பயிர்க்கடன் வசூலை தற்காலிகமாக நிறுத்த வேண்டும்
பயிர்க்கடன் வசூலை தற்காலிகமாக நிறுத்த வேண்டும் - கூட்டுறவு வங்கிகளுக்கு 'பறந்த' உத்தரவு
பயிர்க்கடனை முழுமையாக நிலுவையின்றி திருப்பிச் செலுத்திய விவசாயிகளுக்கு வரும் 30.09.2026-க்குள் புதிய பயிர்க் கடன் வழங்க வேண்டும் என்றும் கூட்டுறவு சங்கங்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
Published : September 22, 2026 at 2:14 PM IST
சென்னை: மறு உத்தரவு வரும் வரை விவசாயிகளிடம் மேற்கொள்ளப்பட்டு வரும் பயிர்க்கடன் வசூல் நடவடிக்கைகளை தற்காலிகமாக நிறுத்தி வைக்குமாறு அனைத்து கூட்டுறவு வங்கிகளுக்கும் கூட்டுறவுச் சங்கங்களின் பதிவாளர் உத்தரவிட்டுள்ளார்.
2026-27 ஆம் நிதியாண்டில் தகுதியுள்ள அனைத்து விவசாயிகளுக்கும் பயிர்க் கடன் வழங்குவது தொடர்பாக கூட்டுறவுச் சங்கங்களின் பதிவாளர் அலுவலகம் புதிய அறிவுறுத்தல்களை வெளியிட்டுள்ளது. அதில், பயிர்க் கடன் நிலுவை தொடர்பான வசூல் நடவடிக்கைகளை மறு உத்தரவு வரும் வரை தற்காலிகமாக நிறுத்தி வைக்குமாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பாக, கூட்டுறவுச் சங்கங்களின் பதிவாளர் அலுவலகம் வெளியிட்டுள்ள சுற்றறிக்கையில், '2026 - 27 ஆம் நிதியாண்டில் தகுதியுள்ள அனைத்து விவசாயிகளுக்கும் பயிர்க் கடன் வழங்குவது தொடர்பாக ஏற்கனவே தெளிவான அறிவுரைகள் வழங்கப்பட்டுள்ளன.
அதன்படி, பயிர்க் கடன் தள்ளுபடி திட்டம் 2026-ன் கீழ் பகுதி தள்ளுபடி தொகை பெற்ற விவசாயிகள், எஞ்சிய தொகையை முழுமையாக செலுத்தி கடனை முடிக்காமல் தவணை தவறிய நிலையில் இருந்தால், அவர்களிடம் நிலுவைத் தொகையை வசூலிப்பதற்கு கடுமையான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக அறியப்படுகிறது.
தற்போது, இது தொடர்பாக கூட்டுறவு சங்கங்களுக்கு சில முக்கிய அறிவுரைகள் வழங்கப்படுகின்றன.
அதன்படி, பயிர்க் கடன் நிலுவை தொடர்பான அனைத்து வசூல் நடவடிக்கைகளையும் மறு உத்தரவு வரும் வரை தற்காலிகமாக நிறுத்தி வைக்க வேண்டும்.
பயிர்க் கடனை முழுமையாக நிலுவை இல்லாமல் திருப்பிச் செலுத்திய அனைத்து விவசாயிகளுக்கு வரும் 30.09.2026- க்குள் புதிய பயிர்க் கடன் வழங்க வேண்டும்.
இந்த அறிவுரைகளை அனைத்து கூட்டுறவுச் சங்கங்களுக்கும் தொடர்ந்து தெரிவிப்பதுடன், அவை முறையாக பின்பற்றப்படுவதை உறுதி செய்ய வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதே போன்று, இந்த நடவடிக்கைகள் தொடர்பாக தொடர் கண்காணிப்பு மேற்கொள்ள வேண்டும் என்றும், கூட்டுறவு சங்கங்களின் மண்டல இணைப் பதிவாளர்கள் மற்றும் மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கிகளின் மேலாண்மை இயக்குநர்களுக்கு கூட்டுறவு சங்கங்களின் கூடுதல் பதிவாளர் சுப்ரமணியம் அறிவுறுத்தல்களை வழங்கியுள்ளார்.