📅 Monday, 28 September 2026 IST | புரட்டாசி 12, பராபவ வருடம்
Tamilzha Alt Logo Text சார்பற்ற நடுநிலைச் செய்திகள்
முக்கிய செய்திகள்
Latest News September 28, 2026 11:03 AM

போக்சோ வழக்கில் தொழிலதிபர்... சமூகம் எதிர்பார்ப்பது என்ன?

போக்சோ வழக்கில் தொழிலதிபர்... சமூகம் எதிர்பார்ப்பது என்ன?

போக்சோ வழக்கில் தொழிலதிபர்... சமூகம் எதிர்பார்ப்பது என்ன?

சமீபகாலமாக காலையில் பத்திரிகைகளைத் திறந்தாலே, அதில் வெளியாகும் செய்திகள் தலைக்குக் கடுமையான பாரத்தை ஏற்றுகின்றன. எந்த மூலையில் பார்த்தாலும் போக்சோ வழக்குகளில் பள்ளி ஆசிரியர்கள், கல்லூரிப் பேராசிரியர்கள், சமூகத்தின் பெரிய மனிதர்கள் சிக்குவது கடும் வேதனையை ஏற்படுத்துகின்றன. சிறார்கள் தங்களை மேலே குறிப்பிடப்பட்டவர்கள் பாலியல் துன்புறுத்தல்களுக்கு ஆளாக்கினர் எனச் சொன்ன புகார்கள் அடிப்படையில், அவர்கள்மீது வழக்கு போட்டு கைதுசெய்யப்படும் நிகழ்வுகள் தொடர்கின்றன.

இந்த நிலையில்தான், போக்சோ வழக்கில் கைதாகி சிறையில் தள்ளப்பட்டிருக்கிறார் `ஜெம் கிரானைட்’ அதிபர் வீரமணி. சமூகத்தில் பெரிய அந்தஸ்துடன், தொழிலதிபராக வலம்வந்தவர்தான் `ஜெம் கிரானைட்’ வீரமணி. வயது 84. இந்த வயதிலும் அவர் ஆற்றியிருப்பதாகச் சொல்லப்படும் காரியங்களைக் கேட்டால், உடம்பு கூசுகிறது. கிட்டத்தட்ட 35 ஆண்டுகளுக்கும் மேலாக, சென்னையின் பல்வேறு இடங்களில் கெஸ்ட் ஹவுஸ்களை எடுத்து, வறுமையில் சிக்கியிருக்கும் சிறார்களை அங்கு அழைத்து வந்து, அவர்களிடம் பாலியல் சீண்டலை மேற்கொண்டிருக்கிறார் என்ற புகாரைக் கேட்கும்போதே, அருவருப்பாக இருக்கிறது.

கிரானைட் தொழிலில் கொடிகட்டிப் பறந்த வீரமணியின் தொழில் வெற்றியைத் தமிழகம் மட்டுமல்ல; உலக நாடுகள் பலவற்றிலும் தொழில்துறையினர் கொண்டாடியிருக்கிறார்கள். மிகப்பெரிய அந்தஸ்தில் இருந்த அந்தப் பெரிய மனிதருக்கு ஏன் இப்படிப்பட்ட சின்ன புத்தி என்று சமூகம் குரலை உயர்த்திக் கேட்கிறது.

தன்னுடைய சின்ன புத்திச் செயல்களால், சட்டத்தின் பிடியில் சிக்கிவிட்டோம் என்றதும், பணத்தைக் கொடுத்து அதிலிருந்து தப்பிவிடலாம் என அவர் மேற்கொண்ட முயற்சிதான், அவரை மீள முடியாத படுகுழிக்குள் தள்ளியிருக்கிறது. அவர் மீதான போக்சோ குற்றச்சாட்டுகளை மறைத்து, அவற்றிலிருந்து அவரை விடுவிக்கும் பணியில் போலீஸ் உயரதிகாரிகள் பலர் ஈடுபட்டுள்ளனர். இதற்காக, வீரமணியிடமிருந்து பல நூறு கோடிகளை லஞ்சமாகக் கறந்திருக்கிறார்கள்.

இதுதான் இன்றைக்குப் பெரும் விவாதப் பொருளாகியிருக்கிறது. வீரமணி செய்தது குற்றம் என்றால், பணம் பெற்றுக்கொண்டு, புகாரிலிருந்து அவரைத் தப்பிக்கவைக்க முயற்சி செய்திருக்கும் அதிகாரிகளை என்ன சொல்வது... இது, வீரமணியின் செயலைக் காட்டிலும் கொடூரமானது என்று சொல்லி, சமூகம் வெட்கித் தலைகுனிகிறது. விசாரணை அமைப்புகள், தங்களுடைய விசாரணையைத் தொடங்கியிருக்கின்றன.

இந்த நேரத்தில் விசாரணை அமைப்புகளிடமும், அதிகாரிகளிடமும் பொதுமக்கள் எதிர்பார்ப்பது ஒன்றே ஒன்றுதான்... நேர்மையான விசாரணைக்குப் பிறகு, `ஜெம் கிரானைட்’ மீதான போக்சோ வழக்கில் நடந்த தவறுக்கும், அதை மறைப்பதற்கு உடந்தையாக இருக்க முயன்றவர்களுக்கும் உரிய தண்டனை வழங்கியே ஆக வேண்டும். அதைத்தான், வீரமணி வழக்கில் அரசிடமிருந்து ஒட்டுமொத்தத் தமிழகமும் எதிர்பார்க்கிறது.

இப்படிச் செய்தால் மட்டுமே, ‘யாராக இருந்தாலும் தண்டிக்கப்படுவோம்’ என்ற அச்ச உணர்விலாவது, சிறார் மீதான பாலியல் சீண்டல்கள் குறையும்.