‘கதைப்போமா’ நிகழ்ச்சியில் வாழ்வின் அனுபவப் பாடங்களைப் பகிர்ந்த நிபுணர்கள்
தமிழ்மொழியின் அழகையும் அதன் தனித்துவத்தையும் இளைய தலைமுறையினரிடம் கொண்டுசேர்க்கும் நோக்கில், வளர்தமிழ் இயக்கம் நடத்தும் தமிழ் இளையர் விழாவின் ஓர் அங்கமாக ‘கதைப்போமா - வாங்க பேசலாம்’ எனும் உரையாடல் நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டது.
சிங்கப்பூர் கலைப் பள்ளி அரங்கத்தில் கடந்த சனிக்கிழமை (செப்டம்பர் 5) இந்த நிகழ்ச்சி நடைபெற்றது.
‘டெட்’ (TED) எனும் உலகப் புகழ்பெற்ற நவீன மேடைப் பேச்சு பாணியில் அமைக்கப்பட்ட இந்நிகழ்ச்சி, கதைகள் வழியாகக் கருத்துகளைப் பகிர்ந்து, தமிழ் இளையர்களின் மனங்களில் மொழிப்பற்றையும் அடையாள உணர்வையும் விதைப்பதை முதன்மை நோக்கமாகக் கொண்டிருந்தது.
நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்ய உதவிய டாக்டர் அனிதா தேவி பிள்ளை, “பல்வேறு துறைகளைச் சேர்ந்த வல்லுநர்களை ஒன்றிணைத்து, அவர்களின் கருத்துகளை எளிமையான முறையில் பொதுமக்களுக்கு எடுத்துரைக்க இந்த நிகழ்ச்சி உதவ வேண்டும் என்று விரும்பினேன்,” என்றார்.
“சிங்கப்பூரில் பேசப்படும் தமிழ்மொழியில்கூட, ஒவ்வொருவரும் தமிழ் பேசும் முறையில் பல வேறுபாடுகள் உள்ளன என்றும் மொழிநடை மாறுபட்டாலும் அதன் கருப்பொருள் ஒன்றுதான்,” என்றும் சொன்னார் வளர்தமிழ் இயக்க உறுப்பினரும் நன்யாங் தொழில்நுட்பப் பல்கலைக்கழக உதவிப் பேராசிரியருமான டாக்டர் அனிதா.
“நமது மொழியில் உள்ள பன்முகத்தன்மையை வெளிப்படுத்தவும் வெவ்வேறு பாணிகளை ஒன்றிணைக்கவும் இந்த நிகழ்ச்சி ஒரு சிறந்த தொடக்கமாக அமைகிறது. இதுபோன்ற உரையாடல்கள் பரந்த அளவில் மக்களைச் சென்றடையும் தன்மை கொண்டவை. எதிர்காலத்தில் இவை சிங்கப்பூருக்கும் அப்பாற்பட்டு, ஆசிய நாடுகளின் பங்கேற்பையும் உள்ளடக்க வேண்டும் என்பதே என் ஆசை,” என்றார் அவர்.
வெவ்வேறு துறைகளைச் சேர்ந்த மூவர், தமிழ்மொழியையும் சமூகத்தையும் சார்ந்த தங்களது சொந்த வாழ்க்கை அனுபவங்களையும் தங்களது பயணங்களையும் நிகழ்ச்சியில் பகிர்ந்தனர்.
முதலில் பேசிய திரு சுப்ரமணியன் கணேஷ், பன்முகத்தன்மை கொண்ட தமது வாழ்க்கை பற்றியும் அதிலிருந்து தாம் கற்றுக்கொண்ட பாடங்களையும் பகிர்ந்துகொண்டார்.
இவையும் உங்களுக்குப் பிடிக்கலாம்
“வாழ்க்கையில் எனக்குப் பல அடையாளங்கள் உள்ளன. பல்கலைக்கழகத்தில் பொறியியல் படிப்பைத் தொடங்கிய நான், பின்னர் கணக்கியல் துறைக்கு மாறினேன். கணக்காளராகப் பணியாற்றிய காலத்திலேயே மேடை நாடகத் துறையிலும் நடித்து வந்தேன். இதன் மூலம் எனது அலுவலகப் பணியிலும் கலை ஆர்வத்திலும் என்னால் முன்னேற முடிந்தது.
“ஒரு நிறுவனத்தின் தலைமை நிதி அதிகாரியாகப் பணிபுரிந்தபோதே ‘அகம் தியேட்டர்’ நாடகக் குழுவைத் தொடங்கினேன். ஒருவர் தனது வாழ்வாதாரத்தைக் கைவிட்டுவிட்டு, ஆர்வத்தை மட்டுமே தேடி ஓட வேண்டும் என்று நான் கூறவில்லை. மாறாக, வாழ்வின் வெவ்வேறு பரிமாணங்களைச் சமநிலையோடு சமாளிக்கக் கற்றுக்கொள்ள வேண்டும் என்பதே என் கருத்து,” என்றார் திரு கணேஷ்.
‘அகம்’ நாடகக் குழுவின் நிறுவனராகவும் பொதுப் போக்குவரத்து நிறுவனமான டவர் டிரான்சிட்டில் தலைமை நிதி அதிகாரியாகவும் அவர் உள்ளார்.
“மாணவராக இருந்தபோது தமிழ் இலக்கியம் படித்தேன், வீட்டில் தமிழ் பேசவும் செய்தேன். ஆனால், நாடகத் துறைதான் என்னைத் தமிழைப் புதுவிதமாகப் பார்க்க வைத்தது. தமிழ் வழியாகக் கலையை உருவாக்குவது உண்மையிலேயே எனக்கு மிகுந்த மனநிறைவு தருகிறது,” என்று கூறிய திரு கணேஷ், தமிழின் தனிப்பட்ட அழகை வலியுறுத்தினார்.
அவரைத் தொடர்ந்து பேசிய நியமன நாடாளுமன்ற உறுப்பினர் டாக்டர் ஹரேஷ் சிங்கராஜு, தமது வாழ்க்கைப் பயணத்தைப் பகிர்ந்தார்.
“இளையராக இருந்தபோது நான் மன அழுத்தத்தால் பாதிக்கப்பட்டிருந்ததை இப்போது உணர்கிறேன். அப்போது என்னைத் தனியாகத் தவிக்கவிடாமல் என் நண்பர்களும் குடும்பத்தினரும் என்னுடன் இருந்ததற்கு நான் கொடுத்துவைத்திருக்க வேண்டும்.
“என் சகோதரருக்குப் புற்றுநோய் கண்டறியப்பட்டபோது, அந்தக் கடினமான தருணத்தில் மருத்துவப் பணியாளர்கள் எங்கள் குடும்பத்திற்குப் பேராதரவாக இருந்தனர். மற்றவர்களுக்கும் இதேபோன்று ஆதரவாக இருக்க வேண்டும் என்ற எண்ணமே என்னை மருத்துவராக்கியது.
“இக்காலத்தில் நாம் எப்போதும் பணத்தையும் பதவிகளையும் தேடி ஓடிக்கொண்டிருக்கிறோம். ஆனால், அதுமட்டுமே வாழ்க்கையின் இலக்கன்று என்பதை உணரும் ஒரு தருணம் வரும்,” என்று டாக்டர் ஹரேஷ் உருக்கமாகக் கூறினார்.
அவருக்கு அடுத்ததாகப் பேசிய சமையல் வல்லுநர் தேவகி சண்முகம், சிங்கப்பூரின் சமையல் துறையில் தமது பெயரை நிலைநாட்டியவர்.
“நான் சமையற்கலையை முறையாகப் படிக்கவில்லை. என் குடும்பத்தினரைப் பார்த்துதான் கற்றுக்கொண்டேன். இந்த நிலையை அடைவேன் என்று நான் கனவிலும் நினைக்கவில்லை.
“இப்போதும் நான் தொடர்ந்து கற்றுக்கொண்டும் என்னை மாற்றிக்கொண்டும்தான் இருக்கிறேன். நான் இன்னும் பணிவோடு இருக்கிறேன். என் முதிய வயதிலும் வளர்வதற்கான வாய்ப்புகளையே எப்போதும் தேடுகிறேன்,” என்று அவர் கூறினார்.
திருவாட்டி தேவகி, 39 ஆண்டுகளாகச் சமையல் கலைஞராக உள்ளார். அவரது பெயரில் 23 சமையல் புத்தகங்கள் வெளியாகியுள்ளன.