📅 Sunday, 13 September 2026 IST | ஆவணி 28, பராபவ வருடம்
Tamilzha Alt Logo Text சார்பற்ற நடுநிலைச் செய்திகள்
முக்கிய செய்திகள்
Latest News September 13, 2026 05:33 AM

உறவுகளை வலுப்படுத்தி சிங்கப்பூர்ச் சமூகத்தை ஒன்றிணைப்பது அவசியம்: பிரதமர் வோங்

உறவுகளை வலுப்படுத்தி சிங்கப்பூர்ச் சமூகத்தை ஒன்றிணைப்பது அவசியம்: பிரதமர் வோங்

சிங்கப்பூரில் மக்கள் பெரிதும் இன நல்லிணக்கத்துடன் வாழ்ந்துவந்தாலும் அண்மைய காலங்களில் இன வேறுபாடுகள் தொடர்பான சம்பவங்கள் அதிகரித்து வருகின்றன என்றும் நம் சமூகத்தைத் திடமாக வைத்திருக்கும் பிணைப்புகளையும் நம்பிக்கையையும் தொடர்ந்து வலுப்படுத்துவது அவசியம் என்றும் பிரதமர் லாரன்ஸ் வோங் கூறியுள்ளார்.

டௌன்டவுன் ஈஸ்ட்டில் அமைந்துள்ள டி’மார்க்கீ அரங்கில் நடைபெற்ற சிங்கப்பூர்க் கடையநல்லூர் முஸ்லிம் லீக்கின் 85ஆம் ஆண்டுநிறைவு விழாவில் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டு பேசியபோது பிரதமர் அவ்வாறு கூறினார்.

“அரசாங்கம் தொடர்ந்து வாழ்க்கைச் செலவினம், வேலைவாய்ப்புகள் போன்ற சவால்களைத் திட்டங்கள்வழி கையாண்டு வரும் அதே வேளையில் மக்கள் பிற சமூகத்தினரிடையே பிணைப்புகளை வலுப்படுத்துவதும் மிக முக்கியம்,” என்று அவர் வலியுறுத்தினார்.

அவ்வகையில் கடையநல்லூரிலிருந்து சிங்கப்பூருக்குக் குடிபெயர்ந்த தமிழர்களைச் சிங்கப்பூரில் ஒன்றுபடுத்த உதவிய கடையநல்லூர் முஸ்லிம் லீக்கிற்குப் பிரதமர் தமது வாழ்த்துகளைத் தெரிவித்தார்.

“நல்ல விதைகளை விதைத்தால் சிறப்பான அறுவடை இருக்கும். அவ்வகையில் இவ்வமைப்பு கல்வி, சுய உதவி, சேவை எனப் பல்வேறு நல்ல விதைகளை விதைத்து மக்களுக்கு உதவியுள்ளது,” என்றார் திரு வோங்.

பிரதமர் அலுவலக அமைச்சர் இந்திராணி ராஜா, முஸ்லிம் விவகாரங்களுக்குப் பொறுப்பு வகிக்கும் தற்காலிக அமைச்சரும் தற்காப்பு மூத்த துணை அமைச்சருமான ஸாக்கி முகம்மது, சட்டம், போக்குவரத்து மூத்த துணை அமைச்சர் முரளி பிள்ளை, கலாசார, சமூக, இளையர்துறை, மனிதவளத் துணை அமைச்சர் தினேஷ் வாசு தாஸ் ஆகியோரும் இவ்விழாவில் கலந்துகொண்டனர்.

கடையநல்லூர் முஸ்லிம் லீக் ‘இணை’ முயற்சிக்கும் ‘எம்கியூப்பிளஸ்’ முயற்சிக்கும் தொடர்ந்து ஆதரவளிக்குமென அதன் தலைவர் ராஜா முகம்மது உறுதியளித்தார்.

“கல்வி, முதியோர் உதவி ஆகிய முக்கியக் கூறுகளில் உதவி வழங்க இவ்வமைப்பு என்றும் முனையும்,” என்று அவர் கூறினார்.

இவையும் உங்களுக்குப் பிடிக்கலாம்

விழாவின் முக்கிய அங்கங்களில் ஒன்றாகத் தமிழ் வளர்ச்சிக் குழுவின் தலைவர் நசீர் கனிக்கு வாழ்நாள் சாதனையாளர் விருது வழங்கப்பட்டது.

நாற்பதாண்டுகளுக்கு மேலாக ஆசிரியராகப் பணிபுரிந்து, சிங்கப்பூர்க் கடையநல்லூர் முஸ்லிம் லீக், சிண்டா, முயிஸ் எனப் பல்வேறு அமைப்புகள்வழி திரு நசீர் கனி சமூகத்திற்குப் பங்காற்றியுள்ளார் என்று பிரதமர் குறிப்பிட்டார்.

சமூகத்தினரிடையே பிணைப்புகளை வளர்க்க அவரைப் போன்ற தலைவர்கள் மிகவும் முக்கியம் என்றும் திரு வோங் கூறினார்.

விழாவில் சிங்கப்பூர்க் கடையநல்லூர் முஸ்லீம் லீக் ‘அசென்ட்’ கல்வி நிதி அறிமுகப்படுத்தப்பட்டது.

உயர்கல்வி நிலையங்களில் மேற்படிப்பு படிக்கும் மாணவர்களுக்கு $250,000 மதிப்புள்ள அந்த நிதி உதவிகரமாக இருக்குமென அவ்வமைப்பு தெரிவித்தது.