📅 Sunday, 18 October 2026 IST | ஐப்பசி 1, பராபவ வருடம்
Tamilzha Alt Logo Text சார்பற்ற நடுநிலைச் செய்திகள்
முக்கிய செய்திகள்
Cinema October 18, 2026 03:01 PM

தேவாவுக்கு நிம்மதியை கொடுத்த ஸ்ரீகாந்த் தேவா.. மகனை நினைத்து திருப்தியோடு போயிருக்காரு

தேவாவுக்கு நிம்மதியை கொடுத்த ஸ்ரீகாந்த் தேவா.. மகனை நினைத்து திருப்தியோடு போயிருக்காரு

சென்னை: இசையமைப்பாளர் தேவா நேற்று வீட்டில் இருந்தபோது ஏற்பட்ட மாரடைப்பால் உயிரிழந்தார். அவரது சொந்த ஊரான சக்கரமல்லூரில் இறுதி சடங்குகள் நடக்கவிருக்கின்றன. அதற்காக சென்னையிலிருந்து அவர் அங்கே அழைத்து செல்லப்படுகிறார். இந்நிலையில் தனது மகன் ஸ்ரீகாந்த் தேவா குறித்து அவர் அளித்த த்ரோபேக் பேட்டி சோஷியல் மீடியாவில் கவனத்தை ஈர்த்திருக்கிறது.

கோலிவுட்டில் தவிர்க்க முடியாத இசையமைப்பாளர்களில் ஒருவர் தேவா. சென்னை தூர்தர்ஷனில் வேலை செய்துகொண்டே சினிமாவில் இசையமைக்கும் வாய்ப்புகளை தேடினார். நீண்ட போராட்டங்களுக்கு பிறகு சினிமா கதவு திறந்து. உள்ளே வந்தாலும் நிலைப்பது அவருக்கு அவ்வளவு எளிதாக இல்லை. ஏனெனில் ஒருபக்கம் இளையராஜாவும், இன்னொரு பக்கம் ஏ.ஆர்.ரஹ்மானும் இருந்தார்கள். இருப்பினும் திறமையும், வலுவும் இருந்தால் கான்க்ரீட் காடுகளிலும் பூ முளைக்கும் என்பதற்கு ஏற்ப; தேவாவின் புகழ் பூத்தது.

தேனிசை தென்றல்: கானா பாடல்கள், மெலோடி பாடல்களை கொடுத்து தனக்கென தனி மார்க்கெட்டை உருவாக்கினார். அவர் வந்த பிறகுதான் கானா கலைஞர்களுக்கும், கலைக்கும் புத்துயிர் கிடைத்தது என்றே சொல்லலாம். அந்த அளவுக்கு அக்கலையை மக்களிடம் கொண்டு சேர்த்தார். ஏகப்பட்ட தரமான பாடல்களை கொடுத்தாலும்; விருதுகள் பெரிய அளவில் அவருக்கு சேரவில்லை. இருப்பினும் மக்கள் கொடுத்த விருதே போதும் என்று நினைத்து உழைப்பை விடாதவர் அவர்.

உயிரிழந்த தேவா: தனுஷுக்கு வந்த தேவதையை கண்டேன் படம்வரை தேவா இசையமைத்த பாடல்கள் ஹிட்தான். ஒருகட்டத்தில் வாய்ப்புகள் குறைந்ததை அடுத்து சினிமாவிலிருந்து ஒதுங்கினார். பிறகு அனிருத், ஏ.ஆர்.ரஹ்மான் இசையில் பாடல்கள் பாடினார். தனுஷ் ஒரு படத்தில் வில்லனாககூட நடிக்க கேட்டார். தேவா மறுத்துவிட்டார். சூழல் இப்படி இருக்க நேற்று கோடம்பாக்கத்தில் இருக்கும் தனது வீட்டில் இருந்தபோது மாரடைப்பு ஏற்பட்டிருக்கிறது. உடனடியாக அருகே இருக்கும் சூர்யா மருத்துவமனைக்கு அழைத்து சென்றார்கள். ஆனால் செல்லும் வழியிலேயே உயிர் பிரிந்துவிட்டது.

ட்ரெண்டாகும் பேட்டி: அவரது உடல் இன்று சொந்த ஊரான ஆற்காடு மாவட்டம் சக்கரமல்லூரில் அரசு மரியாதையுடன் நல்லடக்கம் செய்யப்படுகிறது. இந்நிலையில் அவர் தன் மகன் குறித்து அளித்த பேட்டி கவனத்தை ஈர்த்திருக்கிறது. அந்தப் பேட்டியில் அவர், "ஸ்ரீகாந்த் தேவாவிடம் நல்ல விஷயம் ஒன்று உண்டு. எல்லோரிடமும் நன்றாக பழகுகிறார். அதில் நடிப்பு இல்லை. நல்ல பிள்ளையை பெற்று நல்ல பிள்ளை வளர்த்திருக்கிறீர்கள் என்றுதான் மற்றவர்கள் சொல்ல வேண்டும்.

அதுதான் இசையைவிட பெரிது. நன்றாக இசையமைக்கிறார்; ஆனால் திமிரை கொஞ்சம் குறைத்துக்கொண்டால் நன்றாக இருக்கும் என சொல்லக்கூடாது. தன்மையாக இருக்கிறார் என்று சொல்ல வேண்டும். சங்கீதத்தைவிட இங்கீதம் முக்கியம். இரண்டு பாடல்கள் ஹிட்டானலே தலையில் கொஞ்சம் ஏறிவிடுகிறது. அது ஸ்ரீகாந்த் தேவாவிடம் இல்லை. அதை நினைத்து எனக்கு நிறைய சந்தோஷமாக இருக்கிறது" என்றார்.