திங்கள்கிழமை பேசுறேன் ஓடிடாதீங்க...முதல்வர் விஜய் ஸ்பீச்!
சென்னை : தமிழக சட்டமன்றத்தில் இன்று முதல்வர் விஜய் தன் வசம் வைத்திருக்கும் காவல்துறை மீதான மானியக் கோரிக்கை விவாதம் மிக காரசாரமாக நடைபெற்றது. இந்த விவாதத்தின் போது ஆளுங்கட்சி மற்றும் எதிர்க்கட்சித் தலைவர்கள் இடையே வார்த்தைப் போர் உச்சக்கட்டத்தை எட்டியது. குறிப்பாக, தமிழக எதிர்க்கட்சித் தலைவரான திமுகவின் உதயநிதி ஸ்டாலினும், தமிழக முதலமைச்சரும் தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவருமான விஜய் பேசிய சம்பவங்கள் சட்டப்பேரவையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தின.
சட்டப்பேரவையில் எழுந்து பேசிய எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின், தற்போதைய ஆளுங்கட்சியின் செயல்பாடுகளை மிகக் கடுமையாக விமர்சித்தார். அவையில் எந்தவொரு துறையைப் பற்றிக் கேள்வி கேட்டாலும் சம்பந்தப்பட்ட துறை அமைச்சர் பேசாமல், அதற்குப் பதிலாக இன்னொரு அமைச்சர் எழுந்து பதில் சொல்வதாகக் குற்றம் சாட்டினார்.
இது ஏதோ டிவி சீரியல்களில் வருவது போல 'இவருக்கு பதில் இவர்' என்கிற பாணியில் இருப்பதாக அவர் சாடினார். மேலும், காவல்துறையின் மானியக் கோரிக்கை மீதான முதல்வரின் பதிலுரைக்கு இன்னும் மூன்று நாள்கள் நேரமிருக்கிறது என்று சுட்டிக்காட்டிய அவர், முதல்வர் நன்றாக முன் தயாரிப்பு செய்துவிட்டு அவைக்கு வரட்டும் என்று கூறினார்.
உதயநிதி ஸ்டாலினின் இந்த கடுமையான விமர்சனங்களுக்குப் பேரவையில் திடீரென எழுந்த முதலமைச்சர் விஜய் மிக நிதானமாகவும், அதே சமயம் அழுத்தமாகவும் பதிலடி கொடுத்தார். எதிர்க்கட்சி உறுப்பினர்கள் அவையில் எழுப்பும் அனைத்துக் கேள்விகளுக்கும், அதற்கான தெளிவான மற்றும் விரிவான விளக்கத்தை வரும் திங்கள்கிழமை அன்று தனது பதிலுரையில் நான் கண்டிப்பாகக் கொடுக்கிறேன் என்று கூறினார்.
தான் ஒருவேளை சட்டமன்ற அவைக்குள் நேரடியாக இல்லாவிட்டாலும், உறுப்பினர்கள் இங்கே பேசும் ஒவ்வொரு கேள்வியும், விபரமும் உடனுக்குடன் தன் கைக்கு வந்து சேர்ந்துவிடும் என்று அவர் குறிப்பிட்டார். இறுதியாக, திங்கள்கிழமை தான் விரிவாகப் பேசும்போது அவையில் இருக்கும் எதிர்க்கட்சியினர் யாரும் பயந்து நடுங்கி பாதியிலேயே எழுந்தரித்து ஓடிவிடக் கூடாது என கூறி முதலமைச்சர் விஜய் அவையை விட்டு வெளியேறினார்.
முதல்வர் விஜய் அவையை விட்டு வெளியேறிய உடனே மீண்டும் எழுந்த உதயநிதி ஸ்டாலின், கடந்த காலங்களில் கடைசியாக அவையை விட்டு யார் ஓடினார் என்பது தமிழ்நாட்டு மக்கள் எல்லாருக்குமே நன்றாகத் தெரியும் என்று குறிப்பிட்டார். இப்போது கூடப் பேசிவிட்டு அவர்தான் ஓடிவிட்டார் என விஜய்யை மறைமுகமாக வம்புக்கு இழுத்தார். இதற்கு உடனடியாக ஆளுங்கட்சித் தரப்பிலிருந்து குறுக்கிட்டுப் பதிலளித்த அமைச்சர் ஆனந்த், முதலமைச்சருக்கு எந்த விஷயத்தை எப்போது பேச வேண்டும், எப்படிப் பேச வேண்டும் என்பது மிக நன்றாகத் தெரியும் என்று கூறினார். கடந்த கால திமுக ஆட்சியில் தவெகவுக்கு எவ்வளவு தொல்லைகள் கொடுக்கப்பட்டன என்பது தனக்கு நன்றாகத் தெரியும் என்று கூறினார்.