📅 Tuesday, 13 October 2026 IST | புரட்டாசி 27, பராபவ வருடம்
Tamilzha Alt Logo Text சார்பற்ற நடுநிலைச் செய்திகள்
முக்கிய செய்திகள்
Tamil Nadu October 13, 2026 02:04 AM

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் நவராத்திரி பிரம்மோற்சவம் தொடங்கியது

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் நவராத்திரி பிரம்மோற்சவம் தொடங்கியது

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் நவராத்திரி பிரம்மோற்சவ விழா இன்று கோலாகலமாக தொடங்கியது. முதல் நாளான இன்று காலையில் தங்க திருச்சி வாகனத்தில் மலையப்ப சுவாமி எழுந்தருளினார்.

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் 3 ஆண்டுகளுக்கு ஒரு முறை நவராத்திரி பிரம்மோற்சவ விழா நடைபெறும். அவ்வகையில் இந்த ஆண்டு நவராத்திரி பிரம்மோற்சவ விழாவை விமரிசையாக நடத்த ஏற்பாடுகள் செய்யப்பட்டன.

விழாவை முன்னிட்டு நேற்று (ஞாயிற்றுக்கிழமை) இரவு 7 மணியில் இருந்து 8 மணி வரை யாக சாலையில் அங்குரார்ப்பணம் நடைபெற்றது. அதையொட்டி விஸ்வக்சேனர் தங்கத் திருச்சி வாகனத்தில் எழுந்தருளி கோவிலின் நான்கு மாட வீதிகளில் உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார். பின்னர் வைகானச ஆகம விதியின்படி நவராத்திரி பிரம்மோற்சவம் சிறப்பாக நடக்க வேண்டி ஏழுமலையானிடம் பிரார்த்தனை செய்து அங்குரார்ப்பணம் நடத்தப்பட்டது. விஸ்வக்சேனர் வசந்த மண்டபத்துக்கு ஊர்வலமாக சென்றடைந்ததும், அங்கு விஸ்வக்சேனர் முன்னிலையில் அர்ச்சகர்கள் புற்றுமண் சேகரித்து பூமி தாய்க்கு பூஜைகள் செய்தனர். பின்னர் 9 வகையான தானியங்கள் புற்றுமண்ணில் விதைக்கப்பட்டன. இந்தச் சடங்கு பீஜவாபனம் என்று அழைக்கப்படுகிறது.

அங்குரார்ப்பணம் ஏன்?

ஏழுமலையானின் அருளுடன் 9 நாட்கள் நடைபெறும் பிரம்மோற்சவம் வெற்றிகரமாக நடைபெற வேண்டும் என்ற சங்கல்பத்துடன் புனிதமான விதைகள் விதைக்கப்படுகின்றன. இவ்விதைகள் ஆரோக்கியமாக முளைத்து வருவது, திருவிழா மிகச் சிறப்பாகவும் வெற்றிகரமாகவும் நடைபெறுவதற்கான ஒரு மங்களகரமான அறிகுறியாகக் கருதப்படுகிறது. அங்குரார்ப்பணம் நிகழ்ச்சி முடிந்ததும் மறுநாளில் இருந்து பிரம்மோற்சவ விழா தொடங்கும்.

அதன்படி இன்று காலையில் பிரம்மோற்சவ விழா தொடங்கியது. காலையில் தங்க திருச்சி வாகனத்தில் ஸ்ரீதேவி மற்றும் பூதேவி சமேதராக மலையப்ப சுவாமி வாகனத்தில் எழுந்தருளி மாட வீதிகளில் வலம் வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார். நான்கு மாட வீதிகளில் திரண்டிருந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள் பகவானை தரிசனம் செய்தனர். பிரம்மோற்சவ விழா 20-ந்தேதி வரை 9 நாட்கள் தொடர்ந்து நடைபெறுகிறது.

பிரம்மோற்சவ விழாவை முன்னிட்டு திருமலையில் விரிவான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. கோவில் முழுவதும் வண்ண வண்ண மலர்களால் பிரம்மாண்டமாக அலங்காரம் செய்யப்பட்டுள்ளது. கோவில் வளாகம் மற்றும் மாட வீதிகளில் மின்விளக்குகளால் அலங்காரம் செய்யப்பட்டுள்ளது.