📅 Sunday, 27 September 2026 IST | புரட்டாசி 11, பராபவ வருடம்
Tamilzha Alt Logo Text சார்பற்ற நடுநிலைச் செய்திகள்
முக்கிய செய்திகள்
Health September 27, 2026 05:04 PM

மக்கள் ஒன்றுகூடி மகிழ்வதற்காக இலவச உணவு விநியோகிக்கும் சிங்கப்பூரர்

மக்கள் ஒன்றுகூடி மகிழ்வதற்காக இலவச உணவு விநியோகிக்கும் சிங்கப்பூரர்

சிங்கப்பூரரான ஙோ ஷியான் பாங்கின் ஒரே நோக்கம், மக்கள் ஒன்றுகூடி மகிழ்ச்சியாக இருக்க வேண்டும். அவர்களிடையே கம்போங் மனப்பான்மையைக் கொண்டு வர வேண்டும்.

இதற்காகவே அவர் இலவச உணவை விநியோகித்து மக்களை ஒருங்கிணைத்து வருகிறார்.

இம்மாதம் 19ஆம் தேதி ஈசூனில் உள்ள புளோக்கின் வெற்றுத் தளத்தில் அத்தகைய நிகழ்ச்சிக்கு அவர் ஏற்பாடு செய்திருந்தார்.

அங்கு பாய்கள் விரிக்கப்பட்டிருந்தன. மாஜோங் பலகைகள் வைக்கப்பட்டிருந்தன. இளையர்கள் உட்பட பலர் அங்கு கூடியிருந்தனர்.

அப்போது தற்காலிகமாக அமைக்கப்பட்டிருந்த சமையல் கூடத்திலிருந்து சுடச்சுட சீஸ் பீட்சா அவர்களுக்கு வழங்கப்பட்டது. முன்பின் அறிமுகமில்லாத அவர்களிடைய புதிய பிணைப்பு ஏற்பட்டது.

31 வயதான ஙோ ஷியான் பாங், ஈசூன் அவென்யூ 6ல் உள்ள சொங் பாங் சோன் 7ன் வசிப்போர் தொடர்புக் கட்டமைப்பின் இளையர்களுக்கான இடமான ‘சாப் கம்யூனிட்டி’ என்ற அமைப்புடன் இணைந்து இந்த பீட்சா விருந்தை ஏற்பாடு செய்தார்.

இது, ‘கம்போங் சூப் கிச்சன்’ என்ற திட்டத்தின்கீழ், மே மாதம் முதல் ஙோ ஏற்பாடு செய்துள்ள ஆறாவது சமூக நிகழ்ச்சியாகும்.

உணவு, பிற தயாரிப்புச் செலவுகளில் பெரும்பாலானவற்றை, ‘லியான்ஹ சாவ்பாவ்’ புகைப்பட செய்தியாளரான ஙோ ஏற்றுக்கொண்டார். அவர் தனது சேமிப்பிலிருந்து சுமார் 2,800 வெள்ளியை இந்த நல்ல நோக்கத்திற்காகச் செலவிட்டுள்ளார்.

இவையும் உங்களுக்குப் பிடிக்கலாம்

சுருட்டை முடி, தலையில் துணிப்பட்டையுடன் சுறுசுறுப்பான மனப்பான்மையைக் கொண்ட இவர், ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்சிடம் பேசியபோது, மக்கள் மகிழ்ச்சியாக இருப்பதைப் பார்க்க விரும்புவதாகத் தெரிவித்தார்.

மே 30 அன்று நடைபெற்ற தனது முதல் நிகழ்ச்சி இணையத்தில் அதிவேகமாகப் பரவும் என்று அவர் சற்றும் எதிர்பார்க்கவில்லை. அப்போது அவர், தெம்பனிஸ் புளோக்கின் வெற்றுத் தளத்தில் ஏறக்குறைய 50 பேருக்குக் கோழிச் சாறு, மசாலா சேர்க்கப்பட்ட பூசணி, கேரட் சூப் ஆகியவற்றை இலவசமாகச் சமைத்து வழங்கினார்.

ஒரு தனிமனிதனின் யோசனை, தற்போது மாதாந்தர சமூகத் திட்டமாக வளர்ந்துள்ளது.

தெம்பனிஸ், ஈசூனில் உள்ள பல்வேறு வசிப்போர் தொடர்புக் கட்டமைப்புகள் அவருக்கு இலவச இடங்களை வழங்குகின்றன.

பல தொண்டூழியர்களும் சமையல், விநியோகிப்புப் பணிகளில் உதவி செய்கின்றனர்.

சூப் மட்டுமன்றி ஐஸ்கிரீம், பீட்சா, சுட்டு சமைக்கப்பட்ட இறைச்சி, சாத்தே போன்றவையும் அவரது இலவச உணவுப் பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ளன.

இக்காலத்தின் நவீன சமூகம், சமூக ஊடகங்களாலும் தொழில்நுட்பங்களாலும் இணைக்கப்பட்டுள்ளது.

ஆனால் உண்மையில் மக்கள் அதிக தனிமையை உணர்கிறார்கள்.

காலப்போக்கில் சமூக நிகழ்வுகள் குறைந்துவிட்டதாகத் தோன்றுவதால், சிங்கப்பூரில் தனக்கு ஒருவித தனிமை உணர்வு ஏற்பட்டுள்ளதாக ஙோ கூறினார்.