📅 Saturday, 03 October 2026 IST | புரட்டாசி 17, பராபவ வருடம்
Tamilzha Alt Logo Text சார்பற்ற நடுநிலைச் செய்திகள்
முக்கிய செய்திகள்
Cinema October 03, 2026 09:03 AM

மதுராந்தகம் தொகுதி கிராமங்களில் முதல்வர் விஜய் ரோடு ஷோ: வயலில் டிராக்டர் ஓட்டி பிரசாரம்

மதுராந்தகம் தொகுதி கிராமங்களில் முதல்வர் விஜய் ரோடு ஷோ: வயலில் டிராக்டர் ஓட்டி பிரசாரம்

சென்னை: மதுராந்தகம் தொகுதி, த.வெ.க., வேட்பாளர் மரகதம் குமரவேலுக்கு ஆதரவாக, அக்கட்சியின் தலைவரும், முதல்வருமான விஜய், நேற்று மாமண்டூர் முதல் மதுராந்தகம் வரை, 'ரோடு ஷோ' நடத்தி ஓட்டு சேகரித்தார்..

மதுராந்தகம், தாராபுரம் சட்டசபை தொகுதிகளில், வரும் 6ம் தேதி இடைத்தேர்தல் நடக்கிறது. கடந்த மாதம் 25ம் தேதி மதுராந்தகத்திலும், 30ம் தேதி தாராபுரத்திலும், முதல்வர் விஜய் பிரசாரம் செய்தார். நேற்று இரண்டாவது முறையாக, மதுராந்தகம் தொகுதியில், விஜய் பிரசாரம் செய்தார். பிற்பகல், 2:30 மணியளவில், மாமண்டூரில் இருந்து திறந்த வாகனத்தில், விஜய் ரோடு ஷோ சென்றார். அவருடன், மதுராந்தகம் தொகுதி த.வெ.க., வேட்பாளர் மரகதம் குமரவேல் இருந்தார். மொத்தம், 35 கிராமங்கள் வழியாக, முதல்வர் விஜய் பிரசார வாகனத்தில் நின்றபடி சென்று, ஓட்டு சேகரித்தார்.

ஒவ்வொரு இடத்திலும், சாலையின் இரு பக்கமும் திரண்டிருந்த, த.வெ.க., தொண்டர்கள், விஜய் மீது மலர்களை துாவி உற்சாகமாக வரவேற்றனர். வாகனத்தின் முன், இரு பக்கமும் முண்டியடித்தபடி இளைஞர்கள் ஓடி வந்தனர். ரோடு ஷோவின் போது, த.வெ.க., கொடி, வேல், வீர வாள் என விதவிதமான பொருட்களை, தொண்டர்கள் விஜயிடம் போட்டி போட்டுக் கொண்டு கொடுத்தனர். அவற்றை உற்சாகத்துடன் விஜய் பெற்றுக் கொண்டார். மகனுடன் இருக்கும் புகைப்படத்தை, விஜய் உயர்த்தி காட்டி மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார்.

வாகனத்துடன் ஓடோடி வந்த, தொண்டர் ஒருவர், விஜய்க்கு மாலை போட்டே ஆக வேண்டும் என்று போராடினார். இதை கவனித்த விஜய், 'மாலையை துாக்கிப் போடு, நான் பிடித்துக் கொள்கிறேன்' எனக்கூறி அவரின் ஆசையை நிறைவேற்றினார். மாலையை பெற்றுக் கொண்டதும், இப்போது சந்தோஷமா நண்பா' என கேட்டு, பெருவிரலை உயர்த்தி காட்டினார்.

எல்.எண்டத்துார் கிராமத்தின் வழியே சென்ற போது, திடீரென, வாகனத்தில் இருந்து கீழே இறங்கி, டீக்கடைக்கு சென்றார். அங்கு போடப்பட்டிருந்த பெஞ்சில் அமர்ந்து, டீ குடித்தபடி, அங்கிருந்தவர்களிடம் உரையாடினார். விஜய் பிரசாரத்தின் போது சில இடங்களில், பா.ம.க., கொடியுடன் சிலர் வந்திருந்தனர்.

ராமாபுரம் கிராமத்திற்கு வந்தபோது, திடீரென இறங்கிய விஜய், அங்கு வயலில் உழுது கொண்டிருந்த டிராக்டரை சிறிது துாரம் ஓட்டினார். விவசாயிகள், விவசாய தொழிலாளர்களிடம் உரையாடினார். வழியில் சக்கர நாற்காலியில் இருந்த, மாற்றுத்திறனாளிகளை கண்டதும், கீழே இறங்கி அவர்களின் குறைகளை விஜய் கேட்டறிந்தார்.

மேல்மருவத்துார் ஆதிபராசக்தி கோவில் அருகே வந்த போது, ஆதிபராசக்தி சித்தர் பீடத்தின் அறங்காவலர் அன்பழகன், விஜய்க்கு, சிவப்பு துண்டு அணிவித்து, ஆதிபராசக்தி சிலை மற்றும் பிரசாதங்களை வழங்கினார். சோத்துப்பாக்கத்திற்கு வந்த போது தொண்டர் ஒருவர் கொடுத்த, எம்.ஜி.ஆர்., தொப்பியை அணிந்து, விஜய் போஸ் கொடுத்தார்.

விஜய் சென்ற வாகனத்திற்கு மேலே, 'ட்ரோனில்' த.வெ.க., கொடி பறக்க விடப்பட்டது. மாமண்டூரில் இருந்து, 35 கிராமங்களின் வழியாக 4 மணி நேரத்திற்கும் மேலாக, திறந்த வாகனத்தில் சென்று ஓட்டு சேகரித்த விஜய், மதுராந்தகத்தில் பிரசாரத்தை நிறைவு செய்தார்.