பரமக்குடியில் இமானுவேல் சேகரன் நினைவு நாள் அனுசரிப்பு
அமைச்சர்கள், அரசியல் கட்சியினர் அஞ்சலி
பரமக்குடி: ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடியில் இமானுவேல் சேகரன் 69வது நினைவு நாளில் அமைச்சர்கள், அரசியல் கட்சியினர், பல்வேறு அமைப்பினர், பொதுமக்கள் அஞ்சலி செலுத்தினர்.
இமானுவேல் சேகரன் நினைவு நாள் அஞ்சலி நேற்று காலை 8:00 மணி முதல் துவங்கியது. அவரது மகள் சுந்தரி பிரபாராணி, இமானுவேல் சேகரன் பிறந்த ஊரான செல்லுார் கிராம மக்கள், அமைச்சர்கள் நிர்மல் குமார், அருண்ராஜ், பிரபு, மதன் ராஜா, ராஜிவ், அ.தி.மு.க., முன்னாள் அமைச்சர் உதயகுமார், தி.மு.க., சார்பில் எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி, வி.சி.க., சார்பில் அமைச்சர் வன்னியரசு, காங்., மாநில தலைவர் மாணிக்கம் தாகூர், அமைச்சர் ராஜேஷ்குமார், பா.ஜ., மாநில தலைவர் நயினார் நாகேந்திரன், பொதுச்செயலாளர்கள் ராம சீனிவாசன், பாலகணபதி, நடிகை கஸ்துாரி, அ.ம.மு.க., பொதுச் செயலாளர் தினகரன், நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், புதிய தமிழகம் தலைவர் கிருஷ்ணசாமி, இளைஞரணி தலைவர் சியாம், தமிழக மக்கள் முன்னேற்ற கழகம் தலைவர் ஜான்பாண்டியன், ம.தி.மு.க., தே.மு.தி.க., பா.ம.க., வி த லீடர்ஸ் அமைப்பினர் மற்றும் எம்.எல்.ஏ.,க்கள், கட்சியினர், சமூக அமைப்பினர் பலர் அஞ்சலி செலுத்தினர்.
தென் மண்டல ஐ.ஜி., விஜயேந்திர பிதாரி தலைமையில் 8000 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.
பரமக்குடி, ராமநாதபுரத்தில் கடைகள் அடைக்கப்பட்டிருந்தன. போக்குவரத்து முற்றிலும் திருப்பி விடப்பட்டதால் வெளியூர் செல்பவர்கள் சிரமம் அடைத்தனர்.
பரமக்குடியில் அனைத்து பள்ளி, கல்லுாரிகளுக்கு விடுமுறை விடப்பட்டது.
கிராம மக்கள் முளைப்பாரி எடுத்தும், மொட்டை அடித்தும் நினைவிடத்தில் அஞ்சலி செலுத்தினர்.