📅 Saturday, 12 September 2026 IST | ஆவணி 27, பராபவ வருடம்
Tamilzha Alt Logo Text சார்பற்ற நடுநிலைச் செய்திகள்
முக்கிய செய்திகள்
Politics September 12, 2026 05:30 AM

“பட்டிமன்றம் என்றாலே சாலமன் பாப்பையா தான்...”

“பட்டிமன்றம் என்றாலே சாலமன் பாப்பையா தான்...”

சென்னை: பேராசிரியர் சாலமன் பாப்பையா மறைவுக்கு பாமக தலைவர் அன்புமணி, தேமுதிக பொதுச் செயலாளர் பிரேமலதா விஜயகாந்த், நாதக தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் உள்ளிட்ட தலைவர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

அன்புமணி ராமதாஸ் (பாமக தலைவர்): "மதுரை அமெரிக்கன் கல்லூரியில் தமிழ்த்துறை பேராசிரியராக பணியாற்றி ஓய்வுபெற்ற சாலமன் பாப்பையா, தமிழ் இலக்கியங்கள் குறித்து விரிவான ஆராய்ச்சிகளை மேற்கொண்டிருக்கிறார். திருக்குறள் உள்ளிட்ட இலக்கியங்களுக்கு உரைகளை எழுதியுள்ளார்.

தமிழ்நாட்டில் மட்டுமின்றி உலகம் முழுவதும் சாலமன் பாப்பையாவை அறியாத தமிழர்களே இல்லை என்று கூறும் அளவுக்கு நகைச்சுவையாகவும், நாகரிகமாகவும் பட்டிமன்றங்களை நடத்தியதன் மூலம் அனைத்துத் தமிழ் குடும்பங்களுக்கும் அறிமுகமானவர்.

பேராசிரியர் அன்பழகன் உள்ளிட்ட தமிழகத்தின் அரசியல் மற்றும் தமிழ் ஆளுமைகளுடன் நெருங்கிய நட்பு கொண்டவர். சாலமன் பாப்பையாவை இழந்து வாடும் குடும்பத்தினர், நண்பர்கள், தமிழறிஞர்கள் உள்ளிட்ட அனைவருக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபங்களையும் தெரிவித்துக் கொள்கிறேன்."

சீமான் (தலைமை ஒருங்கிணைப்பாளர், நாம் தமிழர் கட்சி): “தமிழ்நாடு முழுவதும் மட்டுமல்லாது தமிழர்கள் வாழ்கின்ற உலக நாடுகள் பலவற்றிலும், அறிவுக்கு விருந்து படைக்கும், இலக்கிய சுவைமிகுந்த, பட்டிமன்றங்களை நடத்தி, தமிழும், பேச்சுக்கலையும் வளர்த்த பேராசிரியர் சாலமன் பாப்பையாவின் அரும்பணிகள் போற்றுதற்குரியது.

எளிய மக்களும் அறிந்துகொள்ளும் வண்ணம், தமிழ்மறையாம் திருக்குறளுக்கு எளிய தமிழில் உரை எழுதிய ஐயாவின் தமிழ்த்தொண்டு தமிழின வரலாற்றில் என்றும் நிலைபெற்றிருக்கும். சாலமன் பாப்பையாவின் மறைவு தமிழ் அறிவுலகத்திற்கு ஏற்பட்ட பேரிழப்பாகும்.”

டிடிவி.தினகரன் (அமமுக பொதுச் செயலாளர்):

"தலைசிறந்த தமிழ் அறிஞர்களில் ஒருவரும், பிரபல பட்டிமன்ற பேச்சாளருமான பேராசிரியர் சாலமன் பாப்பையா உடல்நலக்குறைவால் இயற்கை எய்திய செய்தி மிகுந்த வேதனையையும் வருத்தத்தையும் அளிக்கிறது.

எளிமையான தமிழ் மொழியில் நயமான மற்றும் நகைச்சுவையான கருத்துக்களால் பட்டிமன்றங்களை சிறப்பித்த சாலமன் பாப்பையாவை இழந்துவாடும் குடும்பத்தினர், உறவினர்கள் மற்றும் சக தமிழ் ஆர்வலர்களுக்கு எனது ஆழ்ந்த இரங்கலையும் அனுதாபங்களையும் தெரிவித்துக் கொள்வதோடு அன்னாரது ஆன்மா இறைவன் திருவடி நிழலில் இளைப்பாற எல்லாம்வல்ல இறைவனை பிரார்த்திக்கிறேன்."

ஜி.கே.வாசன் (தமாகா தலைவர்): “தமிழ் இலக்கியத்தை எளிய நடையில் மக்களிடம் கொண்டு சேர்த்த பட்டிமன்ற நடுவரான சாலமன் பாப்பையாவின் மறைவு மிகுந்த வருத்தத்துக்குரியது. ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக்கொள்கிறேன்

பிரபலமான தமிழரிஞரும், எழுத்தாளாரும், பட்டிமன்ற நடுவருமான சாலமன் பாப்பையாவின் மறைவு மிகுந்த வருத்தத்துக்குரியது. மதுரை அமெரிக்கன் கல்லூரியில் தமிழ்ப் பேராசிரியராக, தமிழ்த்துறைத் தலைவராக மிகச் சிறப்பாக பணியாற்றியவர்.

எளிய மற்றும் இனிமையான நடையில் தமிழ் இலக்கியத்தை உலகம் முழுவதும் வாழும் தமிழர்கள் மத்தியில் கொண்டு சேர்த்த பெருமைமிக்கவர். பட்டிமன்றம் என்றாலே சாலமன் பாப்பையா தான் நினைவுக்கு வரும் என்ற ரீதியில் புகழ் பெற்றவர். தனக்கென்று ஒரு ரசிகர் பட்டாளமே வைத்திருப்பவர்.

அந்த அளவிற்கு தொலைக்காட்சிகளிலும், மேடைகளிலும் பட்டிமன்றங்களை நடத்தி அனைத்து தரப்பு மக்கள் மத்தியில் நீங்கா இடம் பெற்றிருக்கிறார். திருக்குறள் உள்ளிட்ட பழந்தமிழ் இலக்கியங்களுக்கு எளிய முறையில் உரை எழுதியுள்ளார்.

தமிழ் இலக்கியப் பணிக்காக தமிழ்நாடு அரசின் கலைமாமணி விருது மற்றும் மத்திய அரசின் பத்மஸ்ரீ விருது பெற்ற பாராட்டுக்குரியவர். பல்வேறு திரைப்படங்களில் நடித்து பெயர் பெற்றவர். அவரது தமிழ் பற்றும், பட்டிமன்ற பேச்சும், அவர் பெற்ற பேரும் புகழும் காலம் கடந்தும் நீடித்து நிலைக்கும்.

தனது தமிழ் மொழிப்பற்றால், இலக்கியத்திறமையால், எழுத்தாற்றலால் திறமை மிக்கவராக செயல்பட்ட சாலமன் பாப்பையாவின் மறைவு அவரது குடும்பத்தினருக்கும், தமிழ்த்துறையினருக்கும், உலகத் தமிழர்களுக்கும் மிகப்பெரிய இழப்பாகும்’ எனத் தெரிவித்துள்ளார்”.

பிரேமலதா (தேமுதிக பொதுச்செயலாளர்): “தனது தனித்துவமான பேச்சாற்றலாலும், நகைச்சுவை கலந்த தமிழ் நடையாலும், பட்டிமன்றங்கள் வாயிலாக இலக்கியத்தையும் தமிழின் சிறப்பையும் எளிய மக்களிடமும் கொண்டு சேர்த்த பெருமைக்குரியவர் சாலமன் பாப்பையா.

எழுத்தாளர், பட்டிமன்றப் பேச்சாளர், பதிப்பாசிரியர், தமிழ்ப் பேராசிரியர், நடிகர் என பன்முகத் திறமைகளைக் கொண்டு தமிழ் சமூகத்தில் சிறப்பாக வாழ்ந்தவர். தமிழ் மொழி, இலக்கியம் மற்றும் பட்டிமன்ற உலகுக்கு அவர் ஆற்றிய பங்களிப்பு என்றும் நினைவுகூரப்படும். தமிழ் மொழி மற்றும் கலைத்துறைக்கு அவர் ஆற்றிய சிறப்பான பங்களிப்பைப் பாராட்டி பத்மஸ்ரீ மற்றும் கலைமாமணி உள்ளிட்ட பல்வேறு விருதுகளையும் சிறப்புகளையும் பெற்றவர்.

திரைப்படங்களிலும் நடித்து தனது பன்முகத் திறமையை வெளிப்படுத்தியவர். அவரது மறைவு தமிழ் இலக்கியம், பட்டிமன்றம் மற்றும் கலைத்துறைக்கு ஈடுசெய்ய முடியாத பேரிழப்பாகும்.