📅 Monday, 19 October 2026 IST | ஐப்பசி 2, பராபவ வருடம்
Tamilzha Alt Logo Text சார்பற்ற நடுநிலைச் செய்திகள்
முக்கிய செய்திகள்
Singapore Tamil October 19, 2026 03:03 PM

புகைமூட்டத்துக்குக் காரணமான நிறுவனங்களுக்கு எதிராக கடும் நடவடிக்கை: சண்முகம், சிங்க‌ப்பூர் செய்திகள்

புகைமூட்டத்துக்குக் காரணமான நிறுவனங்களுக்கு எதிராக கடும் நடவடிக்கை: சண்முகம், சிங்க‌ப்பூர் செய்திகள்

சிங்கப்பூரின் தற்போதைய புகைமூட்டச் சூழலுக்குக் காரணமான இந்தோனீசிய நிறுவனங்களுக்கு எதிராக கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்படுமென மூத்த அமைச்சரும் தேசியப் பாதுகாப்பு ஒருங்கிணைப்பு அமைச்சருமான கா.சண்முகம் கூறியுள்ளார்.

திங்கட்கிழமை (அக்டோபர் 19) உட்லண்ட்ஸ் சோதனைச்சாவடியில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், அந்நிறுவனங்கள் ஏற்படுத்தும் தீயைத் தடுக்க தேசிய சுற்றுப்புற அமைப்பு எச்சரிக்கை அறிவிப்புகளை விடுத்துள்ளதாக அவர் தெரிவித்தார்.

“அந்நிறுவனங்கள் தீ மூட்டுவதை நிறுத்திவிட்டதை ஆக்ககரமான ஆதாரங்களுடன் நிரூபிப்பது அவசியம். ‘ஸீரோ பர்னிங்’ எனப்படும் தீ மூட்டத்திற்கு எதிரான கொள்கையைப் பின்பற்றுவதாக கூறினால் மட்டும் போதாது,” என்று அவர் வலியுறுத்தினார்.

நிறுவனங்களுக்கு எதிரான நடவடிக்கைகள் பல்வேறு வழிகளில் முன்னெடுக்கப்படுமென்று மூத்த அமைச்சர் தெரிவித்தார்.

சிங்கப்பூரில் பதியப்பட்டுள்ள, புகைமூட்டத்திற்குத் தொடர்பிருக்கக்கூடிய ஏழு வேளாண்-வணிக நிறுவனங்களிடம் சிங்கப்பூர் பங்குச்சந்தை விசாரணை நடத்தியுள்ளது.

அந்நிறுவனங்களுக்குக் கடன் வழங்கியுள்ள சிங்கப்பூர் வங்கிகளும் சிங்கப்பூர் நாணய ஆணையத்தின் மேற்பார்வையின்கீழ் நிறுவங்களிடம் விசாரணைகள் நடத்திவருவதாக அவர் குறிப்பிட்டார்.

அதோடு, அந்நிறுவனங்கள் சிங்கப்பூரின் அரசாங்கச் சலுகைகள், மானியங்கள் போன்றவற்றைப் பெற்று வருகின்றனவா என்பதும் அவற்றுக்குத் தற்போது அவை தகுதிபெறுகின்றனவா என்பதும் ஆய்வு செய்யப்பட்டு வருவதாக அவர் சொன்னார்.

“நிறுவனங்களின் ஒத்துழைப்பை உறுதிப்படுத்த சிங்கப்பூர் அரசாங்கம் புகைமூட்டத்திற்கு எதிரான அதன் தற்போதைய சட்டதிட்டங்களை மாற்றியமைக்கவோ புதிய சட்டங்களை அறிமுகப்படுத்தவோ தயங்காது,” என்றார் திரு சண்முகம்.

இவையும் உங்களுக்குப் பிடிக்கலாம்

புகைமூட்ட நிலவரம் மேம்பட்டாலும் இனி வரும் காலங்களில் நிறுவனங்கள் தீமூட்டும் நடவடிக்கைகளில் ஈடுபடாமல் இருக்க தேவையான வலியுறுத்தல் நடவடிக்கைகள் எடுக்கப்படுமென்று அவர் உறுதியளித்தார்.

செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்ட நீடித்த நிலைத்தன்மை, சுற்றுப்புற அமைச்சர் கிரேஸ் ஃபூ புகைமூட்டத்திற்குப் பங்களிப்பதாக நம்பப்படும் கலிமந்தானில் அமைந்துள்ள மேலும் மூன்று நிறுவனங்களுக்குப் புகைமூட்ட தடுப்புச் சட்டத்தின்கீழ் தேசிய சுற்றுப்புற அமைப்பு எச்சரிக்கை அறிவிப்புகளை விடுத்துள்ளதாகக் கூறினார்.

இதுவரை அந்த பத்து நிறுவனங்களிடமிருந்து எந்த பதிலும் இல்லை என்பதையும் அவர் சுட்டினார்.

சிங்கப்பூரின் உயிர்வாயு இந்தோனீசியக் காடுகளிலிருந்துதான் வருகிறது என்று கூறிய இந்தோனீசிய அதிகாரியின் கருத்து வருத்தமளிப்பதாகவும் அது தவறானது மூத்த அமைச்சர் சண்முகம் தெரிவித்தார்.

அக்கருத்து இந்தோனீசிய அரசின் கருத்துக்கும் அந்நாட்டு மக்களின் கருத்துக்கும் முரணானது என்றும் அவர் குறிப்பிட்டார்.

இந்தோனீசிய அதிபர் பிரபோவோ சுபியாந்தோ எடுத்திருக்கும் புதிய முயற்சிகளான தீயணைப்பு, பேரிடர் நிவாரண அமைப்பின் தலைவரை மாற்றுதல், மரங்களை வெட்டி எரிக்கும் போக்குக்கு எதிரான கண்டனங்கள் போன்றவற்றைச் சிங்கப்பூர் ஆதரிப்பதாக திரு சண்முகம் கூறினார்.

வெளிப்புறங்களில் பணிபுரியும் சிங்கப்பூர் அதிகாரிகளுக்குப் புகைமூட்டத்தின் தாக்கத்தை எதிர்கொள்ள தேவையான ஆதரவு வழங்கப்படுமென்று அவர் உறுதியளித்தார்.