📅 Sunday, 11 October 2026 IST | புரட்டாசி 25, பராபவ வருடம்
Tamilzha Alt Logo Text சார்பற்ற நடுநிலைச் செய்திகள்
முக்கிய செய்திகள்
Politics October 11, 2026 06:04 PM

தேர்தல் ஆணையத்துக்கு ஆதரவாக முன்னாள் அதிகாரிகள்

தேர்தல் ஆணையத்துக்கு ஆதரவாக முன்னாள் அதிகாரிகள்

புதுடெல்லி: தேர்தல் ஆணையத்துக்கும் வாக்காளர் பட்டியலின் சிறப்புத் தீவிரத் திருத்தப் பணிகளுக்கும் (எஸ்ஐஆர்) எதிர்ப்புத் தெரிவித்து நாடு முழுவதும் போராட்டம் நடந்து வரும் நிலையில், தேர்தல் ஆணையத்துக்கு ஆதரவாக முன்னாள் ஐஏஎஸ், ஐஎஃப்எஸ் மற்றும் பிற குடிமைப் பணி அதிகாரிகள் ஒன்றாகக் கைகோத்துள்ளனர்.

தேர்தல் ஆணையத்தின் செயல்பாடுகள் நியாயமானவை என ஓய்வுபெற்ற 124 அதிகாரிகள் பொதுமக்களுக்காக வெளியிட்டுள்ள கடிதத்தில் விளக்கியுள்ளனர்.

வாக்குச்சாவடியைக் கைப்பற்றுதல், வாக்குப்பெட்டிகளில் போலி வாக்குகளைத் திணித்தல் மற்றும் தேர்தல் வன்செயல்கள் நிறைந்த ஒரு காலகட்டத்திலிருந்து இந்தியாவின் தேர்தல் முறை படிப்படியாக முன்னேற்றம் கண்டு வந்துள்ளதாக அந்த அதிகாரிகள் குறிப்பிட்டுள்ளனர்.

மேலும், தற்போதைய வாக்குப் பதிவு முறையில் பல்வேறு பாதுகாப்பு அம்சங்கள் இருப்பதாகவும் அவர்கள் தெரிவித்துள்ளனர். மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களை முத்திரையிட்டு பாதுகாக்கப்பட்ட அறைகளில் வைப்பது, வாக்களித்த விவரத்தை தாள் தணிக்கைச் சோதனை மூலம் அவற்றில் சில என அவர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

2025 பீகார் சட்டப்பேரவைத் தேர்தலை உதாரணமாகக் குறிப்பிட்டுள்ள அந்த முன்னாள் அதிகாரிகள், அந்தத் தேர்தலில் எங்கும் மறுவாக்குப்பதிவு நடைபெறவில்லை என்றும் 1951ஆம் ஆண்டுக்குப் பிறகு ஆக அதிக அளவிலான வாக்குப்பதிவு அந்தத் தேர்தலில் பதிவானதாகவும் தெரிவித்துள்ளனர்.

“மத்தியில் ஆளும் பாரதிய ஜனதா கட்சி, இதே தேர்தல் ஆணையத்தின்கீழ் பல மாநிலத் தேர்தல்களில் தோல்வியுற்றதோடு 2024 மக்களவைத் தேர்தலில் பெரும்பான்மை பலத்தை இழந்தது.

“நாங்கள் எந்தக் கட்சியையும் சார்ந்தவர்கள் அல்ல. எவ்வித ஆதாரமும் இன்றி, மீண்டும் மீண்டும் தேர்தல் நடைமுறை மீது குற்றம் சாட்டப்படுகிறது. இது ஜனநாயக அமைப்புகள் மீதான பொதுமக்களின் நம்பிக்கையைச் சீர்குலைத்துவிடும்.

“வெற்றி பெறும்போது நேர்மை என்றும் தோற்கும்போது முறைகேடு என்றும் முரண்பாடாகக் கூறும் அளவுக்கு ஓர் அமைப்பு இயங்க முடியாது. கேள்வி கேட்பது ஒவ்வொரு குடிமகனின் உரிமை. ஆனால் அதனை நிரூபிப்பது குற்றம் சாட்டுபவரின் கடமை,” என்றும் அவர்கள் அந்தக் கடிதத்தில் குறிப்பிட்டுள்ளனர்..

இவையும் உங்களுக்குப் பிடிக்கலாம்

கடிதத்தில் கையெழுத்திட்டுள்ள 124 முன்னாள் அதிகாரிகளில் முன்னாள் வெளியுறவுச் செயலாளர் கன்வல் சிபல், முன்னாள் ஐஏஎஸ் அதிகாரிகள் ஆர்.டி. கபூர், சமீரந்திர சாட்டர்ஜி, கோபால் கிருஷ்ணா, விவேக் பரத்வாஜ், நவநீத் சேகல் ஆகியோர் குறிப்பிடத்தக்கவர்கள்.