’தேவா’ டைட்டிலிலேயே நடித்த முதல்வர் விஜய்.. தேனிசைத் தென்றல் மறைவுக்கு ஆழ்ந்த இரங்கல்
சென்னை: இசையமைப்பாளர் தேவா இசையில் படத்தின் டைட்டிலும் 'தேவா' என்றே வைத்து விஜய் நடித்த படம் 1995ம் ஆண்டு வெளியானது. அந்த படத்தில் இடம்பெற்ற "அய்யய்யோ அலமேலு" பாடல், "ஒரு கடிதம் எழுதினேன்" பாடல் எல்லாம் இன்றைக்கும் ஏகப்பட்ட இசை சேனல்களை வாழ வைத்துக் கொண்டிருக்கிறது.
தேவாவின் மறைவு செய்தி அறிந்து அதிர்ச்சியடைந்த முதலமைச்சர் விஜய் தனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துள்ளார். தேவா இசையில் மட்டுமின்றி தேவா மகன் ஸ்ரீகாந்த் தேவா இசையிலும் விஜய் நடித்துள்ளார்.
பேரரசு இயக்கத்தில் விஜய் நடித்த சிவகாசி படத்துக்கு ஸ்ரீகாந்த் தேவா தான் இசையமைப்பாளர் என்பது கூடுதல் தகவல்.
முதலமைச்சர் விஜய் இரங்கல்: "தமிழ்த் திரையுலகின் தனித்துவமான இசையமைப்பாளரும், கானா பாடல்களால் எளிய மக்களின் மனங்களைக் கவர்ந்தவருமான 'தேனிசைத் தென்றல்' திரு.தேவா அவர்கள் மறைந்த செய்தியறிந்து மிகுந்த அதிர்ச்சியும், ஆழ்ந்த வேதனையும் அடைந்தேன்.
தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் ஆகிய மொழிகளில் 400-க்கும் மேற்பட்ட திரைப்படங்களுக்கு இசையமைத்ததோடு, பல கானா பாடல்களை எழுதி, அவரே பாடியும் உள்ளார். கலைமாமணி உள்ளிட்ட பல்வேறு விருதுகளைப் பெற்ற திரு.தேவா அவர்களின் இசைப் பயணமும், பாடல்களும் திரையிசை வரலாற்றில் என்றும் நிலைத்திருக்கும். அவரது மறைவு தமிழ்த் திரையுலகிற்கு பேரிழப்பாகும்.
இசையமைப்பாளர் திரு.தேவா அவர்களை இழந்துவாடும் குடும்பத்தினருக்கும், உறவினர்களுக்கும், நண்பர்களுக்கும், திரைத்துறையினருக்கும், இசை ரசிகர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபங்களையும் தெரிவித்துக் கொள்கிறேன்." என முதலமைச்சர் விஜய் பதிவிட்டுள்ளார்.
தேவா - விஜய் காம்போ: ரசிகன் (1994), தேவா (1995), விஷ்ணு (1995), மாண்புமிகு மாணவன் (1996), காலமெல்லாம் காத்திருப்பேன் (1997), ஒன்ஸ்மோர் (1997), நேருக்கு நேர் (1997), ப்ரியமுடன் (1998), நினைத்தேன் வந்தாய் (1998), மின்சாரக் கண்ணா (1999), குஷி (2000) என விஜய்க்கு ஏகப்பட்ட படங்களுக்கு தேவா இசையமைத்துள்ளார். தேவா இசையில் விஜய் பாடிய பாடல்களும் சூப்பர் டூப்பர் ஹிட் அடித்துள்ளன. “இந்த பாடலை பாடியவர் விஜய்” என முதன் முதலில் தேவா இசையில் தான் விஜய் "பம்பாய் சிட்டி சுக்கா ரொட்டி” பாடலை பாடி பாடகராகவும் அறிமுகமானார்.
கமல்ஹாசன் இரங்கல்: "அன்புச் சகோதரர் தேவா மறைந்துவிட்டார் என்கிற செய்தி அதிர்ச்சி அளிக்கிறது. உற்சாகமும் துறுதுறுப்பும் சிறு நகைச்சுவைக்கும் பெரிதாகச் சிரிக்கும் இயல்பும் கொண்டு வளையவந்தவர். அவ்வை சண்முகி, பம்மல் கே சம்பந்தம், பஞ்சதந்திரம் படங்களில் நாங்கள் இணைந்து வேலை செய்த காலங்களின் கலகலப்பு நினைவில் எழுகிறது.
அவருக்கு என் அஞ்சலி. அவரது குடும்பத்தாருக்கும் என் ஆறுதல்களும் இரங்கல்களும்." என கமல்ஹாசனும் இரங்கல் தெரிவித்துள்ளார். டி.ராஜேந்தர், விஜய் சேதுபதி என பல பிரபலங்களும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.