிடங்கள் விரைவில் நிரப்பப்படும்; அமைச்சர் நிர்மல் குமார் உறுதி
தமிழ்நாடு மின்சார வாரியத்தில் 15,000 பணியிடங்கள் விரைவில் நிரப்பப்படும்; அமைச்சர் நிர்மல் குமார் உறுதி
சென்னையில் நிலவும் குறைந்த மின்னழுத்தம் மற்றும் மின்வெட்டுப் பிரச்சனைகளுக்கு, 20 ஆண்டுகளுக்கும் பழமையான டிரான்ஸ்ஃபார்மர்கள் மற்றும் கேபிள்கள் சேதமடைவதே காரணம்.
Published : June 8, 2026 at 9:41 PM IST
சென்னை: தமிழக மின்சார வாரியத்தில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்பவும், துறையை நவீனப்படுத்தி ஊழலற்ற நிர்வாகத்தை உறுதி செய்யவும் தமிழக அரசு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாக எரிசக்தி மற்றும் சட்டத்துறை அமைச்சர் நிர்மல் குமார் தெரிவித்துள்ளார்.
தமிழ்நாடு மின்சார வாரியத்தில் 300 உதவி பொறியாளர்களுக்கு செயற்குறியாளர்களாக பதவி உயர்வை வழங்கியதற்காக எரிசக்தி மற்றும் சட்டத்துறை அமைச்சர் சி.டி.ஆர் நிர்மல் குமாருக்கு மின்வாரிய பொறியாளர்கள் சங்கம் சார்பில் பாராட்டு விழா, சென்னை அண்ணா சாலையில் உள்ள மின்வாரிய தலைமை அலுவலகத்தில் இன்று நடைபெற்றது.
இதில், அத்துறையின் அமைச்சர் சி.டி.ஆர் நிர்மல் குமார், மின்வாரிய தலைவர் ராதாகிருஷ்ணன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
அப்போது பேசிய அமைச்சர் நிர்மல் குமார், "அரசு பணியாளர்களுக்கு தேவையானதை நாங்கள் செய்து கொடுப்போம், பணியாளர்கள் மக்களுக்கு தேவையானதை செய்து கொடுக்க வேண்டும். முன்பு பதவி உயர்வுக்கு ஒரு தொகையும், பின்னர் பணியிடத்திற்கு ஒரு தொகையும் கொடுக்க வேண்டியிருந்தது. இந்த நிலை இப்போது தவிர்க்கப்பட்டுள்ளது.
45 ஆண்டுகளுக்கு பின்னர் தகுதியான வழக்கறிஞர்கள் சட்டத்துறையில் நியமிக்கப்பட்டு வருகிறார்கள். மின்சாரத் துறையில் விரைவில் 15 ஆயிரம் பணியாளர்கள் நியமிக்கப்பட உள்ளனர். ஐந்தாண்டுகளில் அனைத்து காலிப்பணியிடங்களும் நிரப்பப்படும். மேலும் தமிழ்நாடு மின்சார வாரியத்திற்கு தேவையான உள் கட்டமைப்பும் உருவாக்கப்படும். அத்துடன் நிர்வாகத்தின் 2.5 லட்சம் கோடி ரூபாய் கடனை தீர்ப்பதற்கான நடவடிக்கையும் எடுக்கப்படும்" என்றார்.
தொடர்ந்து அவர் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது பேசிய அவர், "15 ஆண்டுகளுக்கும் மேலாக உதவிப் பொறியாளர்களாகப் பணிபுரிந்து, பதவி உயர்வு கிடைக்காமல் சட்டப் போராட்டம் நடத்தி வந்த 300 ஊழியர்களுக்கு உடனடியாக பதவி உயர்வு வழங்கப்பட்டுள்ளது. முதலமைச்சர் விஜய்யின் உத்தரவின் பேரில், ஊழியர்களின் நீண்டகாலப் கோரிக்கைகள் நிறைவேற்றப்பட்டு உள்ளன.
மின்சார வாரியத்தில் தற்போது சுமார் 70 ஆயிரம் பணியாளர்கள் பற்றாக்குறை நிலவுகிறது. பணிச்சுமையைக் குறைக்கும் வகையில், முதற்கட்டமாக 15 ஆயிரம் பணியாளர்களைப் புதிதாக பணியமர்த்த வரைவு அறிக்கை தயாராகி வருகிறது.
முதலமைச்சரின் ஒப்புதலுக்குப் பின், இந்த ஆண்டிலேயே இப்பணியிடங்கள் அனைத்தும் தற்காலிகப் பணியிடங்களாக இல்லாமல், முழுமையான நிரந்தர அரசுப் பணியிடங்களாக நிரப்பப்படும். மேலும், கேங்மேன் (Gangman) பணியிடங்கள் தொடர்பான நிலுவை விவகாரங்களில் இன்னும் சில வாரங்களில் முறையான அறிவிப்பு வெளியாகும்" என தெரிவித்தார்.
மேலும் பேசிய அவர், "கடந்த காலங்களில் டெண்டர் மதிப்பீடுகளில் பெரும் முறைகேடுகள் நடந்துள்ளன. இனிமேல் சந்தை நிலவரம் மற்றும் உற்பத்தியாளர்களின் நேரடி விலையை அடிப்படையாகக் கொண்டு, 3 தனி குழுக்கள் மூலமாக மட்டுமே டெண்டர் மதிப்பீடுகள் தயார் செய்யப்படும். அடுத்த வாரத்தில் இருந்து இந்த புதிய முறை அமலுக்கு வருகிறது. இதன் மூலம் ஆண்டுக்கு 20,000 கோடி முதல் 30,000 கோடி ரூபாய் வரை அரசுக்கு மிச்சமாகும். முறைகேடு கண்டறியப்பட்ட முந்தைய டெண்டர்கள் ரத்து செய்யப்பட்டு, சி.பி.ஐ மற்றும் லஞ்ச ஒழிப்புத்துறை (Vigilance) விசாரணைக்கு அனுப்பப்பட்டுள்ளன.
சூரியசக்தி (Solar) மற்றும் காற்றாலை மின்சாரப் பயன்பாட்டுக்கான அனுமதிகளைப் பெறுவதில் கடந்த காலங்களில் இடைத்தரகர்கள் மூலம் பெரிய அளவில் முறைகேடுகள் நடந்து வந்தன. இதனை முற்றிலும் ஒழிக்க, புதிய வெளிப்படையான இணையதளம் இன்னும் சில நாட்களில் அறிமுகப்படுத்தப்பட உள்ளது. இதன் மூலம் நுகர்வோர்கள் மற்றும் சிறு உற்பத்தியாளர்கள் நேரடியாக ஆன்லைனில் விண்ணப்பித்து அனுமதி பெறலாம்.
தமிழகத்தில் தற்போது மின்சாரத் தட்டுப்பாடு என்பது கிடையாது. உபரியாக உள்ள மின்சாரத்தை மத்திய தொகுப்பிற்கு விற்று மின்சார வாரியம் வருவாய் ஈட்டி வருகிறது.