$1 மில்லியன் மதிப்புள்ள போதைப்பொருள் பறிமுதல்; இருவர் கைது
சிங்கப்பூரில் ஒன்பது கிலோவுக்கு மேற்பட்ட போதைப்பொருள்களை துவாஸ் சோதனைச்சாவடி வழியாகக் கடத்துவதற்கான முயற்சி முறியடிக்கப்பட்டுள்ளது. இது, கண்டுபிடிக்கப்பட்டதைத் தொடர்ந்து இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
அதிகாரிகள் கைப்பற்றிய போதைப்பொருள்களின் சந்தை மதிப்பு ஒரு மில்லியன் வெள்ளிக்கு மேல் இருக்கும் என்று குடிநுழைவுச் சோதனைச்சாவடி ஆணையமும் மத்திய போதைப்பொருள் ஒழிப்புப் பிரிவும் திங்கட்கிழமை (செப்டம்பர் 28) கூட்டாக வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்தன.
இந்தச் சம்பவம் தொடர்பில் கைது செய்யபட்டவர்களில் ஒருவர், 32 வயது மலேசியர். செப்டம்பர் 23ஆம் தேதி அவர் கைது செய்யப்பட்டார். மலேசியாவில் பதிவு செய்யப்பட்ட மோட்டார்சைக்கிளில் போதைப்பொருளை மறைத்து எடுத்துச் சென்றபோது அவர் அதிகாரிகளிடம் சிக்கினார்.
மோட்டார்சைக்கிளின் பின்பக்கத்தில் உள்ள பெட்டியில் பிஸ்கெட் பாக்கெட்டுகள் வைக்கப்பட்டிருந்தன. சோதனையில் அவை போதைப்பொருள்கள் என்பது கண்டுபிடிக்கப்பட்டது.
பின்னர் அதிகாரிகள் தீவிரச் சோதனை நடத்தியபோது மோட்டார்சைக்கிளின் மற்றோர் இடத்திலும் போதைப்பொருள் மறைத்து வைக்கப்பட்டிருந்தது தெரியவந்தது.
மொத்தம் 6,961 கிலோகிராம் போதைமிகு அபின், 1.116 கிராம் மெத்தம்ஃபீட்டமைன் (ஐஸ்), 1,032 கிராம் கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டன.
அதே நாளில் இந்த விவகாரம் தொடர்பில் 41 வயது சிங்கப்பூரர் ஒருவரும் கைது செய்யப்பட்டார். சோதனைச்சாவடியில் நடைபெற்ற தீவிர சோதனைகளுக்குப் பிறகு தெம்பனிஸ் ஸ்திரீட் 83க்கு அருகே உள்ள ஒரு வீட்டையும் அதிகாரிகள் சோதனையிட்டனர்.
அப்போது அவரிடமிருந்தும் அவரது வீட்டிலிருந்தும் ஏறக்குறைய 790 கிராம் போதைமிகு அபின், 127 கிராம் ஐஸ், 51 கிராம் எக்ஸ்டசி மாத்திரைகள், 21 கிராம் கெட்டமின் உள்ளிட்டவற்றை போதைப்பொருள் ஒழிப்புப் பிரிவின் அதிகாரிகள் கைப்பற்றினர்.
இவையும் உங்களுக்குப் பிடிக்கலாம்
அவற்றின் மதிப்பு ஏறக்குறைய $33,000. இரு ஆடவர்களுக்கும் இடையே உள்ள தொடர்பு பற்றி அறிக்கையில் தெரிவிக்கப்படவில்லை.
இந்தச் சம்பவத்தில் கைப்பற்றப்பட்ட அபின், ஐஸ், கஞ்சா ஆகியவை ஒரு வாரத்திற்கு 4,598 பேரின் போதைக்கு அடிமையாக்க போதுமானதாகும்.
ஒருவர், தூய்மையான 15 கிராம் அல்லது அதற்கு மேற்பட்ட அபின் அல்லது 500 கிராம் கஞ்சா கடத்தியது நிரூபிக்கப்பட்டால் அவருக்கு மரண தண்டனை விதிக்கப்படலாம்.