ஆரணி மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் ஒரு மணி நேரத்திற்கும் மேலாகக் காற்றுடன் கனமழை: பொதுமக்கள் மகிழ்ச்சி!
ஆரணி மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் ஒரு மணி நேரத்திற்கும் மேலாகக் காற்றுடன் கனமழை: பொதுமக்கள் மகிழ்ச்சி!
திருவண்ணாமலை: திருவண்ணாமலை மாவட்டம், ஆரணி மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் ஒரு மணி நேரத்திற்கும் மேலாகக் காற்றுடன் கூடிய கனமழை பெய்து வருவதால், அப்பகுதிகளில் குளிர்ச்சியான சூழல் நிலவி வருகிறது. நாளை முதல் வடகிழக்குப் பருவமழை தொடங்கும் என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ள நிலையில், இன்று திருவண்ணாமலை மற்றும் ஆரணியின் பல்வேறு பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது.
ஆரணி மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளான களம்பூர், பையூர், இரும்பேடு, சேவூர் உள்ளிட்ட இடங்களில் மழை பெய்து வருகிறது. காலை முதலே வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்ட நிலையில், மாலை நேரத்தில் திடீரென வானிலையில் மாற்றம் ஏற்பட்டு, காற்றுடன் கூடிய கனமழை பெய்யத் தொடங்கியது. ஒரு மணி நேரத்திற்கும் மேலாக இடைவிடாமல் பெய்த கனமழையால் சாலைகளில் மழைநீர் பெருக்கெடுத்து ஓடியது. மேலும், பலத்த காற்றுடன் மழை பெய்ததால் ஆரணி மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் பல இடங்களில் மின்சாரம் துண்டிக்கப்பட்டது.
பள்ளிகள் விடும் நேரத்தில் மழை பெய்ததால், பள்ளி முடிந்து வீடு திரும்பிய மாணவ, மாணவிகள் மழையில் நனைந்தபடி செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டது. இதனால் அவர்கள் பெரும் சிரமத்திற்கு உள்ளாகினர். மேலும், சாலைகளில் மழைநீர் தேங்கியதால் வாகன ஓட்டிகளும் சிரமத்திற்கு ஆளாகினர்.
தொடர்ந்து பெய்து வரும் கனமழையால் ஆரணி மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் குளிர்ச்சியான சூழல் நிலவி வருகிறது. இதனால் பொதுமக்களும் விவசாயிகளும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். தற்போது வரை அப்பகுதிகளில் மழை தொடர்ந்து பெய்து வருவதால், பொதுமக்களின் இயல்பு வாழ்க்கையில் சில இடங்களில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.