குடியிருப்புப் பேட்டைகளில் தீபாவளி உணர்வைத் தொடங்கிவைத்த சிண்டா
தீபாவளியை முன்னிட்டு சிண்டா ஒவ்வோர் ஆண்டும் ஏற்பாடு செய்யும் ‘புரொஜெக்ட் கிவ் ஹார்ட்லேண்ட்ஸ்’ முயற்சியின்கீழ் இவ்வாண்டு எட்டுக் குடியிருப்புப் பேட்டைகளில் $460,000க்குமேல் மதிப்புள்ள 2,350 கொண்டாட்ட அன்பளிப்புப் பைகள் வழங்கப்பட்டுள்ளன.
அந்த எட்டுக் குடியிருப்புப் பேட்டைகளில் ஒன்றான பொங்கோலில் ஞாயிற்றுக்கிழமை (அக்டோபர் 11) சிறப்பு நிகழ்ச்சி ஒன்று நடைபெற்றது.
பொங்கோல் 21 சமூக மன்றத்தில் நடந்த நிகழ்ச்சியில் கல்வி, நீடித்த நிலைத்தன்மை, சுற்றுப்புற மூத்த துணை அமைச்சர் டாக்டர் ஜனில் புதுச்சேரி சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டார்.
“சிண்டாவின் ‘புரொஜெக்ட் கிவ்’ திட்டம் இந்தியச் சமூகத்தை மட்டுமன்றி பல்வேறு சமூகப் பங்காளிகளையும் தொண்டூழியர்களையும் ஒன்றிணைக்கிறது.
“அதன்வழி பல்வேறு இளையர்களும் அரசாங்க அமைப்புகளும் இணைந்து சமூகத்திற்குத் தொண்டாற்றுவது மகிழ்ச்சியளிக்கிறது,” என்று அவர் கூறினார்.
நாடாளுமன்ற உறுப்பினர் யோ வான் லிங்கும் டாக்டர் ஜனிலுடன் நிகழ்ச்சியில் கலந்துகொண்டார்.
சமூகத்தினர் உதவி நாட லிட்டில் இந்தியா வரை செல்லும் கட்டாயத்தைக் குறைக்கும் நோக்குடன் ‘புரொஜெக்ட் கிவ் ஹார்ட்லண்ட்ஸ்’ முயற்சி ஐந்தாண்டுகளுக்கு முன்பு தொடங்கியதாகச் சிண்டாவின் தலைமை நிர்வாக அதிகாரி அன்பரசு ராஜேந்திரன் கூறினார்.
“இத்திட்டத்தின்கீழ் உதவி பெறுவோருக்கு அது தற்காலிக உதவியாக மட்டுமே அமைந்துவிடாமலிருக்க அவர்களுக்குச் சிண்டாவின் குடும்பச் சேவை நிலையத்திடமிருந்தும் தொடர் உதவி வழங்கப்படும்.
இவையும் உங்களுக்குப் பிடிக்கலாம்
“ஒவ்வோர் ஆண்டும் ஏறக்குறைய 30,000 தனிநபர்களுக்கு உதவ, சிண்டா கிட்டத்தட்ட 35 மில்லியன் வெள்ளியைச் செலவிட்டு வருகிறது. இனி வரும் காலத்திலும் உதவி தேவைப்படுவோருக்கு சிண்டா நிச்சயம் உதவும்,” என்று அவர் உறுதியளித்தார்.
நிகழ்ச்சியில் பயனாளர்களுக்கு பாஸ்மதி அரிசி, எண்ணெய், முறுக்கு, இனிப்புப் பலகாரங்கள் போன்ற பல்வேறு பொருள்களைக் கொண்ட கொண்டாட்ட அன்பளிப்புப் பைகள் வழங்கப்பட்டன.
அவற்றுடன் கலைப்படைப்புகள், சமூக அமைப்புகளின் நடவடிக்கை அங்கங்கள், அறுசுவை விருந்து ஆகியவையும் நிகழ்ச்சியில் இடம்பெற்றன.
தம்மைப் போன்ற ஒற்றைப் பெற்றோருக்கு அம்முயற்சியும் நிகழ்ச்சியும் பெரிதும் உதவிகரமாக உள்ளதெனக் கூறினார் 29 வயது ஷாலினி ராஜா.
“விழாக்காலத்தின்போது பொருள்கள் வாங்க எங்களுக்கு வழங்கப்படும் பற்றுச்சீட்டுகளும் கொண்டாட்ட அன்பளிப்புப் பைகளும் பெரிதும் உதவுகின்றன. அத்துடன், இத்தகைய நிகழ்ச்சிகள் என் ஆறு வயது மகன் பல புதிய தகவல்களைக் கற்பதற்கான நல்ல தளமாக உள்ளன,” என்றார் அவர்.
இவ்வாண்டிற்கான ‘புரொஜெக்ட் கிவ் ஹார்ட்லண்ட்ஸ்’ திட்டத்தின்கீழ் தோ பாயோ, உட்லண்ட்ஸ், நீ சூன், பொங்கோல், லெங் கீ, தெம்பனிஸ், ஹோங் கா நார்த், ஜூரோங் ஸ்பிரிங் ஆகிய எட்டு வட்டாரங்களைச் சேர்ந்த குடியிருப்பாளர்கள் பயன்பெறுகின்றனர்.
சிண்டாவின் இந்த முயற்சியில் 60க்கும் மேற்பட்ட சமூகப் பங்காளிகளும் இணைந்து செயலாற்றுகின்றன.