காற்றாலை உற்பத்தி குறைந்ததே மின் பற்றாக்குறைக்கு காரணம்; அமைச்சர் நிர்மல்குமார் தகவல்
சென்னை: ''காற்றாலை மின்சாரம் குறைந்ததால், மின்சார சந்தையில், 3,500 மெகாவாட் மின்சாரம் கொள்முதல் செய்யப்படுகிறது. ஒரு யூனிட் விலை சராசரியாக, 20 ரூபாய் மேல் உள்ளது,'' என, மின் துறை அமைச்சர் நிர்மல்குமார் தெரிவித்தார்.
தமிழக மின் வினியோகம் தொடர்பாக, சென்னை மின் வாரிய தலைமை அலுவலகத்தில், அமைச்சர் நிர்மல் குமார், உயரதிகாரிகளுடன், நேற்று ஆய்வு கூட்டம் நடத்தினார்.பின், நிர்மல்குமர் பேட்டி: கடந்த ஒரு வாரத்தில் மின் பற்றாக்குறை ஏற்பட்டது. இதற்கு, காற்றாலை மின் உற்பத்தி குறைந்ததே காரணம். செப்டம்பரில் காற்றின் வேகம் குறையும் என்பதால், காற்றாலை மின் உற்பத்தி குறைகிறது.
கடந்த ஆண்டில் இதே மாதம் தமிழக மின் தேவை, 16,000 மெகா வாட்டாக இருந்த நிலையில், இம்மாதம், 19,000 மெகாவாட்டாக அதிகரித்துள்ளளது. கூடுதலாக, 3,000 மெகாவாட் மின் தேவை உள்ளது. எனவே, கடந்த வாரம், 2,000 மெகாவாட் மின்சாரம், வெளி சந்தையில் இருந்து கொள்முதல் செய்யப்பட்டது. இன்றும், காற்றாலை மின்சாரம் மேலும் குறைந்துள்ளது. இதனால் இன்றும், 1,500 மெகாவாட் கூடுதலாக வாங்கப்பட உள்ளது.
மற்ற மாநிலங்களில், மின்சார சந்தையில் விலை அதிகம் இருப்பதால், மின்சாரம் கொள்முதல் செய்யவில்லை. மின் வெட்டு அமல்படுத்தி, மின் கொள்முதலை குறைத்துள்ளனர்.பொது மக்களுக்கு சிரமம் ஏற்பட கூடாது என்பதற்காக, மின்சாரம் வாங்க வேண்டிய சூழல் ஏற்படுகிறது. தற்போது, 3,500 மெகா வாட் மின்சாரம் கொள்முதல் செய்யப்படுகிறது. ஒரு யூனிட் விலை சராசரியாக, 20 ரூபாய்க்கு மேல் உள்ளது. அக்., முதல் நீண்ட கால ஒப்பந்தத்தில் மின்சாரம் வாங்கப்படும். இவ்வாறு அவர் கூறினார்.