விதிமீறிய ஆம்னி பஸ்களுக்கு ரூ.59 லட்சம் அபராதம் விதிப்பு
- நமது நிருபர் -
கூடுதல் கட்டணம் வசூல், வரி செலுத்தாதது என, விதி மீறல்களில் ஈடுபட்ட, 1,169 ஆம்னி பஸ்களுக்கு, 59.02 லட்சம் ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
தமிழக போக்குவரத்து துறை வெளியிட்ட அறிக்கை: பண்டிகை காலங்களில், சென்னையில் இருந்து 3,000 ஆம்னி பஸ்கள், தமிழகத்தின் பல்வேறு இடங்களுக்கு இயக்கப்பட்டு வருகின்றன. கடந்த ஐந்து நாட்களாக, தமிழகம் முழுதும் வட்டார போக்குவரத்து அலுவலர்கள் மற்றும் மோட்டார் வாகன ஆய்வாளர்கள் அடங்கிய 40 குழுக்கள் அமைக்கப்பட்டு, சிறப்பு வாகனத் தணிக்கை மேற்கொள்ளப்பட்டது.
விதிமீறல்கள் கண்டறியப்பட்ட 1,169 ஆம்னி பஸ்களுக்கு, தணிக்கை அறிக்கை மற்றும் 'இ- - சலான்' வழங்கப்பட்டது. கூடுதல் கட்டணம் வசூல், வரி செலுத்தாதது உள்ளிட்ட பல்வேறு விதி மீறல்கள் கண்டறியப்பட்டு, 59.02 லட்சம் ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.