Sigma X Review
சென்னை: ஜேசன் சஞ்சய் இயக்கத்தில் உருவாகியிருக்கும் சிக்மா திரைப்படம் இன்று திரையரங்குகளில் வெளியாகியிருக்கிறது. படத்துக்கு பெரிய ஹைப் இருந்த சூழலில்; ரசிகர்கள் ஆவலோடு படம் பார்க்க சென்றார்கள். இந்நிலையில் படம் பார்த்தவர்கள் தங்களது விமர்சனத்தை எக்ஸ் பக்கத்தில் பகிர்ந்துகொள்ள தொடங்கியிருக்கிறார்கள்.
விஜய்யின் மகன் ஜேசன் சஞ்சய் ஹீரோவாக அறிமுகமாவார் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அவர் இயக்குநராகிவிட்டார்.முதல் படமாக சிக்மா என்ற படத்தை இயக்கியிருக்கிறார். சந்தீப் கிஷன் ஹீரோவாக நடிக்க லைகா நிறுவனம் படத்தை தயாரித்திருக்கிறது. படத்தின் ட்ரெய்லர், பாடல்கள் எல்லாம் ஓரளவுக்கு ஈர்க்கவே செய்தன. விஜய்யும் சினிமாவிலிருந்து ஒதுங்கிவிட்டதால்; அவரது தொடர்ச்சியாக ஜேசனை பார்க்கிறார்கள் ரசிகர்கள்.
இன்று ரிலீஸ்: படமானது இன்று திரையரங்குகளில் பிரமாண்டமாக ரிலீஸாகியிருக்கிறது. பலரும் ஆர்வத்தோடு சென்று படம் பார்த்தார்கள். ஜேசனின் தாய் சங்கீதாவும், தங்கை திவ்யா சாஷாவும் சென்னையில் இருக்கும் கமலா திரையரங்கத்தில் முதல் நாள் முதல் காட்சியை பார்த்து ரசித்தார்கள். இந்நிலையில் சிக்மா படத்தின் எக்ஸ் விமர்சனம் வெளியாகியிருக்கிறது.
சிக்மா எக்ஸ் விமர்சனம்: படம் பார்த்த ரசிகர் ஒருவர், "அறிமுக இயக்குநராக ஜேசன் சஞ்சய் நம்பிக்கை அளிக்கும் வகையில் தனது திறமையை வெளிப்படுத்தியிருக்கிறார். தொழில்நுட்ப ரீதியாகவும் படம் சிறப்பாகவே இருக்கிறது. வெங்கட் பிரபுவின் ஹீஸ்ட் த்ரில்லர் பாணியில் இருக்கிறது. தமனின் இசை மிகப்பெரிய பலமாக இருக்கிறது. சந்தீப் கிஷன் கச்சிதமாக பொருந்தியிருக்கிறார்" என கூறியிருக்கிறார்.
தொண்டையை கவ்வும்படி இருந்தது: சிக்மா முதல் பாதி நன்று. ட்ரெய்லர் கொஞ்சம் தொண்டையை கவ்வுவது மாதிரி இருந்தது. ஆனால் படம் நன்றாக இருக்கிரது. ஆரம்பம் சுமாராக தொடங்கினாலும் போகப்போக பிக்கப்பாகிவிட்டது. ஜேசன் சஞ்சய்க்கு இது முதல் படம் மாதிரியே தெரியவில்லை.
நன்றாக கையாண்டிருக்கிறார். சந்தீப் கிஷனின் நடிப்பும் நன்றாக இருந்தது. ஹீரோயின் செலக்ஷனில் இன்னும் கொஞ்சம் பெட்டராக இருந்திருக்கலாம். கதை புதிது கிடையாது. ஆனாலும் அதை விறுவிறுப்பாக கொண்டு சென்றிருக்கிறார்கள்" என குறிப்பிட்டிருக்கிறார்.
இன்னொருவரோ, "சிக்மா முதல் பாதி ஓகேதான். கேரக்டர்களை அறிமுகப்படுத்துவதற்கே சுமார் 40 நிமிடங்கள் எடுத்துக்கொள்கிறார்கள். அந்தப் பகுதியில் கொஞ்சம் தொய்வு இருப்பதாக தெரிகிறது. அதற்கு பிறகு படம் வேகம் பிடித்து த்ரில்லர் பாணியில் நகர்ந்து சஸ்பென்ஸை உருவாக்குகிறது. இடைவேளை காட்சி ஒரு சிறிய ட்விஸ்ட்டோடு முடிகிறது. இயக்குநராக ஜேசன் சிறப்பான மேக்கிங்கை கொடுத்திருக்கிறார். ஆனால் கதை மற்றும் திரைக்கதையை இன்னும் சிறப்பாக கையாண்டிருக்கலாம். சந்தீப் கிஷன் கச்சிதமாக பொருந்துகிறார்" என கூறியுள்ளார்.
மற்றொருவரும், "சிக்மா முதல் பாதி ஓகே. முழுக்க முழுக்க கதையை மையமாக வைத்து நகர்கிறது. அடுத்தடுத்து வரும் ட்விஸ்ட்டுகள் சிறப்பாக இருக்கின்றன. பின்னணி இசையும் பாடல்களும் படத்துக்கு பலமாக இருக்கின்றன. அதிரடியான ஆக்ஷன் பிளாக்குடன் இடைவேளை காட்சி மாறாக அமைந்திருக்கிறது. சந்தீப் கிஷனின் ஆக்ஷனும், காமெடியும் நன்றாக இருக்கிறது. ஜேசனுக்கு இது முதல் படம் என்றாலும் முதிர்ச்சியான் இயக்கத்தை வெளிப்படுத்தியிருக்கிறார்" என பதிவிட்டிருக்கிறார்.