ஒரே வீட்டில் 21 மனைவிகளுடன் வாழும் பிச்சைக்காரர்..அது எப்படி திமிங்கலம்?
இன்றைய இளைஞர்களுக்கு பெண் கிடைப்பதே கேள்விக்குறியாக இருக்கும் இந்த காலத்தில், பிச்சைக்காரர் ஒருவர் 21 பெண்கள் தாமாகவே முன் வந்து அவரை திருமணம் செய்து கொண்ட சம்பவம் ஆச்சர்யமாக உள்ளது. அதுவும் ஒரே வீட்டில் 21 பேர் வசிப்பதாக கூறப்படுகிறது. வங்காள தேசத்தை சேர்ந்த மொரு மியா என்ற பிச்சைக்காரர் 21 மனைவிகளுடன் ஒரே வீட்டில் வாழ்ந்து வருவது இணையத்தில் வைரலாகியுள்ளது.
திருமணம் செய்துகொள்ள நான் யாரையும் வற்புறுத்தவில்லை
வங்காளதேசத்தைச் சேர்ந்த 35 வயது பிச்சைக்காரர் ஒருவர் தனக்கு 21 மனைவிகள் இருப்பதாக கூறி சமூக வலைதளங்களில் கவனம் ஈர்த்துள்ளார். அதுமட்டுமின்றி, தனது மனைவிகள் அனைவரின் பெயர்களையும் நினைவில் வைத்துக்கொள்வதே தனக்கு சிரமமாக இருப்பதாக அவர் கூறி உள்ளார்.
மோரு மியா என்ற அந்த நபர், தான் எந்த பெண்ணையும் திருமணம் செய்து கொள்ளுமாறு கட்டாயபடுத்தவில்லை என்றும், தன்னை திருமணம் செய்து கொள்ள பெண்களே முன்வந்ததாகவும் அவர் கூறியுள்ளார்.
என்னிடம் எதை எதிர்ப்பாக்கிறார்கள் என தெரியவில்லை
“என்னிடம் அவர்கள் எதைப் பார்க்கிறார்கள் என்று எனக்குத் தெரியவில்லை. அதற்கு அவர்கள்தான் பதில் சொல்ல வேண்டும். பெண்களே என்னிடம் வந்து, ‘திருமணம் செய்து கொள்வோமா’ என்று கூறுவார்கள்” என மோரு மியா நகைப்புடன் தெரிவித்துள்ளார்.
தன்னை திருமணம் செய்து கொள்ள முன்வந்த பெண்களில் பலர் தன்னைவிட வயதில் மூத்தவர்கள் என்றும் அவர்களின் திருமணக் கோரிக்கையை நிராகரிப்பது அவர்களை அவமதிப்பதாக செயலாக இருக்கும் எனக் கருதி அவர்களின் விருப்பத்தை மனதார ஏற்றுக்கொண்டு அவர்களையும் ஏற்றுக்கொண்டேன் என கூறியுள்ளார்.
தான் ஒருபோதும் திருமண பேச்சை தொடங்கியதில்லை என்றும், 21 பேர் தாங்களாகவே முன் வந்து எனக்கு வாழ்க்கை துணை வேண்டும் என்று கோரிக்கை வந்ததாகவும் அவர் கூறியுள்ளார்.
ஒரே அறையில் 21 மனைவிகளுடன்
21 மனைவிகள் இருந்தாலும் மோரு மியாவின் வாழ்க்கை மிகவும் எளிமையானதாகவே இருப்பதாக கூறப்படுகிறது. ஒரே ஒரு சிறிய அறை கொண்ட வீட்டில் தான் வசித்து வருவதும் பிச்சை எடுப்பதையே தனது முக்கிய வருமானமாகக் கொண்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
தினசரி வாழ்க்கையில் மாறி மாறி பங்கு
அவரது தினசரி வாழ்க்கையிலும் மனைவிகள் மாறி மாறி பங்கேற்பதாக கூறப்படுகிறது. ஒவ்வொரு நாளும் ஒரு மனைவி அவருடன் பிச்சை எடுக்கச் செல்வதாகவும், பின்னர் அடுத்த மனைவிக்கு அந்த வாய்ப்பு வழங்கப்படுவதாகவும் அவர் பெருமிதத்துடன் கூறியுள்ளார்.
செய்தியாளர்கள் அவரது 21 மனைவிகளின் பெயர்களைக் கேட்டபோது, அவரால் சிலரது பெயர்களை மட்டுமே நினைவுகூர முடிந்ததாக கூறப்படுகிறது.
ஷீலா, நர்கிஸ், செலினா, ஆலியா, தாரா, ஜோத்ஸ்னா, ராபியா, பருல் என சில பெயர்களை அவர் குறிப்பிட்டுள்ளார். இத்தனை மனைவிகள் இருப்பதால் அனைவரின் பெயர்களையும் நினைவில் வைத்துக்கொள்வது மிகவும் கடினமாக இருப்பதாக அவரே ஒப்புக்கொண்டுள்ளார்.
மோரு மியாவின் பேட்டி தொடர்பான வீடியோக்கள் சமூக வலைதளங்களில் பரவியதைத் தொடர்ந்து, இணையவாசிகள் பல்வேறு கருத்துகளை பதிவிட்டு வருகின்றனர்.
சிலர் அவரது வாழ்க்கையை ஆச்சரியத்துடனும், சிலர் நகைச்சுவையாகவும் அணுகியுள்ளனர். 21 மனைவிகளைக் கொண்ட ஒருவர், பிச்சை எடுத்து தனது வாழ்க்கையை எப்படி சமாளிக்கிறார் அது எப்படி திமிங்கலம் என்றும்பல்வேறு கேள்வி கனைகளை எழுப்பி வருகின்றனர்.
இணையதளத்தில் பரபரப்பாக பேசப்படும் பிச்சைக்காரர்
அதே நேரத்தில், சிலர் இந்த சம்பவத்தை வேறு கோணத்தில் பார்க்க வேண்டும் எனக் கூறியுள்ளனர். சமூகத்தால் புறக்கணிக்கப்பட்ட அல்லது திருமணம் நடைபெறாமல் இருந்த பெண்களுக்கு மோரு மியா ஒரு வாழ்க்கையை அளித்து இருந்திருக்கலாம் என்றும் சில இணையவாசிகள் கருத்து தெரிவித்துள்ளனர்.
ஒருவர், “அவர்கள் ஒரு ஆணின் பெயரையும் வாழ்க்கைக்கான நம்பிக்கையையும் விரும்பியிருக்கலாம். சமூகத்தால் நிராகரிக்கப்பட்ட பெண்களை அவர் ஏற்றுக்கொண்டிருக்கலாம். அந்த கோணத்தில் இந்த சம்பவத்தை பாருங்கள்” என பதிவிட்டுள்ளார்.
மோரு மியாவை நகைச்சுவையாக பாராட்டிய மற்றொரு இணையவாசி, “பெண்களை கவரும் இவரது திறனை ஆய்வு செய்ய வேண்டும்” என பதிவிட்டுள்ளார்.
மற்றொருவர், “இது வங்காளதேசத்தில் மட்டுமே சாத்தியம் போல இருக்கிறது” எனக் குறிப்பிட்டுள்ளார்.
21 திருமணங்கள், ஒரே அறை கொண்ட வீடு, பிச்சை எடுக்கும் வாழ்க்கை, மனைவிகளின் பெயர்களையே மறந்த நிலை என மோரு மியாவின் வித்தியாசமான வாழ்க்கைக் தற்போது இணையத்தில் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.