Baththa Day 2 Box Office: காந்தி ஜெயந்தி கலெக்ஷனை அள்ளிய பத்தா.. 2வது நாள் வசூலில் நல்ல முன்னேற்றம்!
சென்னை: ரத்தம் தெறிக்க தெறிக்க ரவுடி கதையோ, பெண் குழந்தைகளுக்கு ஆபத்து வருவது போன்ற கஷ்டமான கதையாகவோ இல்லாமல் ஒரு ஃபீல் குட் ரவுடி படத்தை கையில் எடுத்து இயக்குநர் பாலாஜி தரணிதரன் இயக்கியுள்ள நிலையில், தமிழ் சினிமா ரசிகர்கள் விடுமுறை தினமான காந்தி ஜெயந்தி அன்று பத்தா படத்துக்கு படையெடுத்துள்ளனர்.
முதல் நாள் வசூலை விட 2 மடங்காக 2வது நாள் வசூல் அதிகரித்துள்ளதாக பாக்ஸ் ஆபீஸ் வட்டாரங்கள் தகவல் தெரிவித்துள்ளன. இந்த வாரம் பத்தா மற்றும் சிக்மா உள்ளிட்ட படங்களுக்கு இடையே தான் வசூலில் மோதல் என்கின்றனர்.
விஜய் சேதுபதி மற்றும் அந்த சிறுவன் சாய் நடிப்பை ஒட்டுமொத்த ரசிகர்களும் பாராட்டி வருகின்றனர். பத்தா படம் 2 நாட்களில் எவ்வளவு கல்லா கட்டியிருக்கிறது என்பது குறித்து இங்கே பார்க்கலாம் வாங்க..
பத்தா 2 நாள் வசூல்: பிரியா அட்லீ தயாரிப்பில் பாலாஜி தரணிதரன் இயக்கத்தில் விஜய் சேதுபதி, லிஜோமோல் ஜோஸ், சாய், அஜய் கோஷ் உள்ளிட்ட பலர் நடித்த பத்தா படத்துக்கு சாய் அபயங்கர் இசையமைத்து லட்டு போன்ற பாடல்களையும் கொடுத்த நிலையில், தியேட்டரில் பல காட்சிகள் அருமையாகவே அமைந்தன. பத்தா திரைப்படத்தின் முதல் நாள் வசூல் 1.5 கோடியாக இருந்த நிலையில், 2வது நாளில் காட்சிகள் சற்று குறைந்த நிலையிலும், 2.70 கோடி வசூலை ஈட்டியுள்ளது. 2 நாட்களில் ஒட்டுமொத்தமாக பத்தா திரைப்படம் 4.2 கோடி வசூலை கடந்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
டிக்கெட் புக்கிங் அதிகரிப்பு: இந்த வாரம் வெளியான படங்களிலேயே நல்ல படம் என்றால் அது பத்தா தான் என ரசிகர்கள் கொண்டாடி வரும் நிலையில், சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளிலும் பத்தா படத்துக்கு டிக்கெட் புக்கிங் அதிகரித்துள்ளது. ஆனால், பல படங்கள் போட்டி காரணமாகவே பெரிதாக வசூல் செய்யவில்லை என்றும் சனி, ஞாயிறு அதிக வசூலை ஈட்டினால் தான் பத்தா பந்தயம் அடிக்கும் என்கின்றனர்.