📅 Friday, 09 October 2026 IST | புரட்டாசி 23, பராபவ வருடம்
Tamilzha Alt Logo Text சார்பற்ற நடுநிலைச் செய்திகள்
முக்கிய செய்திகள்
Health October 09, 2026 07:00 AM

வறுமையில் வாடும் நகரவாசிகள்: ரிசர்வ் வங்கி சர்வேயில் அதிர்ச்சி

வறுமையில் வாடும் நகரவாசிகள்: ரிசர்வ் வங்கி சர்வேயில் அதிர்ச்சி

மும்பை: நம் நாட்டில் வசிக்கும் 54 சதவீதத்திற்கும் அதிகமான நகர்ப்புற குடும்பங்களின் பொருளாதார நிலை கடந்த ஓராண்டில் மோசமடைந்துள்ளதாக ரிசர்வ் வங்கி நடத்திய ஆய்வில் தெரியவந்துள்ளது. இதற்கு, வேலைவாய்ப்பு மற்றும் விலைவாசி உயர்வு குறித்த கவலைகள், மக்களின் நம்பிக்கையை பாதித்துள்ளதாக குறிப்பிட்டுள்ளது.

இந்திய ரிசர்வ் வங்கி சார்பில், 'நகர்ப்புற நுகர்வோர் நம்பிக்கை ஆய்வு' எனக் குறிப்பிட்டு, நாடு முழுதும் உள்ள 19 முக்கிய நகரங்களைச் சேர்ந்த 6,054 பேரிடம் கடந்த மாதம் கருத்துக்கணிப்பு நடத்தப்பட்டது. இந்த ஆய்வின் முடிவுகளை ரிசர்வ் வங்கி சமீபத்தில் வெளியிட்டது. அதன் விபரம்:

ஒட்டுமொத்தமாக, நம் நாட்டின் பொருளாதார நிலை மோசமடைந்துள்ளதாக 54.5 சதவீதம் பேர் கருத்து தெரிவித்துள்ளனர். ஜூலை மாதத்தில், இது, 50.5 சதவீதமாகவும், கடந்த ஆண்டு செப்டம்பரில், 40.9 சதவீதமாகவும் இருந்தது. அதேசமயம், பொருளாதார நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாக, 25.3 சதவீதம் பேர் தெரிவித்துள்ளனர். இது, ஜூலை மாதத்தில், 27.1 சதவீதமாக பதிவானது.

மக்களின் தற்போதைய பொருளாதார உணர்வை குறிக்கும் சி.எஸ்.ஐ., குறியீடு ஜூலை மாதத்தில் இருந்த 88.3 புள்ளிகளாக இருந்த நிலையில், கடந்த மாதம், 87.9 புள்ளிகளாக குறைந்துள்ளது. இதேபோல், அடுத்த ஆண்டின் பொருளாதார நிலைமை மேலும் மோசமடையும் என 38.3 சதவீதம் மக்கள் அச்சம் தெரிவித்துள்ளனர். இதன் காரணமாக எதிர்கால எதிர்பார்ப்பு குறியீடு, 115.3ல் இருந்து 113.5 புள்ளிகளாக குறைந்துள்ளது.

உணவு, எரிபொருள் உள்ளிட்ட விலைவாசி உயர்வு காரணமாக அத்தியாவசியப் பொருட்களுக்கான நுகர்வோர் செலவினங்கள் அதிகரித்துள்ளதால், ஆடம்பர மற்றும் பிற விருப்பம் சார்ந்த பொருட்களுக்கான செலவினங்களை நகர்ப்புற மக்கள் குறைத்து கொண்டுள்ளதும் தெரியவந்துள்ளது. இதுதவிர, வேலைவாய்ப்பு மற்றும் பணவீக்கம் ஆகியவை கவலைக்குரிய விஷயங்களாக தொடர்வதாக மக்கள் தெரிவித்துள்ளனர். இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.