📅 Monday, 14 September 2026 IST | ஆவணி 29, பராபவ வருடம்
Tamilzha Alt Logo Text சார்பற்ற நடுநிலைச் செய்திகள்
முக்கிய செய்திகள்
Latest News September 14, 2026 05:30 AM

மாணவர்களுக்குத் தன்னம்பிக்கை ஊட்டிய ‘தமிழே, அழகே!’

மாணவர்களுக்குத் தன்னம்பிக்கை ஊட்டிய ‘தமிழே, அழகே!’

தெளிவுற, தன்னம்பிக்கையுடன் மாணவர்கள் தமிழில் பேசவும் எழுதவும் வெள்ளிக்கிழமை (செப்டம்பர் 11) ‘தமிழே, அழகே!’ பட்டறை நடைபெற்றது.

தமிழ் அருவி கற்றல் வளத்தின் ஏற்பாட்டில் இப்பட்டறை இரண்டாவது ஆண்டாகத் தேசிய நூலக வாரிய வளாகத்தில் நடைபெற்றது. கிட்டத்தட்ட 50 தொடக்கநிலை, உயர்நிலை மாணவர்கள் இதில் கலந்துகொண்டனர்.

வீட்டில் தமிழ்ப் பேசாத மாணவர்கள், பெற்றோர் இருவரும் தமிழர்கள் அல்லாத மாணவர்கள் ஆகியோர் இவ்வாண்டின் பட்டறையில் முதல்முறையாகக் கலந்துகொண்டது குறிப்பிடத்தக்கது என்று தெரிவித்தார் பட்டறையை வழிநடத்திய ஒளிபரப்பு ஊடகவியலாளர் இலக்கியா செல்வராஜி.

“இந்தப் பட்டறைக்கு வரக்கூடிய மாணவர்கள் இங்கிருந்து போகும்போது, அவர்களுக்குத் தமிழ் இயல்பாகவே பேசக்கூடிய ஓர் ஆர்வம் கிடைக்கும்,” என்று அவர் நம்பிக்கை தெரிவித்தார்.

கதைகளைச் சிந்தித்து, அவற்றைத் தமிழில் எழுத முயன்று, மற்ற மாணவர்களுக்கு முன் உரக்கப் படைப்பது, தொடர்கதை சொல்லல் போன்ற அங்கங்கள் பட்டறையில் இடம்பெற்றன.

வீட்டில் மட்டுமல்ல, இந்தப் பட்டறைவழி கற்றுக்கொள்ளும் சில உத்திகளை மாணவர்கள் தங்கள் கட்டுரைகள், வாய்மொழித் தேர்வுகளிலும் பயன்படுத்தலாம் என்றார் இலக்கியா.

“எந்த ஒரு தேர்வு, பள்ளிப் பாடத்திற்கு முயற்சிக்கும் மாணவர் இயல்பாக எப்படிப் பேசலாம், எப்படி எழுதலாம் என்பதற்கு உதவ சில குறிப்புகளை இந்தப் பட்டறை அளிக்கும்,” என்றார் அவர்.

பட்டறையின் அங்கங்களைப் பெரிதும் ரசித்த வெஸ்ட் ஸ்பிரிங் தொடக்கப் பள்ளி மாணவர் தேவேஷ்வர் திருமுருகன், 11, “எனது வாய்மொழித் தேர்வுகளில் சிறப்பாகச் செய்ய விரும்புகிறேன்,” என்று பட்டறைக்கு வந்த காரணத்தைத் தெரிவித்தார்.

இவையும் உங்களுக்குப் பிடிக்கலாம்

சவுத் வியூ தொடக்கப் பள்ளியின் மாணவர் தலைவராக இருக்கும் வெங்கடேஷ் ஹரிணி, 11, மற்ற மாணவர்களுடன் பேசும் தன்னம்பிக்கை பிறந்துள்ளதாகத் தெரிவித்தார்.

“பட்டறையில் நான் பல புதிய நண்பர்களைச் சந்தித்து அவர்கள்முன் தமிழில் பேசுவதால் எனக்கு இப்போது முன்பு போல் கூச்சம் தெரியவில்லை,” என்றார் அவர்.