பயிர்க்கடன் தள்ளுபடி செய்யாத தவெகவுக்கு எதிராக இடைத்தேர்தலில் பிரசாரம்: விவசாயிகள் சங்கம் அறிவிப்பு
பயிர்க்கடன் தள்ளுபடி செய்யாத தவெகவுக்கு எதிராக இடைத்தேர்தலில் பிரசாரம்: விவசாயிகள் சங்கம் அறிவிப்பு
நாமக்கல்: பயிர்க்கடன் தள்ளுபடி கோரிக்கையை நிறைவேற்றாத தவெகவுக்கு எதிராக இடைத்தேர்தலில் பிரசாரம் செய்யப்படும் என விவசாயிகள் சங்கம் அறிவித்துள்ளது.
இதுகுறித்து, உழவர் பெருந்தலைவர் நாராயணசாமி நாயுடுவின் தமிழக விவசாயிகள் சங்கத்தின் மாநில தலைவர் வேலுசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:
தமிழகத்தில் சமீபத்தில் நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில், தமிழக விவசாயிகள் கூட்டுறவு தொடக்க வேளாண்மை கடன் சங்கங்களில் வாங்கிய பயிர்க்கடன் சிறு, குறு விவசாயிகளுக்கு முழுவதுமாக தள்ளுபடி செய்யப்படும். பெருவிவசாயிகள் வாங்கிய பயிர்க்கடன் 50 சதவீதம் தள்ளுபடி செய்யப்படும் என தவெக கவர்ச்சிகரமான வாக்குறுதி அளித்தது. ஆனால், ஆட்சி பொறுப்பிற்கு வந்தவுடன் பல்வேறு நிபந்தனைகளை விதித்து, முறையாக முழுமையாக பயிர்க்கடன் தள்ளுபடி செய்யவில்லை. இது தமிழக விவசாயிகளிடம் மிகப்பெரிய கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.
தமிழகத்தில் ஏற்பட்டுள்ள வறட்சியின் பொருட்டு, அனைத்து விவசாயிகளும் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்களில் வாங்கிய பயிர்க்கடனை பாகுபாடின்றி முழுமையாக தள்ளுபடி செய்ய கோரிக்கை வைத்தனர். ஆனால், இந்த கோரிக்கையை தவெக அரசு நிறைவேற்றவில்லை. இதற்கு தக்க பதிலடி கொடுக்கும் வகையில், உழவர் பெருந்தலைவர் நாராயணசாமி நாயுடுவின் தமிழக விவசாயிகள் சங்கம் சார்பில், அடுத்த மாதம் மதுராந்தகம் மற்றும் தாராபுரம் தொகுதியில் நடக்கவுள்ள இடைத்தேர்தலில், தமிழக விவசாயிகளை திரட்டி, தவெக கட்சியை தோற்கடிப்பதற்காக பிரசாரம் மேற்கொள்வோம். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.