தொடர்ந்து சரியும் தங்கம் விலை: இன்று பவுனுக்கு ரூ.760 குறைந்தது
சென்னை: தங்கம் விலை தொடர்ந்து மூன்றாவது நாளாக இன்றும் குறைந்துள்ளது. திங்கள் கிழமை தொடங்கி இன்றுடன் 3 நாட்களில் தங்கம் விலை பவுனுக்கு ரூ.1,040 குறைந்துள்ளது.
சர்வதேச பொருளாதார மற்றும் அரசியல் சூழல், கச்சா எண்ணெய் விலை, அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு, தங்கத்தின் மீதான முதலீடு, உலக பங்குச் சந்தை செயல்பாடு உள்ளிட்டவற்றின் அடிப்படையில் தங்கத்தின் விலை நிர்ணயிக்கப்படுகிறது.
உலக அளவில் தங்கத்தை இறக்குமதி செய்யும் நாடுகளில் இந்தியா முன்னணியில் உள்ளது. அமெரிக்கா - ஈரான் இடையிலான மோதலின் தாக்கம் உலக பொருளாதாரத்தில் எதிரொலித்து வருகிறது. அது சர்வதேச அளவில் தங்கம் விற்பனையிலும் தாக்கத்தை ஏற்படுத்தி உள்ளது.
அமெரிக்க ஃபெடரல் வங்கி இந்த மாதம் (அக்டோபர்) மீண்டும் வட்டி விகிதத்தை உயர்த்தக்கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இது தங்கத்தின் விலையில் எதிரொலிக்கும் என வல்லுநர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.
கடந்த மே மாதம் தங்கம் மீதான சுங்க வரியை 6 சதவீதத்தில் இருந்து 15 சதவீதமாக மத்திய அரசு உயர்த்தியது. இதோடு கடந்த செப்.1-ம் தேதி அன்று ‘தேவையின்றி தங்கம் வாங்காதீர்கள்’ என நாட்டு மக்களிடம் பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்தார்.
இதையடுத்து தங்கம் விலை சந்தையில் ஏற்ற இறக்கத்துடன் விற்பனை ஆகிறது. இந்த சூழலில் நேற்று ஒரே நாளில் காலை மற்றும் மாலை என தங்கம் விலை இரண்டு முறை குறைந்தது. அந்த வகையில் நேற்று மட்டும் பவுனுக்கு ரூ.1,280 குறைந்தது குறிப்பிடத்தக்கது.
இன்றைய விலை விவரம்:
இந்நிலையில், சென்னையில் 22 காரட் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று (அக்.14) கிராமுக்கு ரூ. 95 குறைந்து ஒரு கிராம் ரூ.13,590-க்கும், பவுனுக்கு ரூ.760 குறைந்து ஒரு பவுன் ரூ.1,08,720-க்கும் விற்பனையாகிறது.
சர்வதேச சந்தையில் தங்கம் விலை சரிவுக்கு முக்கிய காரணங்களில், அமெரிக்க டாலர் மதிப்பு கடந்த 18 மாத உச்சத்தில் இருப்பது முக்கியக் காரணமாக சொல்லப்படுகிறது.
அதுதவிர அமெரிக்க கடன் பத்திரங்களுக்கான வட்டி விகிதம் 5.27% ஆக உயர்ந்திருப்பதும் காரணமாக சொல்லப்படுகிறது. எனவே, கடன் பத்திரங்கள் மூலம் வட்டி அதிகம் தரும் கிடைப்பதால், வட்டி தராத தங்கத்தில் முதலீட்டாளர்கள் ஆர்வம் காட்டுவதில்லை. இதனுடன், அமெரிக்க பணவீக்க தரவு மீதான எதிர்பார்ப்பு மற்றும் உச்ச விலையில் நடக்கும் பிராஃபிட் புக்கிங் ஆகியவையும் தங்கம் விலை தொடர்ந்து குறைய காரணம் என்கின்றனர் நிபுணர்கள்.
வெள்ளி விலையில் இன்றும் மாற்றமில்லை. ஒரு கிராம் ரூ.245-க்கும். கட்டி வெள்ளி ஒரு கிலோ ரூ.2,45,000-க்கும் விற்பனையாகிறது.