மதுராந்தகம், தாராபுரம் இடைத்தேர்தல்: அக்டோபர் 6
மதுராந்தகம், தாராபுரம் இடைத்தேர்தல்: அக்டோபர் 6-இல் பொது விடுமுறை
மதுராந்தகம், தாராபுரம் ஆகிய சட்டப்பேரவை தொகுதிகளில் வாக்காளர்களாக பதிவு செய்யப்பட்டுள்ள அரசு ஊழியர்களுக்கு அக்டோபர் 6 அன்று ஊதியத்துடன் கூடிய விடுமுறை வழங்க வேண்டும் என தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
Published : September 19, 2026 at 9:00 PM IST
சென்னை: மதுராந்தகம், தாராபுரம் இடைத்தேர்தலை முன்னிட்டு வரும் அக்டோபர் 6 ஆம் தேதி அன்று பொது விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாடு சட்டப்பேரவைக்கு உட்பட்ட மதுராந்தகம் (தனி), தாராபுரம் (தனி) ஆகிய சட்டப்பேரவை தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் வரும் அக்டோபர் 6 ஆம் தேதி நடைபெற உள்ள நிலையில், அன்றைய தினம் பொதுவிடுமுறை அறிவித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
இதுதொடர்பாக தமிழ்நாடு அரசின் பொதுத்துறை சார்பில் அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. அதில், "1881 பேச்சுவார்த்தை ஆவணங்கள் சட்டம் பிரிவு 25 இன் விளக்கத்தின் கீழும், மத்திய உள்துறை அமைச்சகம் 1957 ஜூன் 8 அன்று வெளியிட்ட அறிவிப்பின் அடிப்படையிலும், அக்டோபர் 6 ஆம் தேதி பொதுவிடுமுறை நாளாக அறிவிக்கப்படுகிறது" என தெரிவிக்கப்பட்டுள்ளது.
தொடர்ந்து, "செங்கல்பட்டு மாவட்டம், மதுராந்தகம் (தனி) சட்டப்பேரவை தொகுதியிலும், திருப்பூர் மாவட்டம், தாராபுரம் (தனி) சட்டப்பேரவை தொகுதியிலும் வரும் அக்டோபர் 6 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. ஆகையால், மேற்கண்ட இரு சட்டப்பேரவை தொகுதிகளுக்கு உட்பட்ட பகுதிகளில் அக்டோபர் 6 ஆம் தேதி அன்று அனைத்து அரசு அலுவலகங்களும் மூடப்பட்டிருக்கும். மேலும், அரசு தொழில் நிறுவனங்கள், அரசு கட்டுப்பாட்டில் உள்ள நிறுவனங்கள் மற்றும் அனைத்து கல்வி நிறுவனங்களுக்கும் விடுமுறை அளிக்கப்படும்" என்று் அந்த அரசாணையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஊதியத்துடன் விடுமுறை
மேலும், "செங்கல்பட்டு மற்றும் திருப்பூர் மாவட்டங்கள் மட்டுமின்றி, அண்டை மாவட்டங்களில் பணிபுரியும் ஊழியர்களில் மதுராந்தகம், தாராபுரம் ஆகிய சட்டப்பேரவை தொகுதிகளில் வாக்காளர்களாக பதிவு செய்யப்பட்டுள்ளவர்களுக்கும் அக்டோபர் 6 ஆம் தேதி ஊதியத்துடன் கூடிய விடுமுறை வழங்க வேண்டும்" என தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
இதன் மூலம் பணியிடங்கள் வேறு மாவட்டங்களில் இருந்தாலும், இடைத்தேர்தல் நடைபெறும் தொகுதிகளில் வாக்காளர்களாக உள்ள ஊழியர்கள் தங்களது வாக்குகளை செலுத்துவதற்கு வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது.