📅 Saturday, 10 October 2026 IST | புரட்டாசி 24, பராபவ வருடம்
Tamilzha Alt Logo Text சார்பற்ற நடுநிலைச் செய்திகள்
முக்கிய செய்திகள்
Cinema October 10, 2026 06:04 AM

நவநீதம் பிள்ளைக்கு அமைதிக்கான நோபல் பரிசு: முதல்வர் விஜய் வாழ்த்து

நவநீதம் பிள்ளைக்கு அமைதிக்கான நோபல் பரிசு: முதல்வர் விஜய் வாழ்த்து

நவநீதம் பிள்ளை, விஜய்

சென்னை: 2026-ஆம் ஆண்டின் அமைதிக்கான நோபல் பரிசுக்குத் தெரிவு செய்யப்பட்டுள்ள தென்னாப்பிரிக்காவாழ் தமிழ் வம்சாவளியைச் சேர்ந்த நவநீதம் பிள்ளைக்கு முதல்வர் விஜய் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்ட சமூக வலைதளப் பதிவில், ‘சர்வதேச அளவில் மனித உரிமைகளுக்காகவும், உலக அமைதிக்காகவும், நீதிக்காகவும் அயராது குரல் கொடுத்துவருபவரும், தென்னாப்பிரிக்காவாழ் தமிழ் வம்சாவளியைச் சேர்ந்தவருமான நவநீதம் பிள்ளை, 2026-ஆம் ஆண்டின் அமைதிக்கான நோபல் பரிசுக்குத் தெரிவு செய்யப்பட்டுள்ளமைக்கு எனது மனமார்ந்த வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

தென்னாப்பிரிக்க மண்ணில் இனவெறிக்கு எதிரான சட்டப் போராட்டத்தின் வழியே தனது பயணத்தைத் தொடங்கி, அந்நாட்டின் உயர்நீதிமன்ற நீதிபதியாகவும், ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் உயர் ஆணையராகவும் பதவி வகித்த நவநீதம் பிள்ளை, அமைதி மற்றும் சர்வதேச சட்டத்தை மேம்படுத்துவதற்காக மேற்கொண்ட முன்னெடுப்புகளுக்காக அவருக்கு நோபல் பரிசு அறிவிக்கப்பட்டிருப்பது உலகெங்கும் வாழும் தமிழ் மக்களுக்கு மட்டற்ற மகிழ்ச்சியையும், பெருமிதத்தையும் அளிக்கிறது.

மனித உரிமைகள், சமத்துவம், நீதி மற்றும் உலக அமைதி ஆகிய உயரிய விழுமியங்களுக்காக அயராது பாடுபட்டுவரும் நவநீதம் பிள்ளைக்கு மீண்டும் எனது வாழ்த்துகள்’ எனத் தெரிவித்துள்ளார்.