சென்னை விமான நிலைய நிர்வாகத்தை மாற்ற தமிழ்நாடு அரசு கோரிக்கை? தமிழச்சி தங்கபாண்டியன் எதிர்ப்பு
சென்னை விமான நிலைய நிர்வாகத்தை மாற்ற தமிழ்நாடு அரசு கோரிக்கை? தமிழச்சி தங்கபாண்டியன் எதிர்ப்பு
தமிழ்நாட்டின் பொதுச் சொத்துகளை தனியார் நலன்களுக்காக தாரை வார்க்கும் எந்த முயற்சியையும் எதிர்த்து திமுக குரல் கொடுக்கும் என எம்.பி. தமிழச்சி தங்கபாண்டியன் தெரிவித்துள்ளார்.
Published : September 19, 2026 at 1:49 PM IST
சென்னை: விமான நிலைய நிர்வாகத்தை மாற்ற தமிழக அரசு கோரிக்கை விடுத்துள்ளதாக வெளியாகியுள்ள தகவலுக்கு எம்.பி. தமிழச்சி தங்கபாண்டியன் எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.
சென்னை விமான நிலையத்தின் செயல்பாடுகளை மேம்படுத்தும் வகையில், தற்போது நிர்வகித்து வரும் இந்திய விமான நிலைய ஆணையத்துக்கு (AAI) பதிலாக வேறு நிறுவனத்தை நியமிக்க வேண்டும் என தமிழ்நாடு அரசு, மத்திய அரசிடம் கோரிக்கை விடுத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
விமான நிலைய நிர்வாகத்தை மாற்றம்?
இது தொடர்பாக முதலமைச்சர் ஜோசப் விஜய், பிரதமர் நரேந்திர மோடிக்கு கடந்த ஆகஸ்ட் மாதம் கடிதம் அனுப்பியுள்ளதாகவும் கூறப்படுகிறது. தமிழ்நாட்டில் தொழில் மற்றும் முதலீடுகளுக்கு உகந்த சூழலை உருவாக்க அரசு தொடர்ந்து நடவடிக்கை மேற்கொண்டு வருவதால், அதற்கு ஏற்ற வகையில் சென்னை விமான நிலையத்தின் நிர்வாகமும் சிறப்பாக இருக்க வேண்டும் என அந்தக் கடிதத்தில் வலியுறுத்தப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
சென்னை விமான நிலையத்தில் பயணிகள் எண்ணிக்கை, விமானங்களின் இயக்கம் மற்றும் சரக்கு கையாளுதல் உள்ளிட்ட அம்சங்களில் மேலும் முன்னேற்றம் தேவைப்படுவதாக தமிழ்நாடு அரசு சுட்டிக் காட்டியுள்ளதாக கூறப்படுகிறது. தொழில் வளர்ச்சியை ஊக்குவிக்கும் மாநிலத்துக்கு அதற்கேற்ற நவீன மற்றும் திறமையான விமான நிலையம் அவசியம் என்பதால், நிர்வாகத்தை மாற்ற வேண்டும் என்ற கோரிக்கை முன் வைக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இந்த நடவடிக்கை, சென்னை விமான நிலையத்தை தனியார் நிர்வாகத்துக்கு மாற்றுவதற்கான முயற்சியின் ஒரு பகுதியாக பார்க்கப்படுகிறது. காஞ்சிபுரம் மாவட்டம் பரந்தூரில் புதிய விமான நிலையம் அமைக்கும் திட்டம் கைவிடப்பட்டு, தற்போதுள்ள சென்னை விமான நிலையத்தை விரிவுபடுத்த அரசு முடிவு செய்துள்ள நிலையில், இந்தக் கோரிக்கை முன்வைக்கப்பட்டுள்ளது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
விமான நிலைய பராமரிப்பு, புதிய நகரங்களுக்கு விமான இணைப்பு மற்றும் பயணிகளுக்கான வசதிகள் குறைவாக உள்ளதாகவும், உள் கட்டமைப்பு பணிகள், டி 3 முனையத்தின் கட்டுமானப் பணிகள் தாமதம் உள்ளிட்டவைகளை நீக்க நிர்வாக முறையை மாற்ற வேண்டும் என தமிழ்நாடு அரசு, மத்திய அரசிடம் கேட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
சென்னை விமான நிலையத்தை நிர்வகித்து வரும் இந்திய விமான நிலையங்கள் ஆணையத்தை (AAI) மாற்றி, வேறு ஆபரேட்டரைக் கொண்டு வர வேண்டும் என மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள், மாண்புமிகு பாரத பிரதமர் அவர்களுக்கு கடிதம் எழுதியுள்ளதாக @the_hindu செய்தி வெளியிட்டுள்ளது.சென்னை விமான நிலைய… pic.twitter.com/uLldGyf9Uw
மத்திய அரசிற்கு துணை போகிறதா தமிழ்நாடு அரசு
இது குறித்து திமுக மக்களவை உறுப்பினர் தமிழச்சி தங்கபாண்டியன் வெளியிட்டுள்ள சமூகவலைதள பதிவில், “சென்னை விமான நிலையத்தை நிர்வகித்து வரும் இந்திய விமான நிலையங்கள் ஆணையத்தை (AAI) மாற்றி, வேறு ஆபரேட்டரை கொண்டு வர வேண்டும் என முதலமைச்சர் விஜய், பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதியுள்ளதாக செய்தி வெளியாகியுள்ளது.
சென்னை விமான நிலைய செயல்பாட்டில் உள்ள குறைபாடுகளைச் சரி செய்ய மத்திய அரசிடம் உரிய அழுத்தம் கொடுப்பதற்குப் பதிலாக, AAI-யை மாற்றி வேறு ஆபரேட்டரை கொண்டு வர வேண்டும் என முதலமைச்சர் கோருவது ஏன்? விமான நிலையத்தை தனியார்மயமாக்கும் மத்திய அரசின் முயற்சிக்கு தமிழ்நாடு அரசு துணை நிற்கிறதா என்ற கேள்வி எழுகிறது.
பரந்தூர் விமான நிலையத் திட்டத்தை கைவிட்டதாக அறிவித்து விட்டு, மறுபுறம் இருக்கும் சென்னை விமான நிலையத்தின் நிர்வாகத்தை தனியாரிடம் ஒப்படைக்க முயல்வது குறித்து முதலமைச்சர் விஜய், தமிழ்நாடு மக்களுக்கு வெளிப்படையான விளக்கம் அளிக்க வேண்டும்.
தமிழ்நாட்டின் பொதுச் சொத்துகளை தனியார் நலன்களுக்காக தாரை வார்க்கும் எந்த முயற்சியையும் எதிர்த்து திமுக குரல் கொடுக்கும்” என குறிப்பிட்டுள்ளார்.