📅 Wednesday, 09 September 2026 IST | ஆவணி 24, பராபவ வருடம்
Tamilzha Alt Logo Text சார்பற்ற நடுநிலைச் செய்திகள்
முக்கிய செய்திகள்
Tamil Nadu September 09, 2026 11:04 AM

த.வெ.க நிர்வாகி கண்ணன் கொலை வழக்கு

த.வெ.க நிர்வாகி கண்ணன் கொலை வழக்கு

த.வெ.க நிர்வாகி கண்ணன் கொலை வழக்கு - பள்ளி மாணவர்கள் உள்பட மேலும் 4 பேர் கைது

கைது செய்யப்பட்ட 4 பேரில் 3 பேர் பள்ளி மாணவர்கள் என்பதால் அவர்களை சிறார் நீதிக் குழுமத்தில் ஆஜர்படுத்தி, கெல்லீஸ் பகுதியில் உள்ள சிறுவர்கள் சீர்திருத்த இல்லத்தில் போலீசார் சேர்த்தனர்.

Published : September 9, 2026 at 7:52 AM IST

சென்னை: த.வெ.க நிர்வாகி கண்ணனை ஓட ஓட வெட்டிப் படுகொலை செய்யப்பட்ட வழக்கில் மேலும் 4 பேரை போலீசார் கைது செய்துள்ளனர். இதில் 3 பேர் பள்ளி மாணவர்கள் எனும் அதிர்ச்சியளிக்கும் தகவல் வெளியாகியுள்ளது.

சென்னை பெசன்ட் நகர் அடுத்த வண்ணாந்துறை ராமசாமி அவென்யூ எல்லையம்மன் கோயில் தெரு பகுதியில், கடந்த 5ஆம் தேதி இரவு, ‘பி’ பிரிவு சரித்திரப் பதிவேடு குற்றவாளியும், த.வெ.க நிர்வாகியுமான கண்ணன் நின்று கொண்டிருந்தபோது, இருசக்கர வாகனங்களில் வந்த கும்பல், அவரை ஆயுதங்களால் தாக்கியது. உயிர் தப்புவதற்காக கண்ணன் ஓடியபோதும், அவரை விரட்டிச் சென்ற அந்த கும்பல் சரமாரியாக வெட்டியது.

த.வெ.க கண்ணன் கொலை

கண்ணனுடன் இருந்த அவரது நண்பர்கள், கொலைவெறி கும்பல் மீது கற்களை வீசி தாக்குதல் நடத்தியும், கொலையாளிகள் அவரை சம்பவ இடத்திலேயே சாய்த்துவிட்டு சென்றனர். இந்த கொலை சம்பவம் தொடர்பான சி.சி.டி.வி காட்சிகளும் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தின.

இதுகுறித்து சாஸ்திரி நகர் போலீஸார் வழக்குப்பதிவு செய்து, தனிப்படை அமைத்து விசாரணை நடத்தினர். சி.சி.டி.வி காட்சிகள் மற்றும் காவல்துறையினருக்கு கிடைத்த பல்வேறு ஆதாரங்களின் அடிப்படையில், அடையாறு ருக்மணி நகர் பகுதியைச் சேர்ந்த பரணி (20), ராகேஷ் (20), நரேஷ் (20), ஹரிகரன் (20), மணிகண்டன் (20) ஆகிய 5 பேர் ஏற்கெனவே கைது செய்யப்பட்டனர். இவர்கள் சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு செப்டம்பர் 21ஆம் தேதி வரை நீதிமன்றக் காவலில் வைக்கப்பட்டுள்ளனர்.

சிக்கிய சிறார்கள்

இந்நிலையில், கைது செய்யப்பட்டவர்களிடம் நடத்தப்பட்ட தொடர் விசாரணையில், மேலும் 4 பேருக்கு கொலையில் தொடர்பு இருப்பது தெரியவந்தது. இதையடுத்து அவர்களையும் போலீசார் கைது செய்தனர். இவர்கள் அனைவரும் ஏற்கெனவே கைது செய்யப்பட்ட பரணியின் நண்பர்கள் எனக் கூறப்படுகிறது. கொலை சம்பவத்தில் இவர்களின் பங்கு குறித்து போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

கைது செய்யப்பட்ட 4 பேரில் 3 பேர் பள்ளி மாணவர்கள் என்ற அதிர்ச்சி தகவலையும் காவல்துறை வெளியிட்டுள்ளது. அவர்களை சிறார் நீதிக் குழுமத்தில் ஆஜர்படுத்தி, கெல்லீஸ் பகுதியில் உள்ள சிறுவர்கள் சீர்திருத்த இல்லத்தில் காவல்துறையினர் சேர்த்துள்ளனர்.

கண்ணன் கொலைக்கான காரணம் என்ன?

போலீஸ் விசாரணையில் இந்தக் கொலைக்கு பல ஆண்டுகளாக நீடித்து வந்த குடும்ப முன்விரோதமே முக்கிய காரணம் என்பது தெரியவந்துள்ளது. கடந்த 2009ஆம் ஆண்டு பரணியின் பெரியப்பா சிவா கொலை செய்யப்பட்டதும், 2016ஆம் ஆண்டு அவரது தந்தை வேலு கொலை செய்யப்பட்டதும் விசாரணையில் தெரியவந்துள்ளது.

இந்த இரு கொலைகளுக்கும் கண்ணன் தான் காரணம் என்று சந்தேகம் கொண்ட பரணி, நீண்டகாலமாக முன்விரோதம் வைத்திருந்ததாகவும், இதன் காரணமாக நண்பர்களுடன் சேர்ந்து கண்ணனை திட்டமிட்டு கொலை செய்ததாகவும் விசாரணையில் தெரியவந்துள்ளது.

இதற்கிடையே கண்ணன் சாஸ்திரி நகர் காவல் நிலையத்தில் பி பிரிவு சரித்திரப் பதிவேடு குற்றவாளியாக இருந்த நிலையில், அவரது நடவடிக்கைகள் மற்றும் அவருக்கு இருந்த முன்விரோதம் தொடர்பாக உரிய கண்காணிப்பு மேற்கொள்ளப்பட்டதா? என்பது குறித்து உயரதிகாரிகள் விசாரணை நடத்தினர். இதையடுத்து அடையாறு காவல் மாவட்ட துணை ஆணையர் கார்த்திகேயன், சாஸ்திரி நகர் சட்டம் - ஒழுங்கு காவல் ஆய்வாளர் ரோகிணி ஆகியோர் காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றப்பட்டனர்.

தொடர்ந்து இந்தக் கொலைக்கு பின்னால் வேறு யாரேனும் உள்ளனரா? கொலைக்கு திட்டம் தீட்டியது யார்? ஆயுதங்கள் எங்கிருந்து கொண்டு வரப்பட்டன? என்பது குறித்து போலீஸார் தீவிரமாக விசாரித்து வருகின்றனர்.