பெரி இங்: சிங்கப்பூர் குடியுரிமை பெற்ற காற்பந்து வீரர்
இங்கிலாந்தின் லிவர்பூல் நகரில் பிறந்து பிரிட்டிஷ் காற்பந்துக் குழுவான கார்டிஃப் சிட்டிக்கு விளையாடும் பெரி இங் சிங்கப்பூர் குடியுரிமை பெற்றுள்ளார்.
அதைத் தொடர்ந்து அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் 7லிருந்து பிப்ரவரி 5ஆம் தேதி வரை சவூதி அரேபியாவில் நடைபெறவிருக்கும் ஆசிய கிண்ணப் போட்டியில் அவர் விளையாடக்கூடும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 30 வயது இங், அப்போட்டிக்காக சிங்கப்பூர் அணியில் சேர்த்துக்கொள்ளப்படக்கூடும்.
சிங்கப்பூர் காற்பந்துச் சங்கத்தின் தலைவர் ஃபாரஸ்ட் லீ ஞாயிற்றுக்கிழமை (செப்டம்பர் 27) இதனை அறிவித்தார். ஆண்டுதோறும் நடந்துவரும் சங்கத்தின் கூட்டத்தில் அறிவிப்பு இடம்பெற்றது.
இங், செப்டம்பர் 21ஆம் தேதி சிங்கப்பூர் வந்தடைந்தார். அவர் வெளிநாட்டில் பிறந்த, மூன்றாம் தலைமுறை சிங்கப்பூர் குடியுரிமை தொடர்புகள் உள்ள முதல் விளையாட்டாளர் என்று நம்பப்படுகிறது.
தற்போது நடைபெற்றுவரும் அனைத்துலகக் காற்பந்துச் சம்மேளனத்தின் ஆசியான் கிண்ணப் போட்டியில் (FIFA ASEAN Cup) தேசிய அணியில் இங் இடம்பெறமாட்டார். அப்போட்டிக்கான சிங்கப்பூர் அணி இறுதிசெய்யப்பட்டுள்ளதே அதற்குக் காரணம்.
அதேவேளை, அனைத்துலகக் காற்பந்து ஆட்டங்களுக்கான அடுத்த பருவக்காலம் (window) முடிந்தவுடன் இங் சிங்கப்பூர் அணியின் சீருடையை அணிந்தபடி ரசிகர்களிடையே முன்னிலைப்படுத்தப்படக்கூடும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அந்த அனைத்துலக ஆட்டப் பருவக்காலத்தில் நவம்பர் 13ஆம் தேதி பராகுவேக்கு எதிராகவும் 17ஆம் தேதி பிரேசிலுக்கு எதிராகவும் சிங்கப்பூர் லயன்ஸ் அணி மோதவுள்ளது.